மீண்டும் தி.மு.க ஆட்சியே அமையும்: தஞ்சையில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
Feb 04 2026
14
தஞ்சாவூர், பிப்.–
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி, கடந்த காலங்களை விடச் சிறப்பான ஆட்சியாக நடைபெற்று வருவதாகவும், மீண்டும் தி.மு.க-வே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:–
"எடப்பாடி பழனிசாமி சொல்வதை எல்லாம் மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள். பெண்களுக்கு என ஏராளமான நல்ல திட்டங்களை நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தியுள்ளார். எந்த ஆட்சியிலும் நடைபெறாத அளவுக்குப் பல்வேறு சாதனைகளைச் செய்து காட்டியுள்ளார். 2006, 2016-ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சிதான் சிறப்பான ஆட்சி என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், தற்போது அதைவிடச் சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் நடத்திக் கொண்டிருக்கிறார்.
திமுகவின் தேர்தல் பரப்புரை கடந்த 6 மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. கூட்டணி கட்சிகளை முதலமைச்சர் நல்லபடியாக அரவணைத்துச் செல்கிறார். திமுக கூட்டணி மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளது. வரும் தேர்தலிலும் மு.க.ஸ்டாலின் தான் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்பார். கருத்துக்கணிப்புகள் அனைத்தும் திமுகவுக்குச் சாதகமாகவே வருகின்றன. முதலமைச்சர் செல்லும் இடமெல்லாம் மக்கள் அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கிறார்கள்; அவர் மீது தனி மரியாதை வைத்துள்ளார்கள்.
திமுக மீண்டும் வெற்றி பெறும்:
அரசின் நலத்திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் சென்றடைகிறதா என்பதை முதலமைச்சர் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார். எங்காவது குறை இருந்தால் அதனை உடனடியாக மாவட்ட ஆட்சியர்களிடம் பேசிச் சரி செய்து கொடுக்கிறார். ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் 20, 30 ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத பிரச்சினைகள் கூட ஒரே நாளில் முடிக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக, மின்சார வாரிய டிரான்ஸ்பார்மர் இடமாற்றம், கூட்டுப் பட்டா போன்ற எளிதில் முடியாத சிக்கல்களைக் கூட இந்த முகாம்கள் மூலம் முதலமைச்சர் தீர்த்து வைத்துள்ளார். இதனால் அரசின் திட்டங்கள் கிராமங்களை நோக்கி முழுமையாகச் சென்றுள்ளன. திமுகவின் கூட்டணி குறித்து முதலமைச்சரே பேசி இறுதி முடிவு எடுப்பார். அவர் எங்களுக்கு என்ன வேலை சொல்கிறாரோ அதை நிறைவேற்றுவதுதான் எங்களது பணி. கண்டிப்பாகத் தேர்தலில் திமுகதான் மீண்டும் வெற்றி பெறும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?