"கை கொடுக்கும் நம்பிக்கை"

"கை கொடுக்கும் நம்பிக்கை"



விதி சில நேரங்களில் மனிதனை வெட்டும் போது, அவனுடைய அடையாளத்தையும் சேர்த்தே வெட்டி விடுகிறது.


ராஜாவுக்கு நடந்த விபத்து அப்படித்தான். இரண்டு கைகளையும் இழந்தான். ஆனால் அதைவிட ஆழமாக, வாழ்க்கை மீதான நம்பிக்கையையும் இழந்தான்.


எல்லோரும் காட்டும் இரக்கத்தை

அறவே வெறுத்தான்.


அது நாள் வரையில் அவனுடன் ஒட்டி உறவாடிய அத்தைப் பெண் மீனா அவனத் தவிர்க்க ஆரம்பித்தாள். அது புரியாத ராஜா அவளிடம் முன் போலவே பழக, கோபமான மீனா, அவனைப் பரிகசிக்கும் விதமாக,


 "மாமா… நீங்க என்னை ஓவியமா வரையுங்க....அது நல்லா இருந்தா…

உங்களைத் திருமணம் செய்து கொள்கிறேன்.” என்றாள் நக்கலாய்.


அவளுக்கு அது விளையாட்டு.

ராஜாவுக்கு அது வாழ்வின் மறுபிறப்பு.


அன்று இரவு, அவனுக்குள் ஒரு சிறு தீப்பொறி. "கை இல்லாவிட்டால் என்ன... வாயால் தீட்டுகிறேன்"


அடுத்த நாள் பிரஷ் அவன் உதடுகளுக்கு இடையில் குடியேறியது.

பற்கள் வலித்தன. உதடுகள் கிழிந்தன. கழுத்து உறைந்தது.

ஆனால் மனம் தளரவில்லை.


முதல் கோடு நடுங்கியது. இரண்டாம் கோடு சற்றே தைரியம் கூடியது.

மூன்றாம் மாதம் பாதி ஓவியம் வந்தது.

ஆறாம் மாதம் ஓவியம் இறுதிக் கட்டத்தை எட்டியது.


மீனாவை அழைத்து அவளை எதிரே அமர வைத்து வாயால் பிரஷ்ஷை கவ்வி அவள் முகத்தை வரைய ஆரம்பித்தான்.


ஓவியம் முடிந்த போது அவளால் தன் கண்களையே நம்ப முடியவில்லை.


சரண்டர் ஆனாள். "மாமா… நான் குடுத்த வாக்குப்படி உங்களைத் திருமணம் செய்து கொள்ள நான் தயார்!” என்றாள்.


ராஜா சிரித்தான். ''மீனா...என்னைப் போல் இரு கைகளும் இல்லாதவன்

உனக்கு நிழலாக இருக்க முடியாது, வாழ்க்கை நீண்ட பாதை.... அதில் உனக்கு பாதுகாப்பாய்ப் பிடிக்க இரண்டு கைகள் வேண்டும்... அதனால் இரு கைகளும் உள்ள ஆடவனைப் பார்த்துத் திருமணம் செய்து கொண்டு வாழு!"


சொல்லி விட்டு அவன் நடந்தான்.



(முற்றும்)

முகில் தினகரன்

கோயமுத்தூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%