பிப்ரவரி 7ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை காதலர் வாரம் எனப்படும் வாலண்டைன் வாரமாக அனுசரிக்கப்படுகிறது. அதில் பிப்ரவரி 14, வாலண்டைன் தினம் எனப்படும் காதலர் தினம். ஒவ்வொரு நாளுக்கும் சிறப்புப் பெயர் உண்டு.
பிப்ரவரி 7 – ரோஜா தினம். காதலின் ஆழத்தை வெளிப்படுத்தும் சிவப்பு நிற ரோஜாப் பூக்கள், பூங்கொத்துகள் பரிமாறிக் கொள்வார்கள்.
பிப்ரவரி 8 – காதலை வெளிப்படுத்தும் நாள். நேசித்தவரிடம் வெளிப்படையாக, காதலை எடுத்துச் சொல்லும் நாள்.
பிப்ரவரி 9 - சாக்லெட் தினம். அன்பின் அடையாளமான சாக்லெட்டை பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளும் நாள்.
பிப்ரவரி 10 – பொம்மைக் கரடி தினம். இளம் பெண்களுக்குப் பிடித்த பொம்மையாக டெட்டி பேர் கருதப்படுகிறது. இன்றைய நாளில் காதலிக்குப் பிடித்தமான வண்ண பொம்மை கரடியைப் பரிசளிப்பார்கள்.
பிப்ரவரி 11 – வாக்குறுதி நாள். எந்த நிலையிலும் நாங்கள் பிரியமாட்டோம் என்று காதலர்கள் உறுதி மொழி எடுத்துக் கொள்வார்கள்.
பிப்ரவரி 12 – அணைப்பு நாள். அன்பை வெளிப்படும் விதமாக காதலர்கள் தழுவிக் கொள்ளும் நாள்.
பிப்ரவரி 13 – முத்த தினம் – காதலர்கள் முத்தம் பரிமாறிக் கொள்வதின் மூலம் ஆசையை வெளிப்படுத்தும் நாள்.
பிப்ரவரி 14: காதலர் தினம். தரமான நேரத்தை ஒன்றாக அனுபவிப்பதின் மூலம், தம்பதிகள் மற்றும் காதலர்கள் இடையே பிணைப்பை வலுப்படுத்திக் கொள்ளும் நாள்.
ஒரு கேள்வி எழலாம். ஏன் பிப்ரவர் 14, வாலண்டைன் தினம் என்ற பெயர் பெற்றது .இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டதன் காரணம் என்ன?
கி.பி.மூன்றாம் நூற்றாண்டில் ரோம் நாட்டில் பேகன் மதம் பிரதான மதமாக இருந்தது. ரோம் அரசர் க்ளாடியஸ் பேகன் மதத்தைச் சேர்ந்தவர். அவர் ரோமானியப் படை வீரர்கள் திருமணம் புரிந்து கொள்ளாமல், தங்கள் வாழ்க்கையை நாட்டிற்கு அர்ப்பணம் செய்ய வேண்டும் என்று சட்டமியற்றினார்.
அப்போது, ரோம் நகரில் செயிண்ட் வாலண்டைன் என்ற கத்தோலிக்கப் பாதிரியார் வசித்து வந்தார். மக்கள் பலர் அவர் மூலமாக கிறித்துவ மதத்திற்கு மாறிக் கொண்டிருந்தனர். பாதிரியார் வாலண்டைன், படை வீர்ர்களுக்கு இரகசியமாக கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து வந்தார். அவர் ஆட்சிக்கு எதிராக சதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பாதிரியாருக்கு, சிறை அதிகாரியின் மகள் மீது காதல் ஏற்பட்டது. பாதிரியாரின் மரண தண்டனை, 270ஆம் வருடம், பிப்ரவரி 14 அன்று நிறைவேற்றப்பட்டது. இறப்பதற்கு முன்னால், சிறை அதிகாரியின் மகளுக்கு எழுதிய காதல் கடிதத்தில் உன்னுடைய வாலண்டைன் என்று கையொப்பம் இட்டிருந்தார்.
இது நடந்து 200 ஆண்டுகளுக்குப் பிறகு, பிப்ரவரி 14ஆம் தேதி செயின்ட் வாலண்டைன் தினம் என்று அறிவிக்கப்பட்டது. உலகில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் வாலண்டைன் தினம் கொண்டாடப்படுகிறது.
கே.என்.சுவாமிநாதன்,
சென்னை
06-02-2025