ஏனிந்த இழி நிலை

ஏனிந்த இழி நிலை


-பாவலர் கருமலைத்தமிழாழன்


மொழிமறந்தான் இனம்மறந்தான் தன்னை ஏத்தி

 மொழிவோரின் சொல்லுக்கே செவிகொ டுத்தான்

வழிவழியாய் வந்திட்டப் பண்பை ஞாலம்

 வணங்குகின்ற இலக்கியத்தின் மதிப்ப ழித்தான்

குழிவெட்டித் தன்னினத்தைத் தானே மாய்த்தான்

 குமுறுகின்ற உடன்பிறந்தார் குரலைக் கேளான்

வழிமறந்தே பிறருக்கே அடிமை யானான்

 வளமான வாழ்விழந்தே இழிவு கொண்டான் !


பிறநாட்டில் மாய்கின்றான் தமிழன் என்றால்

 பிறந்திட்ட நாட்டிலேயே அகதி யானான்

முறத்தாலே புலிதன்னை அடித்த பெண்ணை

 முச்சந்தி வீதியிலே அடிக்கின் றார்கள்

புறமுதுகு காட்டாத தமிழர் தம்மைப்

 புறமெல்லாம் குருதியிலே குளிக்க வைத்து

விறகாக்கி எரிக்கின்ற இழிவு எல்லாம்

 விளங்கிருந்த மொழியுணர்வை விட்ட தாலே !


ஏனிந்த அவலங்கள் எண்ணிப் பார்ப்பீர்

எவ்வினமும் பட்டிடாத துயர்கள் பெற்று

கூனிப்போய் வாழ்கின்ற நிலைதான் ஏனோ

கூலிக்காய் சென்றதாலோ அன்றி தானே

ஏணியாகிப் பிறரேறக் குனிந்த தாலோ

ஏளனத்தின் காரணந்தான் என்னே நாளும்

பேணிவரும் தன்னலந்தான் ! மான வாழ்வைப்

பெறுதற்தே ஒற்றுமையின் உணர்வு கொள்வோம் !

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%