நமக்குள்ள எதுக்கு நீயா _ நானா போட்டி...வழக்கம் போல் சீட்டு எழுதிப் போட்டு எடுப்போம்...சரியா ?" சிரித்துக் கேட்ட முரளிக்கு, சிரித்தே சம்மதித்தாள் சித்ரா.


செம" />

tamilnadu epaper

விதையாய்

விதையாய்


" நமக்குள்ள எதுக்கு நீயா _ நானா போட்டி...வழக்கம் போல் சீட்டு எழுதிப் போட்டு எடுப்போம்...சரியா ?" சிரித்துக் கேட்ட முரளிக்கு, சிரித்தே சம்மதித்தாள் சித்ரா.


செம வித்யாசமான தம்பதியர். ஒரே ஒரு செல்ல மகள்... கல்யாணமாகி, இரண்டு பிள்ளைகளுடன், கனடா 'கிரீன் கார்டி'ல், செட்டிலாகி விட்டாள்.


இன்று காலையில் தூரத்து உறவில், எண்பது வயதுப் பெண்மணி இறந்து போனார். .இருவரும் சென்றிருந்தனர்.

மனைவியை இழந்த சோகத்தில்,

அந்தப் பெரியவர் கதறி அழுததைப் பற்றி, வீட்டுக்குத் திரும்பி வந்த பின்னரும் பேசினர்.


முரளி _ சித்ரா ஜோடி, சராசரிக்கு மேல்... பொருளாதாரத்தில் மட்டுமல்ல... வாழ்க்கையை நோக்கும் பார்வையிலும், அனுபவிக்கும் நேர்த்தியிலும் தான்...!


" அந்த துஷ்டி வீட்டைப் பத்தி பேசும் போது , எனக்கு ஒரு ஐடியா ..."  


 அப்படியா... என்ன...?"


"ஏதோ ஒரு காரணத்தால் திடுதிப்புன்னு, நான் இறந்து போறேன்னு வச்சுக்க...அதற்குப் பிறகு உன்னோட வாழ்க்கைப் பாதை எப்படி இருக்கும்? இதையே தலைகீழா ... அதாவது நீ இறந்து , நான் தனியாயிட்டா , என்ன பண்ணுவேன்... ? ரெண்டு பேரும் ஒளிவு மறைவில்லாம இத பத்தி ஓப்பனா பேசுவோமே... ஓகேயா ?"


 கேட்டதும் கண நேரம் திகைத்தாள் ...சடடென்று உஷாராகி, குஷியானாள்...


"ஆஹா...உங்க ஐடியா ...சூப்பர் ... சூப்பர் ..." .


 ஆட்டத்தை முதலில் யார் தொடங்கி

வைப்பது என்பதில், 'நீ_ நான்...' என்று கொஞ்ச நேரம் கழிந்தது. அதனால் தான் 'சீட்டுக் குலுக்கல்' யோசனையை முன் வைத்தார் முரளி.


சீட்டுக் குலுக்கி போட்டதில், சித்ராவின் பெயர் வந்தது.


" சபாஷ்...நீ தான் பேட்டிங்... ஸ்டார்ட் பண்ணு சித்ரா.."


எப்படி ஆரம்பிப்பது என்பது தெரியாமல், சற்று குழம்பியிருந்த அவளின், உள் உணர்வைப் புரிந்து கொண்டார். 


" சூடா டீ குடிச்சிட்டு, நிதானமா பேசலாம்...அவசரம் இல்ல ..." அந்த மெல்லிய பதட்ட சூழலை, சரி செய்தார் முரளி.


சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகு, தயக்கம் தீர்ந்து, தெளிவானாள் சித்ரா.


"முதல்ல என் ஸ்கூல் லைஃப்ல நடந்த சம்பவத்தை சொல்லி யாகணும்...

நான் எஸ்.எஸ்.எல்.சி. படிச்சப்போ இந்தி எதிர்ப்புப் போராட்டம்... கல்லூரியில் மட்டுமல்ல...பள்ளி மாணவர்கள் மத்தியிலும் தீவிரமா பரவிச்சு... டேவிட்னு என் கிளாஸ் மேட்...நல்லா படிப்பான்... . மாவட்ட

அளவுல பேச்சுப் போட்டி எங்கு நடந்தாலும், நானும் அவனும் எங்க ஸ்கூல் சார்பா கலந்து ...பரிசையும் தட்டிட்டு வருவோம்...இத வச்சி எங்க ரெண்டு பேருக்குள்ள நல்ல புரிதல் இருந்திச்சு...அப்பா காலேஜ்ல தமிழ் பேராசிரியர் ஆச்சே ... அதனால இந்தி எதிர்ப்பு போராட்டத்துல அவருக்கு ரொம்பவே உடன்பாடு... இது எங்களுக்கு ஒரு விதத்துல வசதியா போச்சு... நானும் அவனும் முழு ஈடுபாட்டோடு, போராட்டத்துல சேர்ந்து நின்னு, வேலை செஞ்சோம் ...ஒரு கட்டத்துல எல்லா ஸ்டூடண்ட்ஸையும் ஒன்று திரட்டி, தலைமை ஏற்கும் படியான வாய்ப்பு டேவிட்டுக்கு வந்தது. தன் குடும்ப வறுமையை மனசுல வச்சு, முதல்ல தயங்கினான்... நான் தான் அவனுக்கு தொடர்ந்து பக்க பலமா நின்னு, ஊக்கம் கொடுத்தேன். .பக்கத்து ஊர்களுக்கு ஊர்வலமா போயி, திறந்த பள்ளிகளை யெல்லாம் மூடச்சொல்லி கட்டாயப் படுத்த, திட்டம் வகுக்கப்பட்டது. அதற்கான செலவுக்கு வழி தெரியாம, முழி பிதுங்கினான்.


உடனே நான் என் கழுத்தில் கிடந்த நாலு பவுன் செயினைக் கழட்டி,

' இந்தா...இத வித்து போராட்டத்தை வெற்றிகரமா நடத்து..." ன்னேன். ஆடிப் போயிட்டான்...


வாங்க மறுத்தவனை நான் விடல...

 ஆச்சர்யத்தில், 'உச்ச் '

கொட்டினார் முரளி


"இதற்குப் பிறகு, போராட்டத்தில் டேவிட் அதி தீவிரமானான்... ..."அன்றாடங் காய்ச்சியா இருக்கிற நமக்கு, இதெல்லாம் தேவையா... நம்ம குடும்பம் தாங்காதுப்பா..." ன்னு அப்பாவிகளான அவன் பெற்றோர்கள் சொல்லியும் கேக்கல..

.அவனின் பேச்சு திறமையால்,

 எங்க தாலுகாவில், இந்தி எதிர்ப்பு போராட்டம் மாபெரும் வெற்றி கண்டது. அநேகமா எல்லா ஹைஸ்கூலும், பிரைமரி, மிடில் ஸ்கூலும் மூடப்பட்டன. இதனால் மேலும் பிரபலமானான் டேவிட்..


போராட்ட பரபரப்பெல்லாம் ஓய்ந்த

பிறகு ஒரு நாள், எங்க வீட்டுக்கு வந்தான்.முதுகில் தட்டிக் கொடுத்து அவனைப் பாராட்டி மகிழ்ந்தார் அப்பா. உடனே என் பக்கம் திரும்பினான்...ஓவென்று கேவிக் கேவி அழ ஆரம்பித்தான். ," சித்ரா சப்போர்ட் இல்லேன்னா, என்னால இந்த பெரிய காரியத்தை சாதிச்சிருக்க, முடியாது... அதுக்காக என் வாழ்நாள் முழுக்க நன்றி செலுத்த கடமைப் பட்டிருக்கேன் சார்..." னு தேம்பியவாறே சொன்னான். 


இதைக்கேட்டு நெகிழ்ந்து போனார் அப்பா. இந்த இடத்துல ஒரு 'ட்விஸ்ட்'... சொல்லி விட்டு நிறுத்தினாள். ஆர்வமும் குழப்பமும் கலந்து விழித்தார் முரளி. 


" நான் கடைசியா அவனை, அன்னிக்குப் பார்த்தது தான் ..."


" அப்படியா... ?" 


" ஆமா...ஸ்கூல் மீண்டும் திறந்து சகஜத்துக்கு மாறியது. டேவிட்

வகுப்புக்கு வரல...என்ன காரணமா இருக்கும் னு தெரிஞ்சுக்க மனசு துடிச்சிது...மறுநாளும் வரல. யாரிடமும் இதைப் பத்தி பேச முடியல..இன்னும் சரியா சொன்னா, அவனைப் பற்றி பேசுவதற்கு தடை போட்ட மாதிரியான இறுக்கம், ஸ்கூல் முழுக்க நிலவியது.ஒரு வாரமா எனக்கு தூக்கம் இல்ல... அவனுக்கு என்ன ஆச்சு? என்ன

நடந்திருக்கும்? ஏனிப்படி....?

புதிராவும் இருந்தது...

வேதனையாவும் இருந்தது... 


இதற்கிடையில் அப்பாவுக்கு திடீர்னு ட்ரான்ஸ்பர் ...ஊர் மாறினோம்... அவ்வளவு தான்...அம்பது வருஷத்துக்கும் மேலாச்சி...இன்று வரை டேவிட் பற்றிய கேள்விகளுக்கு எனக்கு விடை கிடைக்கல..." சித்ராவின் கண்களில் மெலிதாக நீர் துளிர்த்தது.


சிறிது நேரம் இருவரும் எதுவும் பேசவில்லை.கனத்த அமைதி.


" உங்க கற்பனைப் படி, நான் தனியாளா ஆயிட்டேன்னு வச்சிக்கோங்க... நிச்சயமா சோர்ந்து போயி, மூலையில உக்கார மாட்டேன்...என் மனதுக்குள் நீண்ட நாளா ' ஊமை' யா இருக்கிற ஆசைய.. இல்லை இல்லை...என் கனவை நிறைவேற்ற, மீதியுள்ள வாழ்நாளை அர்ப்பணிப்பேன்


" உன் கனவு என்னன்னு சொல்லலியே...!" 


" டேவிட்டை தேவையில்லாம

 போராட்டத்துக்கு தூண்டி விட்ட குற்ற உணர்வு இன்னும் எனக்குள்ள இருந்துட்டுத் தான் இருக்கு... அதுக்கு நான் பிராயச்சித்தம் பண்ணியே ஆகணும்... நீங்க சும்மா ஒரு கற்பனையா ஆரம்பிச்ச விளையாட்டு தான் இது... ஆனாலும் மனசின் மூலையில், இத்தன நாளா ஒளிஞ்சிட்டு இருந்ததை, ஆத்மார்த்தமா வெளிக் கொண்டு வந்திடிச்சே...இதுக்காக உங்களுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்..."


தலை அசைத்து , ரசித்தார் முரளி.


  " இன்று அறிவியல் வளர்ந்த அளவுக்கு மனித நேயம் வளரல...ஈவிரக்கம் இல்லாம மனித உயிர்களை கொன்று குவிக்கிற போரை, இந்த பூமியில் இருந்து ஒழித்துக் கட்டணும்... போர் என்பது அநாகரீகத்தின் உச்சம் னு எல்லாரும் உணரணும்...  

போரில்லாத... போரச்சம் இல்லாத

...போர்த் தளவாடம் இல்லாத பூமிய உருவாக்கிக் காட்டணும்..."


"அதுசரி...நடைமுறைக்கு இதெல்லாம் எப்படி சாத்தியம் ' 

பளிச்சென்று கேட்டார் முரளி.


" ஆதியில மனிதன் ஆடு, மாடு மாதிரி காட்டுல அலைஞ்சிட்டிருந்தான் ...இப்ப? அடுக்கு மாடி குடியிருப்புல சகல வசதிகளோடு, சொகுசா வாழ்றான்....இதெல்லாம் எப்படி சாத்தியம் ஆச்சு...முயற்சி...முயற்சி ...மனிதன் நினைத்தால், எதையும் சாதிக்க முடியும்...உங்க கற்பனைப்படி நான் தனியாளா ஆயிட்டா, மனமொடிஞ்சி மூலையில சும்மா இருக்க மாட்டேன்...உலக மாணவர்களை, மீடியாக்கள் உதவியோடு ஒன்று திரட்டுவேன்...

சமுதாயத்தைப் புரட்டிப் போட நூறு இளைஞர்கள் போதும்'னாரே விவேகானந்தர்...அதுமாதிரி தேசத்துக்கு நூறு மாணவர்கள் போதும்.. அவங்க படிப்புக்கு, எந்த பாதிப்பும் வராதபடி தினசரி ஒரு மணி நேரம் இதுக்காக ஒதுக்கணும்...இந்த மகத்தான காரியம் நிறைவேற முதல் படி, உளப்பூர்வமான பிரார்த்தனை ...அப்புறம்? தேசம் வாரியா மாணவப் பிரதிநிதிகளை தேர்வு செய்து, ஒன்றிணைக்கணும் .... அப்புறம்? உலகத் தலைவர்களை யெல்லாம் ' ஆன்லைன் மீட்டிங்ல உக்கார வைக்கணும்...அப்புறம்? குறைந்த பட்சம் இன்னும் நூறு வருஷத்துக்கு எந்த நாடும் போர் தொடுக்கக் கூடாது ' ன்னு அவசர தீர்மானம்... இதெல்லாம் ஓவர் நைட்ல நடந்திடும்னு நான் சொல்ல வரல...உண்மையும், நேர்மையும், தொடர் உழைப்பும் இருந்தா, அடுத்தடுத்த கட்டத்துக்கு இறைசக்தியே வழி காட்டும்...வழி நடத்தும்..."

 

உணர்ச்சிப் பெருக்கில் கொட்டித் தீர்த்தாள் சித்ரா.


' குரங்கு பிடிக்கப் போயி ' பிள்ளையாரான கதையாகி

விட்டதே...' என்ற மகிழ்ச்சி பெருக்கில் திளைத்தார் முரளி.


"முயல் வேட்டைக்குப் போன இடத்துல, தங்கப் புதையல் கிடைச்ச மாதிரி ஆயிட்டே சித்ரா... செத்துப் போனா என்ன நடக்கும்னு சும்மா ஒரு சேஞ்சுக்காக யோசிச்சேன் ...அதை நீ வேற லெவலுக்கு கொண்டு போயிட்ட... நாம அவ்வளவு சீக்கிரத்துல சாக மாட்டோம்... கடவுள் கிருபையால் நீண்ட நாள் இருப்போம்... உன்னோட உயர்ந்த கனவை நனவாக்க, தனியா வேண்டாம்... ரெண்டு பேரும் சேர்ந்து நின்னு உழைப்போம்...புதுப்புது திட்டங்கள் தீட்டி, படிப்படியா... தளராம அடியெடுத்து வைப்போம்...


போரில்லாத... போரச்சம் இல்லாத... போர்த் தளவாடம் இல்லாத... புதிய பூமியை மலர வைப்போம்...இதுவே இனி நமது வாழ்க்கை... லட்சியம்...சுவாசம்... எல்லாம்... சந்தோஷந் தானே சித்ரா?"


பேரன்பில் மனைவியை , கட்டிப் பிடித்து, முத்தம் பதித்தார் முரளி.


பிராயச்சித்தத்துக்காக விதை விதைத்து விட்ட பூரிப்பில், ஒளிர்ந்தாள் சித்ரா!



நெல்லை குரலோன்

பேரன்பு

பொட்டல் புதூர் _627423

தென்காசி மாவட்டம்

9791667528