news Breaking News
clock

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 595 பேருக்கு பட்டங்கள் கவர்னர் ஆர்.என். ரவி வழங்கினார்

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 595 பேருக்கு பட்டங்கள்  கவர்னர் ஆர்.என். ரவி வழங்கினார்



சென்னை, பிப்.–


அண்ணா பல்கலைக்கழகத்தின் 46-வது பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தரும், கவர்னருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். அவர் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பதக்கங்களையும் பட்டங்களையும் வழங்கினார். அதில் பி.இ., பிடெக், எம்.இ., எம்.டெக் உள்ளிட்ட படிப்புகளில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 595 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. அவர்களில் 953 பேர் பி.எச்.டி. பட்டதாரிகள் ஆவார்கள்.


இந்த விழாவில் தமிழக அரசின் உயர்கல்வித்துறையின் செயலாளர் பொ.சங்கர் வரவேற்று பேசினார். அப்போது அவர், தமிழக அரசு அண்ணா பல்கலைக்கழகத்தை உலகத்தரத்துக்கு மேம்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு கட்டமைப்புகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகள் ஆகியவற்றுக்காக ரூ.1,380 கோடி வழங்கி உள்ளது என்றார்.


விழாவில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டு பேசியபோது கூறியதாவது:-


நானும் இங்கு படித்தவன் என்பதால் அதில் கலந்து கொள்வதில் பெருமைபடுகிறேன். எனது பள்ளிக்காலம் முதல் எனது பணியில் சேர்ந்தது வரை நான் விரும்பியது எனக்கு கிடைக்கவில்லை. கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்தேன். உயர்நிலைப்பள்ளிக்கு சைக்கிளில் சென்று படிக்க ஆசைப்பட்டேன்.


ஆனால், சைக்கிள் வாங்க முடியாமல் நடந்து சென்றுதான் உயர்நிலைப்பள்ளிக்குச் சென்றேன். எனது உயர்கல்வியை தமிழ்வழியில் படிக்க விரும்பினேன். ஆனால் ஆங்கில வழியில் தான் என்ஜினீயரிங் படிப்பை படித்தேன். பதக்கமும் பெற்றேன்.


எனக்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியில் சேர வேண்டும் என்பது தான் ஆசை. ஆனால், இஸ்ரோவில் செயற்கைக்கோள் திட்டத்தில் பணி கிடைத்தது. ஆனால் கிடைத்த பணியை விரும்பி செய்தேன்.


12 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் பணியில் திட்ட இயக்குனராக பணியாற்றியுள்ளேன். நிலவுக்கு வெற்றிகரமாக அனுப்பப் பட்ட இந்தியாவின் முதல் விண்கல திட்டமான சந்திரயான்-–1 திட்டத்துக்கு தலைமை தாங்கி வழிநடத்தினேன்.


நாம் விரும்புவது கிடைக்கா விட்டாலும் கிடைப்பதை விரும்பி செய்தால் அதுவும் வெற்றிதான். மாணவர்களுக்கு எனது வேண்டுகோள், கிடைக் கின்ற வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்பதுதான்.


அரசு பள்ளிக்குச் செல்லும் அச்சத்தையும், தமிழ்வழியில் அறிவியல் படிக்க முடியுமா? என்ற அச்சத்தையும் தவிருங்கள். இன்றைய தினம் விண்வெளித்துறை சாதனையாளர்களில் 90 சதவீதம்பேர் அரசு பள்ளியில் அதுவும் தமிழ்வழியில் படித்தவர்கள் தான். சாதனை படைக்க வெளிநாடு செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை.


உலக பொருளாதார மன்ற ஆய்வின்படி 2030-க்குள் கோடிக் கணக்கான வேலைவாய்ப்புகள் காணாமல் போகும். அதே நேரத்தில் கோடிக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகும். ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியே இதற்கு காரணம். எனவே, புதிய பணிகளுக்கு நம்மை தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம்.


இவ்வாறு அவர் கூறினார்.


இந்த விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து கொள்ளவில்லை. மேலும் விழாவின் தொடக்கமாக தேசிய கீதம் பாடப்பட்டு, அதன்பிறகு தான் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியது சர்ச்சையை ஏற்படுத்தியது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News