இந்தி, சமஸ்கிருதம் திணிப்பு: பா.ஜ.க. முயற்சிக்கு ஸ்டாலின் கண்டனம் மோடி அரசுக்கு சாமரம் வீசுகிறது அ.தி.மு.க.
சென்னை, பிப்.–
இந்தியுடன் சமஸ்கிருதத்தையும் திணிக்க பா.ஜ.க. அரசு முயற்சிக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
"தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:– கழகத்தை 6–வது முறையாக அரியணை எற்றியதில் உடன்பிறப்பு களான உங்களின் அயராத உழைப்புக்கு முதன்மையான பங்கு உண்டு. உங்களை வழிநடத்தும் பொறுப்பைச் சுமந்திருக்கும் நான் ஒவ்வொரு நாளும் ஓயாது உழைத்துக் கொண்டிருக்கிறேன். பத்தாண்டுகால அ.தி.மு.க. ஆட்சியின் இருட்டிலிருந்து தமிழ்நாடு மீட்கப்பட்டு விடியல் வெளிச்சத்தைக் காண்கிறது. ஒன்றிய பா.ஜ.க. அரசின் திட்டமிடப்பட்ட வஞ்சகத்தை எதிர்கொண்டு தமிழ்நாடு பொருளாதாரத்திலும் தொழில்துறையிலும் கல்வியிலும் கட்டமைப்புகளிலும் இன்னும் பல துறைகளிலும் முன்னேறி வருவதை அந்த ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையே உறுதி செய்கிறது.
சமஸ்கிருதத்தை திணிக்கும் பா.ஜ.க.
இந்திக்கு இடமில்லை என்று இருமொழிக் கொள்கையை அண்ணா நிலைநாட்டிய மாநிலத்தில், இந்தியுடன் சமஸ்கிருதத்தையும் திணிக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறது ஒன்றிய பா.ஜ.க அரசு. தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க. அரசு. தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க. அரசுக்குச் சாமரம் வீசும் அடிமையாக இருக்கிறது அண்ணாவின் பெயரை கட்சியில் வைத்திருக்கும் அ.தி.மு.க..
வன்முறை தவிர்த்து வறுமையை வெல்ல வேண்டிய மண்ணில், எந்த வகையில் மத வன்முறையைத் தூண்டலாம் என்பதே பா.ஜ.க.வின் நோக்கமாக உள்ளது. அதற்கு மௌன சாட்சியாக அமைதி காக்கிறது அ.தி.மு.க. மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி என்பதைத் திராவிட மாடல் அரசு தனது ஒவ்வொரு செயல்பாட்டிலும் ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது. திராவிட மாடலின் குரல், பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களிலும் ஒலிக்கிறது. மாநில சுயாட்சி என்றாலே பயந்து ஒளிந்து கொள்கிறது, சுயாட்சி எண்ணமோ சுயமரியாதை உணர்வோ இல்லாத அ.தி.மு.க.
இந்த ஐந்தாண்டுகளிலும் மக்களுடனேயே பயணிக்கிறது. மக்களுக்காகவே செயல்படுகிற மக்கள் இயக்கமான தி.மு.க.வை 2026 சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற வைத்து, திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைத்திட வேண்டும் என்ற எண்ணம் தமிழ்நாட்டு மக்களின் மனதில் பதிந்துள்ளது.
சதியை முறியடிப்போம்
தமிழ்நாட்டிற்கு வஞ்சகம் செய்து வரும், தமிழர்களின் எதிரியான பா.ஜ.க.வும் அதனுடன் இணைந்துள்ள அ.தி.மு.க.வும் நமக்கு எதிராகச் செயல்படுவதாக நினைத்து தமிழ்நாட்டின் வளர்ச்சியை மீண்டும் படுகுழியில் தள்ள நினைக்கும் சதியை, உடன்பிறப்புகளான உங்களால்தான் முறியடித்திட முடியும்.
அந்த உறுதியை ஏற்கும் வகையில், பிப்ரவரி 3 அன்று பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் அண்ணா சதுக்கம் நோக்கி அமைதிப் பேரணியில் உங்களில் ஒருவனான நானும் கழக முன்னோடிகளும் கழகத் தொண்டர்களும் பங்கேற்கிறோம்.
அண்ணாவின் நினைவு நாளில் தமிழ்நாடெங்கும் அவரது நினைவைப் போற்றும் வகையில் அண்ணாவின் படத்திற்கு மாலையிட்டு, மலர் தூவி மரியாதை செலுத்தி, கருணாநிதி வழங்கிய ஐம்பெரும் முழக்கங்களை உறுதிமொழியாக ஏற்று, தேர்தல் களப்பணிகளுக்கு ஆயத்தமாவோம். மக்களிடம் செல்வோம். அவர்களின் ஆதரவுடன் சட்டமன்றத் தேர்தலில் உறுதியாக வெல்வோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.