tamilnadu epaper

வாசகர் கடிதம் (வெ.ஆசைத்தம்பி)-02.04.25

வாசகர் கடிதம் (வெ.ஆசைத்தம்பி)-02.04.25


தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் அவர்களுக்கும் மற்றும் அங்கு பணி புரியும் அனைத்து அன்பு சகோதர சகோதரிகளுக்கும் இனிய வணக்கம் !


திருவண்ணாமலை திரு சண்முகம் அவர்களின் திடீர் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாடு இ பேப்பரில் தொடர்ந்து தனது படைப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்தார். திருவண்ணாமலை பகுதி செய்திகளை ஒரு செய்தியாளரைப் போல நமது பத்திரிகைக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்.


ஒரு மனிதன் அனைவருக்கும் நல்லவனாக அனைவராலும்

விரும்பப்படுபவராக விளங்குவது நடக்காத காரியம். ஆனால் திரு சண்முகம் அவர்கள் எல்லாருக்கும் நல்லவராக விளங்கினார். அவரது ஆன்மா இறைவனது பாதத்தில் இளைப்பாறட்டும்.


அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்திய விவசாய பொருட்களுக்கு 100% வரி விதிக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்.

இந்தியா அமெரிக்க  பொருட்களுக்கு 100% வரி விதிப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

எனவே அவரது 100 சதவிகித வரி விதிப்பு என்பது நியாயமானதே என்பது என் கருத்து.


தங்களது பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகள் அதற்கு அதிக வரி விதிக்கும் போது அவர்களிடமிருந்து பொருட்களை வாங்கும் நாடு குறைவான வரியை விதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படி சரியாகும் ?


திருச்சியில் கட்டப்பட்டு வரும் பல கோடி ரூபாய் பெருமானம் உள்ள நூலகத்துக்கு பெருந்தலைவர் காமராஜரின் பெயரை வைப்பது என்று அரசு முடிவு செய்திருப்பதாக முதலமைச்சர் சட்டசபையில் அறிவித்திருக்கிறார்.


அரசின் சார்பில் கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டிடங்களுக்கும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரையே வைத்துக்கொண்டு வந்த அரசின் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படாமல் இருப்பதற்கு இது ஒரு மாற்று வழியாகும்.


என்னைக் கேட்டால் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் செலவு செய்து ஆங்காங்கே நூலகங்களை அமைக்கும் அதே நேரத்தில் ஆறுகளில் இருந்து வீணாகி கடலில் நீர் வீணாகாமல் தடுப்பதற்கு முடிந்த அளவுக்கு தடுப்பணைகளை கட்டலாம் என்பது தான் என் கருத்து.


நடந்தாய் வாழி காவேரி திட்டத்துக்காக மத்திய அரசின் பங்களிப்பை பெறுவதற்கு ஏற்படுக்கல் செய்யப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் துரைமுருகன் கூறியிருக்கிறார். 

சிங்கார சென்னை என்ற பெயரில் சென்னையில் ஓடும் ஆறுகளையே சுத்தப்படுத்த முயன்று அது அரைகுறையாக நிற்கிறது.

கூவம் மணக்கும் என்றார்கள்.


கூவம் நாறிப்போய்தான்

கிடக்கிறது.  கடந்த கால வரலாற்றை பார்க்கும் போது நீர்நிலைகளை குறிப்பாக ஆறுகளை சுத்தப்படுத்துவதற்காக ஒதுக்கப்படும் பணம் வீண் என்றே தோன்றுகிறது.


தங்கம் வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்துக் கொண்டிருக்கிறது.

அதற்கு காரணம் அமெரிக்காவின் வர்த்தகப் போரினால் சில நாடுகள் தங்களிடம் இருக்கும் அமெரிக்க கரன்சியை விற்றுவிட்டு தங்கத்தை வாங்கி குவிப்பதால் தங்கத்தின் தேவை அதிகாரித்து விலை ஏறுகிறது என்று கூறப்படுகிறது. 


இதன் காரணமாக அமெரிக்க டாலரின் மதிப்பும் குறைந்து கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

இது அதிபர் ட்ரம்பின் அதிரடி வர்த்தக .நடவடிக்கைகளுக்கு கிடைத்த பரிசு ஆகும்.


-வெ.ஆசைத்தம்பி

தஞ்சாவூர்