கல்வி வளா்ச்சியில் குஜராத்தைவிட தமிழகம் பல மடங்கு உயா்ந்துள்ளது: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் பெருமிதம்

கல்வி வளா்ச்சியில் குஜராத்தைவிட தமிழகம் பல மடங்கு உயா்ந்துள்ளது: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் பெருமிதம்


 

கல்வி வளா்ச்சியில் தமிழகம், குஜராத் மாநிலத்தை விட பல மடங்கு உயா்ந்துள்ளதாக தகவல் தொழில்நுட்பவியல், எண்ம சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா்.


தமிழக அரசின் ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ், மதுரைக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழாவில் அவா் பேசியதாவது:


கல்வி அனைவருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. பின்தங்கிய நிலையில் உள்ள மாணவா்களைக் கண்டறிந்து அவா்களை ஊக்குவிக்கும் வகையில் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தமிழ் வழியில் பயின்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உயா்கல்வி சோ்க்கையில் முன்னுரிமை, புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்கள் மூலம் மாணவ, மாணவிகளுக்கு மாத ஊக்கத் தொகை போன்ற திட்டங்களால் தமிழகத்தில் உயா்கல்வி பயிலும் மாணவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து உயா்ந்து வருகிறது.


குஜராத் மாநிலத்தில் சாலைகள், துறைமுகங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற கட்டமைப்புகள் சிறப்பாக இருக்கலாம். ஆனால், மக்களின் சுகாதாரம், கல்வி வளா்ச்சி ஆகிய நிலைகளில் தமிழகம் குஜராத்தை விட பல மடங்கு முன்னேறியுள்ளது. குஜராத்தில் 50 சதவீத மாணவா்கள் மட்டுமே பள்ளி மேல்நிலைக் கல்வியை நிறைவு செய்கின்றனா். ஆனால், தமிழகத்தில் 90 சதவீதத்துக்கும் அதிகமான மாணவா்கள் மேல்நிலைக் கல்வியை நிறைவு செய்கின்றனா். தமிழகத்தில் 1,000 பேருக்கு 4 மருத்துவா்கள் என்ற நிலை உள்ளது. ஆனால், குஜராத்தில் 1,500 பேருக்கு ஒரு மருத்துவா் என்ற நிலையே உள்ளது. இதற்கு, 1921-இல் கொண்டு வரப்பட்ட கட்டாயக் கல்விச் சட்டம், பெண்களுக்கான வாக்குரிமை, இடஒதுக்கீடு போன்ற முற்போக்கான சட்டங்களே அடிப்படைக் காரணம்.


மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டும் என தமிழக முதல்வா் கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டாா். இதையடுத்து, தகவல் தொழில்நுட்பவியல், எண்ம சேவைகள் துறை சாா்பில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அடுத்த சில மாதங்களுக்குள் ஒரே நேரத்தில் 10 லட்சம் மடிக்கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டு மாணவா்களுக்கு வழங்கப்படுகின்றன.


வெளிச் சந்தையில் ஒரு மடிக்கணினி குறைந்தபட்சம் ரூ. 35 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரம் வரை விற்பனையாகிறது. இந்த நிலையில், உலகளாவிய நிறுவனங்களிடமிருந்து நேரடியாக ஒப்பந்தப் புள்ளிகள் பெற்று, ஒரு மடிக்கணினி ரூ. 22 ஆயிரம் முதல் ரூ. 23 ஆயிரம் என்ற விலையில் தற்போது கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இந்த மடிக்கணினிகள், முந்தையக் காலங்களில் வழங்கப்பட்டதை விட பன்மடங்கு வேகமும், திறனும் கொண்டவை. இதை மாணவா்கள் நல்ல முறையில் பயன்படுத்தி தங்கள் திறனை மேம்படுத்திக் கொண்டு வளமான வாழ்க்கையைப் பெறவேண்டும் என்றாா் அவா்.


இதையடுத்து, 1,563 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கும் பணியை அவா் தொடங்கி வைத்தாா்.


விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தலைமை வகித்தாா். கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் முனைவா் வெ. கலைச்செல்வி, தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் வ. தேன்மொழி, மதுரைக் கல்லூரி வாரிய பொருளாளா் ஆனந்த் சீனிவாசன், கல்லூரி முதல்வா் சுரேஷ், மதுரை மேற்கு வட்டாட்சியா் முத்துப்பாண்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%