ஆசிய கோப்பை ஆக்கி: ஜப்பானை வீழ்த்தி இந்தியா சூப்பர்4 சுற்றுக்கு முன்னேற்றம்
Sep 03 2025
10

ராஜ்கிர், செப்.1-
ஆசிய கோப்பை ஆக்கியில் ஜப்பானை வீழ்த்தி இந்தியா 2-வது வெற்றி பெற்றதுடன் சூப்பர்4 சுற்றுக்கும் முன்னேறியது.
12-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டியின் 3-வது நாளான நேற்று முன்னாள் சாம்பியனான இந்திய அணி (ஏ பிரிவு), ஜப்பானை எதிர்கொண்டது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களம் புகுந்த இந்திய அணியினர் 5 நிமிடத்திற்குள் அடுத்தடுத்து 2 கோல் போட்டு ஜப்பானை திக்குமுக்காட வைத்தனர்.
4-வது நிமிடத்தில் மன்தீப்சிங்கும், 5-வது நிமிடத்தில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங்கும் கோல் போட்டனர். இதனால் இந்தியா 2-–0 என்று வலுவான முன்னிலை பெற்றது. பதிலடி கொடுக்க ஜப்பான் வீரர்கள் ஆக்ரோஷமாக ஆடினர். 38-வது நிமிடத்தில் ஜப்பானின் கோசை கவாபே இந்தியாவின் பின்கள வீரர்களை ஏமாற்றி கோல் அடித்தார். சிறிது நேரத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி (46-வது நிமிடம்) இந்தியாவின் ஹர்மன்பிரீத் சிங் மேலும் ஒரு கோல் போட்டார்.
கடைசி கட்டத்தில் ஜப்பான் வீரர்கள் 59-வது நிமிடத்தில் கோசை கவாபே மறுபடியும் ஒரு கோல் போட்டார்.
பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் இந்தியா 3-–2 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது. தொடக்க ஆட்டத்தில் இந்தியா சீனாவை வீழ்த்தி இருந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அடுத்த சுற்றை (சூப்பர்4) உறுதி செய்தது.
இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் சீனா 13–-1 என்ற கோல் கணக்கில் கஜகஸ்தானை பந்தாடியது. சீன அணியில் 7 பேர் கோல் போட்டனர். இவர்களில் லு யுவான்லின் ‘ஹாட்ரிக்’ கோல் அடித்ததும் அடங்கும்.
இன்றைய கடைசி கட்ட லீக் ஆட்டங்களில் சீனா- ஜப்பான் (மாலை 5.30 மணி), இந்தியா- கஜகஸ்தான் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன. இதில் சீனா- ஜப்பான் இடையிலான ஆட்டத்தில் வெற்றி காணும் அணி ‘ஏ’ பிரிவில் 2-வது அணியாக அடுத்த சுற்றை எட்டும். முன்னதாக ‘பி’ பிரிவில் நடக்கும் ஆட்டங்களில் வங்காளதேசம்- தென்கொரியா (பிற்பகல் 1.30 மணி), மலேசியா- சீனதைபே (மாலை 3.30 மணி) அணிகள் சந்திக்கின்றன.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?