வணக்கம்
02.04.2025 'தமிழ்நாடு இ பேப்பர். காம்' வழக்கம் போல் அனைத்துச் செய்திகளையும் தாங்கிய நாளிதழாக வெளிவந்திருக்கிறது.
திருச்சியில் கட்டப்பட்டு வரும் நூலகத்துக்கு காமராஜர் பெயர் என்று சட்டப்பேரவையில் முதல்வர் தெரிவித்ததற்கு பாராட்டுகள். எல்லா இடங்களிலும் பெரியார், அண்ணா, கலைஞர் என்பதை விடுத்து காமராஜர் பெயரை வைக்க இசைந்திருப்பது பாராட்டுக்குரியது. கல்விக்கண் திறந்து வைத்த காமராஜர் என்று காமராஜரைப் புகழுவோம். அவருக்கு கூடுதல் பெருமை சேர்க்கும் விதமாக பெயர்சூட்ட இருப்பது வரவேற்கத்தக்கது.
இந்தியாவின் விவசாயப் பொருட்கள் மீது 100% வரி என்று அமெரிக்க அதிபர் கூறியிருப்பது அதிகாரத்தின் உச்சம். அங்குள்ள இந்தியர்களின் விவசாயப் பொருட்கள் நுகர்வு குறையும்.
தோவாளை மாணிக்கமாலை, கும்பகோணம் வெற்றிலைக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கி இருப்பது பெருமிதம்.
நடந்தாய் வாழி காவேரி திட்டத்துக்கு நிதிபெற நடவடிக்கை என்று அமைச்சர் துரைமுருகன் கூறி இருப்பது இத்திட்டம் குறித்து இப்போதாவது விழிப்புணர்வு. வந்ததே என்று எண்ணத் தோன்றுகிறது.
தினம் ஒரு தலைவர்கள் வரிசையில் டி. என். தீர்த்தகிரி முதலியார் குறித்த கட்டுரை அன்னாருக்கு பெருமை சேர்த்தது.
குழந்தைகள் கைவண்ணம் பகுதி கட்டுரைகள் குழந்தைகளுக்கான தன்னம்பிக்கை விதையைத் தரும். கைவண்ண ஓவியங்கள் அழகு.
தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் 10% கட்டண உயர்வு என்பது மறுபரிசீலனைக்குரியது. இப்படி ஆண்டுதோறும் உயர்த்தி கொண்டே போவது பயனர்களுக்கு கூடுதல் சுமை.
விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் அருகே இருக்கும் முன்னூர் கிராமம் ஆடவல்லீஸ்வரர் கோவிலில் கிடைத்த திருமலை நாயக்கர் கல்வெட்டு குறித்து இன்னும் விரிவான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.
சீனாவின் ஹுபெய் பகுதியைச் சேர்ந்த 18 வயதுப்பெண் யாங் தான் வேலை பார்க்கும் பர்னிச்சர் கடை கழிவறையில் வாழ்வது அவர் எந்த அளவுக்கு குடும்பத்திற்காக தியாகம் செய்கிறார் என்பதற்கு சான்று. சீன அரசு அவருக்கு குறைந்த வாடகையில் வீடு வழங்க வேண்டும்.
-தாணப்பன் கதிர்
( ப. தாணப்பன் )