இதோ... இதோ... என் பல்லவி

இதோ... இதோ... என் பல்லவி



ஒரு மெல்லிய குலுக்களுடன் அந்த எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை நோக்கிப் பறக்க ஆரம்பித்தது.


டிக்கெட் கன்ஃபார்ம் ஆகாததால் நின்று கொண்டு பயணித்த ராகவனுக்கு டி.டி.ஆர். கருணையால் உட்கார இடம் கிடைத்தது. "அப்பாடா இதுவாச்சும் கிடைச்சதே?"


 சில நிமிடங்களில் இன்னொரு இளைஞனும் வந்து அவனோடு அமர, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டனர்.


வண்டி வேகம் பிடிக்க ஆரம்பித்ததும் ஹியர் போனை காதில் செருகிக் கொண்டு, பாட்டுக் கேட்க ஆரம்பித்தான் ராகவன்.


பக்கத்தில் உட்கார்ந்து இருந்தவன் ராகவனை தொட்டு உசுப்பி, " சார் ஐ யாம் கிரி... நீங்க தப்பா நினைக்கலேன்னா அந்த ஹியர் ஃபோனின் ஒரு பக்க ஸ்பீக்கரை எனக்கு தரலாமே... நானும் பாட்டுக் கேட்டுகிட்டே வருவேனே?" கெஞ்சலாய்க் கேட்டான்.


அந்த கிரியின் கெஞ்சல் ராகவனைக் கரைக்க, "ஓ.கே." என்றபடி ஒரு காதுப்பகுதி ஸ்பீக்கரைக் கழற்றித் துடைத்து அதை அவனிடம் தந்தான் ராகவன். அவனும் சந்தோஷமாய் செருகிக் கொண்டு பாட்டுக் கேட்க ஆரம்பித்தான்.


  "இதோ.. இதோ.. என் பல்லவி!... எப்போது கீதம் ஆகுமோ?.... இவன்... உந்தன்... சரணம் என்றால்... அப்போது வேதம் ஆகுமோ?"


  பாடலை இருவரும் மெய்மறந்து ரசித்தனர். சில நிமிடங்களில் இருவர் முகத்திலும் இறுக்கம்.


 பாடல் முடிந்ததும் "வெடுக்"கென காதிலிருந்த ஹியர் போன் ஸ்பீக்கரை எடுத்தான் ராகவன். அவன் கை அனிச்சையாய் மொபைலை ஆஃப் செய்தது.


கிரியும் தன் காதிலிருந்த ஸ்பீக்கரைக் கழற்றி ராகவனிடம் தரும் போதுதான் கவனித்தான் ராகவன் கண்களில் கண்ணீர்.


ராகவனும் அந்த ஸ்பீக்கரை கிரியிடமிருந்து வாங்கும் போது பார்த்தான் கிரியின் கண்களிலும் அதே கண்ணீர்.


  "ஏன் சார் அழுதுட்டீங்களா?" ராகவன் கேட்க.


  "ஆமாம்!" என்ற கிரி, "நீங்களும் அழுதிருக்கீங்க போலிருக்கே சார்?" திருப்பிக் கேட்டான்.


  "யெஸ்!... என் பிரிந்து போன காதலி ஞாபகம் வந்து விட்டது....அவளுக்கு இந்த பாட்டுன்னா உயிர்!" என்று ராகவன் சொல்ல, அதைக் கேட்டு அதிர்ந்த கிரி,


  "என்ன சார் சொல்றீங்க?... என் கண்களின் கண்ணீருக்கும் அதேதான் காரணம்!... இது என் காதலி சுவாதிக்கு பிடிச்ச பாட்டு!.. என்னை உதறிட்டுப் போயிட்டா... எல்லாம் விதி" சோகமானான் கிரி.


  "என்ன சொன்னீங்க?... என்ன சொன்னீங்க?.. உங்க காதலி பேரு சுவாதியா?" அவசரமாய்க் கேட்டான் ராகவன்.


 "ஆமாம்"


  "சார்... என்ன ஆச்சரியம்.... என் காதலி பேரும் "சுவாதி"தான்!... அவளுக்கும் பிடிச்சது இதே பாட்டு தான்!"


  "ஹும்... நம்ம ரெண்டு பேர் கண்களிலும் கண்ணீரை வரவழைத்துவிட்டு அந்த சுவாதிகள்... எங்கியோ... யாரோ ஒருத்தர் கூட சந்தோஷமா வாழ்ந்திட்டிருக்கா... நாம இங்கே உட்கார்ந்து அழுதிட்டிருக்கோம்!" என்றான் ராகவன் விரக்தியாய்.


அதே நேரம்.


அவர்கள் இருவரையும் காதலிப்பது போல் நடித்து, அவர்களிடமிருந்து நிறையப் பணத்தை அபகரித்து விட்டு, ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி விலகி ஓடிய அந்த சுவாதி, இதே ரயிலின் இன்னொரு பெட்டியில்,


 "இதோ... இதோ... என் பல்லவி' பாடியவாறு பிச்சை எடுத்துக் கொண்டிருப்பது பாவம் இந்த இருவருக்கும் தெரியாது.


ஏனென்றால், அது இறைவனின் விளையாட்டு.


(முற்றும்)


முகில் தினகரன் 


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%