உயில்

உயில்



 தமிழ்நிலவன் நேற்று அதிகாலையில் இறந்துபோனார். உறக்கத்தி லேயே உயிர் பிரிந்துபோனது எத்தகைய கொடுப்பினை.

 அவர் மனைவி தென்றல் எல்லாருக்கும் கைப்பேசியிலிருந்து தகவல் அனுப்பிக்கொண்டிருந்தாள்.

 அக்கம் பக்கம் இருந்தவர்கள் கேள்விப்பட்டு உடன் வந்து அவளுக்கு உதவி செய்துகொண்டிருந்தார்கள்.

 பாட்டி.. எழில் அக்காவிற்குப் பேசியாச்சா?

 வேண்டாம்பா.. எழிலுக்கு அவளோட உறவுகள் யாருக்கும் தகவல் சொல்ல வேண்டாம்பா..

 ஏம் பாட்டி?

 உங்க தாத்தா உயிரோட இருந்தப்பவே எழுதி வச்ச உயில் அது.

 என்ன உயில் பாட்டி?

 தன்னோட சாவுக்கு உறவுகள் யார் யாரெல்லாம் வரக்கூடாது என்று எழுதி வச்சிருக்கார்..

 எதுக்கு பாட்டி?

 அவருக்குன்னு சில கொள்கை இருக்குப்பா.. அதுலேர்ந்து எப்பவும் அவர் மாறா நடந்ததில்லை.. அதன்படி நாலுபேர் தூக்க இருந்தாக்கூடப் போதும்னு உயில் எழுதி வச்சிருக்காரு.. தன்னோட சாவுக்கு எவ்வளவு பணம்.. மறுநாள் பால்தெளியல்.. பதினாறாம் நாள் காரியம்.. இப்படி எல்லாத்துக்கும் பணத்தை எண்ணிக் கவர் போட்டு வச்சிட்டுப்போயிருக்காரு.. சாவுக்கெல்லாம் அநாவசியமா செலவு பண்ணக்கூடாது.. அதை ஏழைங்களுக்குக் கொடுக்கலாம்னு எழுதி வச்சிருக்காரு.. தன்னோட ஓய்வூதியத்திலேயே ஒரு பங்கை மாதாமாதம் ஒவ்வொரு அநாதை இல்லத்துக்கு அனுப்பிடுவாரு.. தேவைக்கு மேல பணம் இருந்தா நல்லதில்லன்னு சொல்வாரு..

 அதுசரி பாட்டி எழில் அக்காவுக்கு ஏன் தகவல் அனுப்பக்கூடாதுன்னு எழுதி வச்சிட்டுப்போயிருக்காரு தாத்தா.. அவரோட மகள் ஆச்சே..

           ஆமாம்.. ஆனா எழில் அவளோட பிள்ளைகளுக்குத் தமிழ்ப்பெயர் வைக்கணும்னு தாத்தா பிடிவாதமா சொன்னாரு.. அதக் கேட்கலே.. மாப்பிள்ளை கிட்டயும் சொல்லிப் பாத்தாரு.. எங்க உரிமையில ஏன் தலையிடறீங்கன்னு மூஞ்சில அடிச்சமாதிரி பேசிட்டாரு.. தமிழைப் பிடிக்காத உறவு யாரா இருந்தா என்னன்னு உறவறுத்துட்டார்.. இனிமே என்னோட உறவு கிடையாதுன்னு சொல்லிட்டாரு.. எழில் இங்க பிள்ளைங்கள அழச்சிட்டு வந்தப்பா இவரு வெளியூரு கிளம்பிப்போயிட்டாரு. அதனால இப்போ எழில் வர்றத நிறுத்திட்டா..

 காரியங்கள் நடக்க ஆரம்பித்தன. கொஞ்சம் கூட்டம் இருந்தாலும் எல்லாரும் தமிழ்நிலவன் மேல் மரியாதை கொண்டவர்கள்.. யாருக்கும் உதவியைத் தவிர வேறு எந்த இடரையும் தராதவர்..

 நேரம் பார்த்தார்கள்.. தண்ணீர் தூக்கப்போனார்கள்.. யார் கொள்ளி வைப்பது என்கிற பிரச்சினை வந்தது..

 தென்றல் நான் வைக்கிறேன் என்றாள். கூட்டம் எதுவும் பேசவில்லை.

 அந்த நேரம் பார்த்து ஒரு கார் வந்தது. காரிலிருந்து எழில் அவள் கணவன் பிள்ளைகள் இறங்கினார்கள்..

 அப்பா.. என்று அலறியபடி ஓடிவந்தாள்.

 வெளியே போ.. அவர் உன்னை வரவேண்டாம்னு எழுதி வச்சிட்டுப் போயிருக்காரு..

 என்னம்மா நீங்க.. அவர்தான் ஏதோ பைத்தியக்காரத்தனமா செஞ்சிருந்தா.. நீங்களும் பெத்த மகள வேண்டாம்னு விரட்டறீங்க என்றார்கள்.

 முடியாது. அவர்தான் எனக்கு முக்கியம்.. வெளியே போ என்று எழிலைப் பார்த்துக் கத்தினாள் தென்றல்.

   எழிலின் கணவன் வந்தான் தென்றலிடம். அத்தை இங்கப் பாருங்க.. நாங்க செஞ்சது தப்புதான்.. இதப்பாருங்க.. என்று சில பேப்பர்களைக் காண்பித்தான்.. மாமா விருப்பப்படியே என்னோடப் பிள்ளைகளுக்குத் தமிழ்ப்பெயர் வைத்து கெஜட்டுல மாத்திட்டோம்.. என்றதும் தென்றல் வாய்விட்டழுதாள் மகள் எழிலைக் கட்டிக்கொண்டு.. முன்னமே செஞ்சிருக்கக்கூடாதா? என்றபடி.

 இப்போது எழிலின் கணவன் சொன்னான்.. பிள்ளையா நின்று நான் மாமாவுக்குக் கொள்ளி வைக்கிறேன்..


ஹரணி,

தஞ்சாவூர்-2

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%