tamilnadu epaper

வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு)-03.04.25

வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு)-03.04.25


  தமிழ்நாடு இ.பேப்பரில் கிவி பழத்தின் பயன்களைப் பற்றி படித்து வியந்துப் போனேன். இந்த பழத்தைப் பற்றியே நான் ஒரு நாலைந்து வருடமாகதான் கேள்விப்பட்டு வருகிறேன். கிவி பழம் ஆஸ்துமாவை சரி செய்யும், எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்றெல்லாம் படித்து வாங்கி சாப்பிட்டுப் பார்த்தேன். அந்தளவுக்கு ருசி என்று சொல்லமுடியாது. ஆனால் இந்த பழத்தால் பலன் அதிகம் என்பதை புரிந்துக்கொண்டேன்.

இன்னொரு விஷயம் ஆஸ்திரேலியாவின் பறக்காத பறவை கிவிக்கும், இதற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை!


  கே. பானுமதி நாச்சியாரின் 'தேனீ' என்ற சிறுகதை எல்லோருக்கும் சேமிப்பு அவசியம் என்பதை உணர்த்தியது. இன்னொரு விஷயம், தேனீக்கள் தனக்காகதான் சேமிக்கிறது. ஆனால் பாவம் அதை மனிதர்களும், கரடிப்போன்ற சில பிராணிகளும் திருடி சாப்பிட்டு விடுகின்றனர்.


  சீர்காழி ஆர். சீதாராமனின் 'ஆதரவுக் கரம்' என்ற சிறுகதை அன்பான இரக்கக்குணமும், நன்றியுணர்வும் இருந்தால் முதியோர் இல்லமே தேவைப்படாது என்பதை உணர்த்தியது.


  'தேனீ', 'ஆதரவுக்கரம்' என்ற இந்த இரண்டு சிறுகதைகளுக்கான ஓவியங்களும் அழகழகாக மனதைக் கவருகின்றன.


  மல்லிகா கோபால் ஒரு அரைப்பக்க கட்டுரையிலேயே இராஜஸ்தான் மாநிலத்தை அதில் பார்க்க வேண்டிய இடங்களை கண்முன்னே கொண்டுவந்துவிட்டார். பயணங்கள் முடிவதில்லை பகுதி வாழ்க்கையில் உல்லாசமாக ஊர் சுற்றிப்பார்க்க வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிறது.


  கோபாலன் மேனியில் வெண்ணெய் அடிக்கும் உற்சாகமான மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால் ஸ்வாமி வெண்ணெய்த் தாழி திருவிழாவைப் பற்றி படித்தபோது, இந்த விழாவுக்கு ஒரு தடவை கட்டாயம் போகவேண்டும் என்று தோன்றியது. இந்த கட்டுரையை எழுதிய எழுத்தாளர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் மன்னார்குடியை சேர்ந்தவர். அதனால் அந்த அனுபவ அழகுடன் கட்டுரையை உயிரோட்டமாக எழுதியிருக்கிறார்.


  தினம் ஒரு தலைவர்கள் வரிசையில் 'துரைச்சாமி'யை பற்றி படித்தபோது, அது மற்ற தலைவர்கள் வாழ்க்கையை விட சோகமாகவும், வருத்தம் தருவதாகவும் இருந்தது. இவர் சின்ன மருதுவின் மகன் என்றதும் ஒரு வியப்பு ஏற்பட்டது. பதினைந்து வயது பையனாக நாடு கடத்தப்பட்ட துரைசாமி, கிழவராக இந்தியா வந்து இறந்த வரலாறு மகா கொடுமை. நினைக்கவே கண் கலங்குகிறது.


-சின்னஞ்சிறுகோபு,

சிகாகோ.