வேலை செய்து கட்டாய ஓய்வு திணிக்கப் பெற்ற பொருட்கள்.
இப்பொழுதெல்லாம் வயசான மனுஷாளை யாரும் மதிப்பதில்லை என பெரியவர்கள் அலுத்துக் கொள்வது சகஜம்.
மனிதர்களுக்கு மட்டுமா இந்த வயசு, மதிப்பு...??
அவர்கள் வாங்கிய பொருட்களை யாரும் மதிப்பதுமில்லை, உபயோகிப்பதுமில்லை.
ஆம்! அதற்கும் வயசாயிடுத்தே.
2008-ல் வாங்கிய சோனி 28′' அருமையான, பெரிய ஸ்கிரின் டிவி.
இது இடத்தை அடச்சிண்டு இருக்கு. மார்க்கெட்ல சூப்பர் டிவியெல்லாம் வந்திருக்கு தெரியுமா..? என பிள்ளைகள் நச்சரித்ததால், சரி, வாங்கி ரொம்ப வருஷமாச்சேன்னு கடைக்காரரிடம் எடுத்துண்டு போக,
”மேடம், இது ரொம்ப பழைய மாடல் டிவி..!!!! (பார்டா) ஆயிரம் ரூபாய்க்கு எடுத்துக்குறேன். ஆனால் இங்கே புது டிவி வாங்கினால் மட்டுமே இந்த ஆஃபர்.."
( என்னது..?? சுளையா 35,000 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய டிவி, வெறும் ஆயிரம் ரூபாய்க்கா..?)
நன்னாத்தானே வேலை செஞ்சுண்டு இருக்கு. அது பாட்டுக்கு ரூமில் இருக்கட்டும்பா என்றேன், பிள்ளையின் முறைப்பை அலட்சியப்படுத்தி..
எங்கள் ரூமில் அடைக்கலமானது அந்த பழைய டிவி.
80,000 ரூபாயில் வாங்கிய புது ‘வால் மௌண்ட்’ டிவி ஹாலில் அட்டகாசமாய் தொங்கியது. ரூமிலிருக்கும் டிவிக்கும் ‘கேபிள் பில்’ கட்டணும் என்பதால் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்தோம்.
ஃப்ரிட்ஜ்* நன்றாகத்தான் வேலை செய்கிறது. ஆனால் அதுவும் ஓல்டாம். 20,000 கொடுத்து வாங்கிய ஃப்ரிட்ஜை பெரிய மனசு வைத்து வெறும் 500 ரூபாய்க்கு எடுத்துக் கொண்டான் கடைக்காரன்.
45000-ல் வீட்டிற்குள் வந்த "டபுள்டோர் ஃப்ரிட்ஜ்" கண் சிமிட்டியபடி கம்பீரமாய் நின்றது.
பழைய ஃப்ரிட்ஜை கடைக்காரர் எடுத்துண்டு போக, 'இத்தனை வருஷம் உழைத்த எனக்கு இவ்வளவுதான் மதிப்பா..?' என அது கேட்பது போல் பார்க்க, பாவமாக இருந்தது எனக்கு.
18,000 ரூபாய் கொடுத்து வாங்கிய VCR-ல் வெறும் 10 படம் தான் பார்த்திருப்போம். நல்ல கண்டிஷனில் உள்ளது. ஆனால், யாருமே வாங்க மறுத்ததால், "ஸ்கிராப்” பிலும் போட மனமில்லாமல், அதுவும் என் ரூமில் பெருமூச்சுவிட்டபடி உட்கார்ந்திருந்தது.
“ஃபோன், லேப்டாப், Tab என எங்கும் கேமரா தான். போட்டோ, செஃல்பி கலாச்சாரம் தான் எல்லா பக்கமும். இதில், இவ்வளவு பெரிய கேமராவை எடுத்துண்டு போய் யார்மா படம் பிடிப்பது..??”
50,000 ரூபாய் கொடுத்து வாங்கிய வீடியோ கேமரா, அதர பழசு என பட்டம் வாங்கி, கவரில் கண்மூடி என் ரூமில் பத்திரமாய் தூங்குகிறது.
பிலிப்ஸ் 3 in1டேப் ரெக்கார்டர், எத்தனை முறை மதுரை மணி ஐயர், MSS, MLV இவர்கள் பாடல்கள் மட்டுமில்லாமல் TMS, P. சுசீலா, ஜேசுதாஸ், PB ஸ்ரீநிவாஸ், ஏ.எம்.ராஜா இவர்கள் பாடல்களையும் கேஸட்டிலிருந்து சுவாசித்து மனதை தென்றலாய் வருடியிருக்கும்..?!! அதுவும் கேஸட்டுகளுடன் ஒரு அட்டைப் பெட்டியில் முடங்கியே கிடக்கிறது.
“அம்மா, யார்மா இப்போதெல்லாம் 'டெக்' யூஸ் பண்றா..?? வால் மௌண்ட் டிவி பக்கம் 'டெக் ஸ்பீக்கர்' ரெண்டுமே போண்டா மாதிரி இருக்கு..!"
(ஏண்டா, எங்கேடா இவ்ளோ பெரிய போண்டா போடறான்னு கேட்க முடியாது என்பதால் வாயை அடக்கிக் கொண்டேன்)
"அசிங்கமா இருக்கு..! அதில் நாம் பாட்டும் கேட்பதில்லை, போடுவதுமில்லை. சும்மா ‘டஸ்ட்”அடஞ்சுண்டு.." என முணுமுணுத்தப்படி “OLX” ல் போட ‘டெக்கை பையன் போட்டோ பிடிக்க, நான் குறுக்கே நின்றேன்.
”டேய், 30 ஆயிரம் ரூபாய்டா.. லோன் போட்டு உங்கப்பா எனக்கு ஆசையாய் ‘கிப்ட்’ செய்த ‘டெக்’குடா.. இப்போ பாட்டு கேட்கலேன்னா என்ன..? என்னிக்காவது யூஸ் ஆகும். ஓரு ஞாபகமா இருக்கட்டுமே.." என்று கூறியதில்
“என்னமோ செய்..” என்று கோபமாக கூறி இரண்டு பெரிய ஸ்பீக்கருடன் கூடிய ‘டெக்’கை அட்டை பெட்டியில் போட்டு என் ரூமில் வைத்து விட்டு போனான் சீமந்தப் புத்திரன்.
இப்போது, ஹால் பளிச்சென்றிருந்தது. என் அறையோ பல அட்டைப்பெட்டிகளுடன் ஒரு மினி கிடங்காகியது.
அது மட்டுமா..??
ஏசியும், ஃபேனும் ரூமில் இருக்கும் பட்சத்தில், எனக்கு கிஃப்டாக வந்த ஒரு ‘பெடஸ்டல் ஃபேனும்’, ஒரு ‘டேபிள் ஃபேனும்' பேரிச்சம் பழத்திற்கும் லாயக்கில்லாமல் என் ரூமில் ‘தேமே’வென ஆடாமல் அசையாமல் நின்றன.
டிவி, டெக், விசிஆர், கேமரா மட்டுமா வெளிநடப்பு செய்தன..?
டெஸ்க்டாப், டவர் அதுவும் ‘டேபிள்’ளுடன்.. தெரிந்த நண்பரின் டிரைவருக்கு இலவசமாய் போயிற்று.
எங்கள் டிரைவரிடம் ஏற்கனவே இருக்காம்..
என்னிடம் சொல்லவுமில்லை, ரூமில் இடமுமில்லை.
(சொன்னால் அதுவும் என் ரூமில் அடைக்கலமாகுமே என்கிற எண்ணம்)
புது லேப்டாப்பும், Tab-பும் வீட்டில் குடிபுகுந்தன.
கட்டிலில் ஏறி கூடப் படுக்க முடியாமல், இடமில்லாமல், ரூமைச் சுற்றி டிவியும்,
ஃபேனும், டெக்கும், அட்டைப்பெட்டிகளாக இருந்ததால் கடுப்பாகி விட்டார் என் கணவர்..
அவரின் கோபத்திற்கு, முறைப்பிற்கு ஏன் ஆளாவானேன்...!!!??
என்ன செய்யலாம்...??
இத்தனை அருமையான பொருட்களை 500, 1000 ரூபாய்க்கு அடிமாட்டு விலைக்கு நாம் கொடுப்பதை விட, நம் வீட்டு வேலைக்காரிக்கு கொடுத்தால்...??!!!
கண்ணில் ஒற்றி எடுத்துக் கொண்டு போவாள் என்று நினைத்து,
”செல்வி, இந்த டிவி, டெக், ஃபேன் எல்லாம் ரொம்ப காஸ்ட்லி ஐட்டம். உனக்கு வேணும்னா நீ எடுத்துப்போய் ஜாக்கிரதையா வெச்சுண்டு யூஸ் பண்ணு.." ஜாடையாய் சொன்னேன்.
(ஆனந்தத்தில் திக்கு முக்காடி நன்றி சொல்லி விட்டு எடுத்துட்டுப்போய், ஒரு வருடத்திற்கு சம்பளம் வாங்காம வீட்டு வேலை செய்வாள் என எதிர்ப்பார்த்தேன்)
நெனப்பு தான்..
“துட்டுக்காம்மா..!!” என்று கேட்டுபடி வந்தவள், அவற்றை பார்த்தவுடன்..
“அம்மா, சும்மா கொடுத்தா கூட இது வேண்டாம்மா.." எனக் கூறி பகபகவென சிரித்தாள்.
“நான் என்ன பணமா கேட்டேன்..? என்னடி சிரிப்பு..!!?? இதெல்லாம் நல்லா வேலை செய்யும். ரொம்பவும் அருமையான பொருள், தெரிஞ்சுக்கோ.." என்றேன் சற்று கோபமாக,
“அதுக்கில்லமா, எங்க வீட்டிலயே இரண்டு டிவி இருக்கு. எங்க வீட்டுக்காரர் தவணை முறையில் சுவத்துல தொங்கிற டிவி ஒன்றை வாங்கினார். எலக்சன் சமயத்தில் வந்த இரண்டு டிவியில், எங்க அம்மா ஒன்னை எனக்கு கொடுத்துட்டாங்க. என் வீடும் சின்னது. அதுல நீங்க கொடுக்கும் இம்மாம் பெரிய டிவியை எங்கு வைக்கறது..?? வேண்டாம்மா, கடையில் போட்டா நானூறோ, ஐநூறோ கொடுப்பாங்க, பழசானாவே இந்த எலக்ட்ரானிக் அயிட்டங்களுக்கு விலையில்லைம்மா..” என்று மறுபடியும் 'கெக்கே பிக்கே'னு சிரித்தாள்.
எனக்கோ, ‘இன்ட்டிமேட்டான, சென்டிமெண்டான இந்த விஷயம், யாருக்கும் புரியலையே..! எல்லோருக்கும் சிரிப்பா இருக்கே..!' என வருத்தமாக இருந்தது.
எலக்ட்ரானிக் பொருட்கள் மட்டுமா மாறியது..? கிச்சனில், தேங்காய் துருவல் எங்கு போச்சுனே என்றே தெரில.
(தேங்காய் யூஸ் செய்யாதப்போ துருவல் எதற்கு..?)
ஸ்டீல் காபி பில்டர் போய் காபி மேக்கர் வந்தது. இப்போ அந்த ரெண்டும் இருக்குமிடமே தெரியல.
ஒன்லி க்ரீன் டீ தான்..
வெட்கிரைண்டர், மாதத்திற்கு ஒரு முறை அமாவாசை அன்று இட்லி, தோசைக்கு அரைக்க யூஸ் ஆனது. இப்போ அந்த “டில்டிங்”கிற்கும் வேலையில்லை. காலையும் நானே, மாலையும் நானே என சப்பாத்தி.. அதுவும் “சுக்கா” தான் சமையலறையில் சுத்தி சுத்தி வருது. இல்லேனா பாக்கெட் ரெடிமேட் அரிசி மாவு..
புட்டு குழாய், சேவை நாழி, தளி வடாம் ஸ்டேண்ட், சாம்பார் வைக்கும் பெரிய கெட்டி பாத்திரம், (திருச்சியில் வாங்கியது) ரசம் வைக்கும் கும்பகோணம் ஈயச்சொம்பு, முறுக்கு நாழி, பொறந்தாத்து சீதன உருளி
வெங்கலப்பானை, இன்னும் பல பொருட்கள்…
(எல்லாமே செல்வியும், கடைக்காரரும் வேண்டாம் என சொல்லியது)
பரண் இல்லாததால் இல்லாததால் (வீடுகளில் “லாப்ட்”டே இல்லையே) என் கட்டிலுக்கடியில் சாக்கு மூட்டையில் தூங்குகின்றன.
சென்டிமென்ட்டாகவும், வாஞ்சையாகவும் அவைகளைப் பார்த்தபடி ஆசையாய் துடைத்து துடைத்து போர்த்தி வைக்கிறேன்.
அன்று நம்கூட இருந்து, வேலை செய்து, நம்மை மகிழ்வித்தவை தானே இவை அனைத்தும்..!!
ஹும்…!!!
இன்று, கட்டாய ஓய்வு திணிக்கப்பட்ட முதியவையாக ஆகிவிட்டன. நாமும் ஒருநாள் இப்படி ஆகிவிடுவோம் என்பதில் சந்தேகமில்லை.

நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி