தை மாதம் பௌர்ணமியில் வரும் தைப்பூச சிறப்புகளை இன்று காண்போம்.
தைப்பூசம் என்றாலே தீமையை நன்மை வென்ற நாள்! இந்த நாளில் தொடங்குவதெல்லாம் துலங்கும். இந்த வருடம் தைப்பூசமானது பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி பௌர்ணமி நாளில் வருகிறது.
தைப்பூசம் முருகப் பெருமான், சிவன், ஆகிய தெய்வங்களுக்கும் ராமலிங்க அடிகளார் அவர்களுக்கும் உகந்த நாள். தைப்பூசம் என்றவுடன் முதலில் நாம் ஞாபகத்தில் வருவது முருகப்பெருமானே!
வேலவனை வேண்டுவதால் கிட்டும் நன்மைகள்
முருகப் பெருமானுக்கு உகந்ததாக கூறப்படும் நட்சத்திரங்கள் பங்குனி உத்திரம், ஆடி கிருத்திகை, வைகாசி விசாகம், தைப்பூசம், ஆகும். இந்த தைப்பூச திருநாளில் முருகனை நாம் வேண்டி விரதம் இருந்து வழிபட்டால் என்னென்ன கிட்டும் என்பதை பார்ப்போம். வாழ்வில் தலைவிதியையே மாற்றும் வடிவேலை வணங்கினால் வல்வினைகள் தீரும். போர் கடவுளாம் தேவ சேனாதிபதியை வணங்கினால் தீய சக்திகள் நம்மை அண்டாது. துன்பமே துவண்டு ஓடிவிடும். சண்முக நாதனை வணங்கினால் சகல சம்பத்தும் நம்மை வந்து அடையும். ஞானவேலை வழங்கினால் ஆழமான அறிவும் அகலமான மனமும் கூர்மையான புத்தியும் நம்மை வந்து அடையும். கந்தவேளை வணங்கினால் கடன் தொல்லை தீரும். மொத்தத்தில் குரு குகனை வணங்கினால் உங்கள் வாழ்க்கையை அவர் குருவாக பார்த்துக் கொள்வார்.
தைப்பூச மகிமை
தைப்பூசத்தில் நிகழ்ந்ததாக கூறப்படும் நிகழ்வுகளை ஒன்றன்பின் ஒன்றாக பார்ப்போம் ஆறுமுகமாக உதித்த முருகப்பெருமானை பார்வதி அன்னை அள்ளி அணைத்தது இந்த நன்னாளில் தானாம். அவனுக்கு ஞானம் மற்றும் ஒளியின் அடையாளமான வடிவேலை கொடுத்து "வென்று வா" என்று அன்னை அனுப்பியதும் இந்த நன்னாளில் தானாம். வேல் பெற்ற முருகன் தீய சக்திகளை அழித்ததும் இந்த நன்னாளில் தானாம். வள்ளியை அவன் மணந்ததும் இந்த நாளில் தானாம். மொத்தத்தில் உலகம் தோன்றியதே இந்த நன்னாளில்தானாம். இத்தகைய நன்னாளில் அந்த ஞானப் பழத்தை வேண்டி விரதம் இருப்பது எத்தகைய சிறப்புடையது!
தைப்பூச விரதம்
தைப்பூச விரதம் 48 நாட்கள் அல்லது 21 நாட்கள் அல்லது 11 நாட்கள் அல்லது ஒன்பது நாட்கள் அல்லது ஒரே ஒரு நாள் கூட விரதம் இருந்து அனுஷ்டிக்கலாம். தைப்பூசத்தன்று காலையில் எழுந்து நீராடி திருநீர் அணிந்து தூய மனதுடன் முருகனுக்கு மஞ்சள் அல்லது சிகப்பு மலர் சாத்தி வேலை பூஜை செய்வதென்றால் ஒரு வெள்ளி அல்லது பித்தளை கிண்ணத்தில் அரிசி நிரப்பி மலர்களை வைத்து அதில் வேலை சொருகி சட்கோண தீபம், வெற்றிலை தீபம் போன்ற தீபங்கள் ஏற்றி அவருக்கு பிடித்தமான தேன், தினை மாவு ,அல்லது பால் பாயாசம், சர்க்கரை பொங்கல் என நிவேதனம் செய்து வேண்டலாம். எதுவும் இயலா விடினும் ஒரு தீபம் ஏற்றி இரு கல்கண்டை வைத்து கூட நிவேதனம் செய்யலாம். நாம் பால்பழம் மட்டும் அருந்தி உபவாசம் இருக்கலாம். முடிந்தால் இரு வேளையும் கோவிலுக்கு சென்று வேண்டி வரலாம். இல்லத்திலேயே இருந்து கந்த சஷ்டி கவசம், திருப்புகழ், வேல்மாறல், போன்றவற்றை பாடலாம். இயலாதவர்கள் முருகா என்று ஒரு சொல்லால் அழைத்து உருகினாலே போதும். அவன் அருள் கிட்டும்.
அருணகிரிநாதர் அருளுரை
கந்தர் அலங்காரத்தில் அருணகிரிநாதர் அவர்கள் முடியாத பிறவி கடலில் புகார் என்று தொடங்கும் 33வது பாடலில் முருகா என்று கூறினாலே என்னென்ன நன்மைகள் கிட்டும் என்று பட்டியலிட்டு இருக்கிறார். இத்தனை வழங்கும் முருகனை வணங்காதவர்கள் 'கோழி கொடியோன் அடிபணியாமல் குவளையத்தே வாழும் மதியிலிகாள்' என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
தைப்பூச வரலாறு
தைப்பூசம் பற்றிய விபரங்கள் 1500 ஆண்டுகளுக்கு முன்பே தேவார திருப்பதிகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது பிற்கால சோழர்கள் காலத்தில் கோவில்களில் இந்நாளில் கூத்துக்கள் நடைபெற்றுள்ளது. திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்கேஸ்வரர் கோவிலில் தைப்பூசத்தை ஒட்டி நான்கு நாட்கள் கூத்து நடைபெற்றதாக கல்வெட்டுகள் கூறுகின்றன.
தைப்பூசம் கொண்டாடப்படும் இடங்கள்
தைப்பூசம் தமிழர்கள் மட்டுமல்லாது கேரளத் தவரும் 'தைப்பூயம்' என்று கொண்டாடுகிறார்கள். எல்லா முருகன் திருத்தலங்களிலும் இந்த தைப்பூச திருநாள் கொண்டாடப்படுகிறது. பழனி மலையிலும் திருச்செந்தூரில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் பாத யாத்திரை செய்து சின்ன ரதம், சக்கரை காவடி, தீர்த்த காவடி, பறவை காவடி, பால் காவடி மீன் காவடி, மயில் காவடி, போன்ற காவடிகளை சுமந்து காவடி சிந்து பாடியும், பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், வேண்டுதல்களை நிறைவேற்றி கோவிலில் தரிசனம் செய்கிறார்கள்.
தமிழகம் மட்டுமல்லாது தமிழர்கள் வாழும் உலகின் பல பாகங்களில் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, மொரிஷியஸ், தென்னாப்பிரிக்கா, ரியூனியன், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா,
பிஜு ஆகிய இடங்களிலும் தற்பொழுது அமெரிக்காவில் உள்ள பல இந்து கோவில்களிலும் தைப்பூசம் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது. என்னப்பன் முருகனை வேண்டி எல்லாம் பெறுவோம்
சிதம்பரம்
முருகனுக்கு மட்டுமல்லாது தைப்பூசம் சிவ ஸ்தலங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிதம்பரத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில்தான் சிவபெருமான் உமா தேவியாரோடு நடனமாடி உலகத்தவரை மகிழ்வித்ததாக கூறப்படுகிறது. மேலும் இரண்ய வர்மன் என்ற கௌடவ தேசத்து அரசனுக்கு (தற்போதைய மேற்கு வங்காளம்) இந்த நன்னாளில்தான் சிவபெருமான் நேரில் காட்சி அளித்ததாகக் கூறப்படுகிறது. அதனால் இந்த தைப்பூசம் சிதம்பரத்தில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிவ ஸ்தலங்களில் இந்த நன்னாளில் சிவனை வழிபட்டு அருள் பெறலாம்.
தேவ குருவான பிரகஸ்பதியின் ஜென்ம நட்சத்திரமும் இதுவே. எனவே குருவை இந்த நன்னாளில் வழிபாட்டால் பல நன்மைகள் கிட்டும்.
வள்ளலார் அவர்கள் இந்த தை மாத புனர்பூச நட்சத்திரத்தில் தான் ஒளி வடிவாக இறைவனை சென்றடைந்தார். எனவே அதற்கு அடுத்த நாளான தைப்பூசதன்று வடலூர் மேட்டுக்குப்பத்தில் ஜோதி தரிசன நிகழ்ச்சி நடைபெறுகிறது.
வள்ளலார் அவர்களின் அருளைப் பெற இந்த நன்னாளில் தயிர் சாதம் நிவேதனம் செய்து அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை என்று ஜெபித்து அவரின் அருள் பெறுவோமாக.
வனஜா நாகராஜன்
எழுத்தாளர்
யு.எஸ்.ஏ