தரணி போற்றும் தமிழ் நாடு இ பேப்பரின் ஆசிரியர் அவர்களுக்கும் அங்கு பணிபுரியும் அனைத்து அன்பு சகோதர சகோதரிகளுக்கும் இனிய வணக்கம் !
பிரதமர் மோடி அவர்களின்
ஆர்.எஸ்.எஸ்.தலைமையக விஜயம் பல யூகங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
" மோடி முதுமை அடைந்து வருகிறார். அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதைப் பற்றி விரிவாக பேசுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்கு வந்திருக்கிறார் " என்று
சிவசேனை கட்சி ( உத்தவ் தாக்கரே பிரிவு ) மூத்த தலைவர் சஞ்சய் ராவத்
ஒரு குண்டைத் தூக்கி
போட்டு இருக்கிறார்.
ஆனால் மோடியே நமது பிரதமராக தொடர்வார் என்று மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்நவீஸ் கூறுகிறார்.
பொதுவாக பாஜகவில் 75 வயதுக்கு மேல் உள்ளவர்கள் முக்கிய அரசியல் பதவியை வகிப்பதில்லை என்று எழுதப்படாத சட்டம் இருக்கிறது. ஆனால் மோடி பாஜகவினரிடையே ஒரு அசைக்க முடியாத நபராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்.
இன்று இந்திய அரசியலே பிரதமர் மோடியை சுற்றித் தான் நடைபெறுகிறது. அவரைத் தெரிந்த அளவுக்கு நாட்டு மக்களுக்கு பாஜகவின் மற்ற தலைவர்களை பற்றி தெரிவதில்லை.
இன்னும் சொல்லப்போனால் பிரதமர் மோடி மட்டுமே உலக நாடுகளிடையே இந்தியாவின் அடையாளமாக திகழ்கிறார்.
ஒரு நபர் இரண்டு தடவைக்கு மேல் நாட்டின் அதிபராக இருக்கக் கூடாது என்று அரசியலமைப்பு சட்டத்திலேயே குறிக்கப்பட்டிருந்தும் அந்த சட்டத்தையே திருத்தி மூன்றாவது தடவையாக அதிபராக பதவி வகிக்கும் சில நாட்டு அதிபர்களும் இருக்கிறார்கள்.
பாஜகவின் 75 வயது என்ற எழுதப்படாத சட்டம் திருத்தப்படக்கூடியதே !
பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று !
ஒடிசாவின் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் கின் தனிச் செயலாளராக பணிபுரிந்து அவரது நம்பிக்கையை பெற்ற தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி வி.கே. பாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு மாநில அரசியலில் ஈடுபட்டார். அவர் ஒடிசாவின் மண்ணின் மைந்தராக இல்லை என்ற காரணத்தினால் அவர் அந்த மாநில மக்களால் நிராகரிக்கப்பட்டார்.
அவரைத் தொடர்ந்து அவரது மனைவியும் ஒடிசா மாநில மண்ணின் புத்திரியும்
ஐ ஏ எஸ் அதிகாரியுமான
சுஜாதா ராவுத் கார்த்திகேயனும் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
சுஜாதா பல பல மாவட்டங்களில் ஆட்சியராக இருந்து வியக்கத்தக்க சாதனைகளை புரிந்து இருக்கிறார். மக்கள் நலத்திட்டங்கள் பலவற்றை
அரசியல்வாதிகளுக்கு இணையாக நாடே போற்றும் வகையில் அமல்படுத்தி மக்களின் பேராதரவையும் நன்மதிப்பையும் பெற்றிருக்கிறார்.
அனேகமாக அரசியலில் இறங்குவது தான் அவரது அடுத்த கட்ட நடவடிக்கையாக இருக்கும் என்று யூகிக்கப்படுகிறது.
" ரமலான் விருந்து " சிறுகதை படிக்க ஆவலைத் தூண்டி சிறிதளவும் தொய்வு இல்லாமல் சரளமான நடையில் எழுதப்பட்டிருக்கிறது.
ரமலான் நோன்பின் குறிக்கோளை கதையின் கருவாக கையாண்டு இருக்கிறார் ஆசிரியர்.
பசி அனைவருக்கும் பொதுவானது. அது ஏழை பணக்காரன் என்று பார்ப்பதில்லை. புனித ரமலான் மாதத்தில் ஏழைகளின் தேவையை அறிந்து அதை குறைப்பதற்கு பொருள் உள்ளவர்கள் ஜக்காத்து என்ற நன்கொடையை வாரி வழங்க வேண்டும் என்பதே
இஸ்லாமிய இறை தத்துவம்.
" சமையல் அறை ஸ்பெஷல் " பகுதியில் சத்தான சமையல் வகைகளை அறிமுகப்படுத்தி மக்களுக்கு தொண்டாற்றுகிறது நமது பத்திரிகை.
பிகாரில் லாலு - ராப்ரி தேவி ஆட்சி என்றாலே காட்டாட்சி தான் நினைவுக்கு வருகிறது
என்று மத்திய உள்துறை அமைச்சர் பேசியிருக்கிறார்.
அது காட்டாட்சியாகவே இருந்தாலும் எப்போதோ முடிந்து போன ஒரு நிகழ்வை மீண்டும் மீண்டும் பேசுவது சரியில்லை.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நடைபெறும் வார்த்தைப் போர் உலக பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது.
-வெ.ஆசைத்தம்பி
தஞ்சாவூர்