ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அரை இறுதிக்கு முன்னேறினார் அல்கராஸ்!
Jan 29 2026
28
மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின்கால் இறுதி சுற்றில் 3-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோ கோ காஃபை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார் உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா. அதேவேளையில் ஆடவர் பிரிவில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் அரை இறுதிக்கு முன்னேறினார்.
ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 10-வது நாளான நேற்று கால் இறுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 3-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஜிவேரெவ், 20 வயதான 25-ம் நிலை வீரரான அமெரிக்காவின் லேர்னர் டியனுடன் மோதினார்.
3 மணி நேரம் 11 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அலெக்ஸாண்டர் ஜிவேரெவ் 6-3, 6-7 (5-7), 6-1, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஜிவேரெவ் அரை இறுதிக்கு முன்னேறுவது இது 10-வது முறையாகும்.
மற்றொரு கால் இறுதி சுற்றில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், 6-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் அல்கராஸ் 7-5, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். அரை இறுதியில் அல்கராஸ் - அலெக்ஸாண்டர் ஜிவேரெவ் மோதுகின்றனர்.
மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் முதல் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா, 18 வயதான 29-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் இவா ஜோவிக்குடன் மோதினார். இதில் சபலென்கா 6-3, 6-0 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு கால் இறுதியில் 3-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோ கோ காஃப், 12-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினாவுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் ஸ்விட்டோலினா 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் கோ கோ காஃப்வை வீழ்த்தி அரை
இறுதி சுற்றுக்கு முன்னேறினார். அரை இறுதியில் ஸ்விட்டோலினா, சபலென்காவுடன் மோதுகிறார்.ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் அமெரிக்காவின் கோ கோ காஃபுக்கு எதிராக ஆக்ரோஷமாக பந்தை திருப்புகிறார் உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?