இந்தியா எரிசக்தி வாரம் 2026 நிகழ்வில் வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து
தூத்துக்குடி, பிப். –
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம், கோவாவில் ஜனவரி 27 முதல் 30 ந்தேதி வரை நடைபெற்ற இந்தியா எரிசக்தி வாரம் 2026 நிகழ்வில் பங்கேற்று, இந்தியாவின் சுத்தமான எரிசக்தி மாற்றம் மற்றும் நிலைத்துவமான கட்டமைப்பு வளர்ச்சிக்கான தனது உறுதியை வெளிப்படுத்தியது.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் ஆதரவுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த ஒப்பந்தக் கையெழுத்து நிகழ்வு, வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் முன்னிலையில் நடைபெற்றது. இதில் வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் சார்பில் நிர்வாகப் பொறியாளர் எ. செந்தில் கணேஷ் மற்றும் ஓரியானா பவர் லிமிடெட் சார்பில் வர்த்தகத் தலைவர் ஓம்கார் நாத் மற்றும் இணை நிறுவனரும் நிர்வாக வர்த்தக அதிகாரியுமான அனிருத் சரஸ்வத் ஆகியோரும் கையெழுத்திட்டனர்.
இதன் ஒரு பகுதியாக, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓரியானா பவர் லிமிடெட் நிறுவனத்துடன் துறைமுக ஆணையம் ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன்படி, துறைமுக வளாகத்தில் கார்பன் பிடிப்பு மற்றும் சேமிப்புக்கான முன்னோடித் திட்டம் அமைக்கப்பட உள்ளது. மேலும், பச்சை மெத்தனால் உற்பத்தி நிலையம் மற்றும் அதற்கான உட்கட்டமைப்புகளை உருவாக்கி, கார்பன் நடுநிலைமை இலக்குகளை எட்டவும், பச்சை ஹைட்ரஜன் ஏற்றுமதிக்கான தயாரிப்புப் பணிகளை முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
திடக் கழிவுச் செயலாக்க நிலையம்:
சுற்றுச்சூழல் மேலாண்மையின் மற்றொரு கட்டமாக, தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் யுனிவர்சல் கிளீன்டெக் சொல்யூஷன்ஸ் நிறுவனத்துடன் முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் துறைமுகத்தில் நகராட்சி திடக் கழிவுச் செயலாக்க நிலையம் அமைக்கப்பட்டு, நகரக் கழிவுகளிலிருந்து பச்சை மெத்தனால் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இந்த முயற்சி கழிவு மேலாண்மை மற்றும் எரிசக்தி உற்பத்தி ஆகிய இரண்டையும் இணைக்கும் ஒரு சிறப்பான திட்டமாகும்.
இந்த நிகழ்வின் விவாத அமர்வில் பங்கேற்ற துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித், சர்வதேசக் கடல் வர்த்தகப் பாதைக்கு அருகில் தூத்துக்குடி துறைமுகம் அமைந்துள்ள சாதகமான சூழலை விளக்கினார். கப்பல் சேவை நிறுவனங்களுக்குத் தேவையான பசுமை மெத்தனால் வசதிகளை வழங்கத் துறைமுகம் முழுமையாகத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறுகிய காலத்தில் மெத்தனால் பங்கரிங் எனப்படும் கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பும் பணிகளைத் தொடங்கி, பின்னர் அதனை வணிக ரீதியாக விரிவுபடுத்தி பசுமை வழித்தடங்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முன்னெடுப்புகள் அனைத்தும் பாரதப் பிரதமரின் விக்சித் பாரத் கனவுடன் இணைந்து, இந்தியாவின் எரிசக்தி மற்றும் தளவாட மதிப்புச் சங்கிலியை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.