செல்வம் பெயரில் மட்டும் தான், தினப்படி சோத்துக்கே வழியில்லை. எந்த வேலையும் சரியாக கிடைக்கவில்லை. தன்னுடைய குடும்பம் பட்டினியால் வாடுவதை அவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை. எப்போதாவது கூலி வேலை கிடைக்கும். கூலி வேலைக்கு சென்றாலும் சரியாக சம்பளம் கிடைப்பதில்லை. அதனால் குடும்பம் நடத்த அவனால் முடியவில்லை. கண்ணில் பட்ட உணவுப் பொருள்களை திருட ஆரம்பித்தான். கொஞ்சம் கொஞ்சமாக கோவில் உண்டியலை உடைத்து அதில் உள்ள பணத்தை பொருளையும் மற்றும் எங்கெல்லாம் பணம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் திருடினான். நாளடைவில் திருட்டை தொழிலாகவே மாற்றிக் கொண்டான் இப்பொழுது குடும்பம் மூன்று வேலையும் சாப்பிட்டு சந்தோஷமாக மாறியது .ஆனால் சில நாட்களுக்குப்பிறகு அது நடக்க முடியாமல் போனது."பல நாள் திருடன் ஒருநாள் சிறையில் "என்ற பழமொழிக்கு ஏற்ப ஒரு நாள் கோவில் உண்டியலில் திருடும்போது கையும், களவுமாக மாட்டிக் கொண்டான். சிறைக்கு சென்றான் .தண்டனை முடிந்து இன்று தான் விடுதலை ஆகிறான். சிறையில் அவன் வேலை செய்ததற்கான கூலியாக சில ஆயிரங்கள் அவனிடம் கொடுத்தார்கள். கையில் பணத்துடன் வெளியே வந்து பார்த்தான். இதுநாள் வரை அவனது குடும்பத்தார் சிறையில் வந்து அவனைப் பார்க்கவே இல்லை .அதை நினைத்துக் கொண்டே இன்றாவது யாரேனும் வந்திருப்பார்களோ? என்று நினைத்தபடி வெளியே வந்தான். இன்றும் யாரும் வரவில்லை .கனத்த இதயத்துடன் சொந்த ஊருக்கு சென்றான். ஆனால் அவன் இருந்த வீடு பூட்டி இருந்தது. பக்கத்தில் உள்ளவர்களிடம் அவன் குடும்பத்தை பற்றி விசாரித்தான். ஒருவரும் சரியாக பதில் சொல்லவில்லை. குடும்பத்தில் உள்ளவர்கள் எங்கே சென்றார்கள்? என்று யாருக்கும் தெரியவில்லை .அவன் என்ன செய்வது ?என்று தெரியாமல் ஊருக்கு வெளியே இருக்கும் கோவிலுக்கு வந்தான். சாமியை கும்பிட்டான். அங்கு மரத்தடியில் ஒரு துறவி படுத்திருந்தார். இவனும் அவர் அருகில் சென்று படுத்துக்கொண்டான். துறவி ,யாரப்பா நீ? ஊருக்கு புதுசா ?என்று கேட்டார் .அதற்கு செல்வம் நடந்த கதைகளை கூறினான். அதைக்கேட்ட துறவி என்னப்பா இது உன்னோட கதை வால்மீகி முனிவர் கதை போல் உள்ளது என்று கூறினார். செல்வம் உடனே வால்மீகியா, யாரது? என்று கேட்டான். வால்மீகி முனிவரை உனக்குத் தெரியாதா? என்று கேட்டார். தெரியாது, எனக்கு அவரைப் பற்றி சொல்லுங்கள் என்றான் ரத்னாகர் என்ற கொள்ளைக்காரர் காட்டில் வசித்து வந்தான் .காட்டின் வழியாக செல்லும் பயணிகளை வழிமறித்து, அவர்களிடம் உள்ள பணம் ,பொருள், நகைகள் என எல்லாவற்றையும் கொள்ளை அடித்து குடும்பம் நடத்தி வந்தான் .ஒரு நாள் நாரதர் அந்த காட்டின் வழியே சென்றார். அவன் அவரிடம் கொள்ளை அடிப்பதற்காக வந்து முன்னே நின்று மிரட்டினான். நாரதர் என்னிடம் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால், நீ செய்வது பாவம் இல்லையா? என்று ரத்னாகரை கேட்டார் .நான் என் குடும்பத்திற்காக இந்த பணத்தை செலவு செய்கிறேன் என்றார். உடனே ,நாரதர் நீ செய்யும் பாவத்திலும் அவர்களுக்கு பங்கு உண்டா என கேட்டார்? அதற்கு ரத்னாகர் அவர் மனைவியிடம், பாவத்திலும் உங்களுக்கு பங்கு உண்டு தானே என்றார் அவன் மனைவியோ நீ செய்யும் புண்ணியத்தில் மட்டும் தான் எங்களுக்கு பங்கு உண்டு ,ஆனால் பாவத்தில் எங்களுக்கு பங்கு இல்லை என கூறிவிட்டார். அப்பொழுதுதான் ரத்னாகருக்கு ஞானம் பிறந்தது .உடனே நாரதரிடம் இந்த பாவத்தை போக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும் ?என கேட்டார் .அதற்கு நாரதர் ராம நாமத்தை ஜெபிக்க வேண்டும் என்று சொன்னார். ரத்னாகருக்கு இராமா என்று சொல்ல முடியவில்லை அதற்கு நாரதர் நீ எல்லோரையும் என்ன செய்தாய் என்று கேட்டார் ? "மாரா" என்று கூறினான். மாரா என்றால் கொல்வது என்று பொருள் .அதையே கூறு என்றார் .மாரா என்று திரும்பத் திரும்ப கூறச் சொன்னார் அப்படி கூறும் போது "மாரா "என்பது" ராமா" என்று மாறியது. அப்படியே ஒரு மரத்தடியில் கண்ணை மூடி இறைவனை பக்தியுடன் ராமா ராமா என்று கூறி நீண்ட நாட்கள் கடுமையாக தவம் செய்தார். அவரைச் சுற்றி எறும்புகள் புற்றுக் கட்டியது .எறும்பு புற்றுக்கு சமஸ்கிருதத்தில் "வால்மீகா"என்று பொருள்.அதனால் தான் அவருக்கு வால்மீகி என்று பின்னர் அழைக்கப்பட்டது. நீண்ட கால தவத்திற்கு பிறகு ஞானம் பெற்றார் .பிறகு ராமாயணத்தை சமஸ்கிருதத்தில் முதலில் எழுதியவரும் இவரே ஆவார். இவரை "ஆதி கவி "என்றும் கூறுவார்கள் .என்று துறவி செல்வத்திடம் கூறினார். செல்வமும் தன்னுடைய பாவங்களை போக்க எல்லா கோவில்களுக்கும் சென்று இறைவனை வேண்டி அங்குள்ள ஏழை எளியவர்களுக்கு என் கையில் உள்ள பணத்தையும் அவர்களுக்கு தானமாக கொடுத்து உதவி செய்து புண்ணியத்தை தேடிக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

எம் .எல் .பிரபா.
ஆதம்பாக்கம்.
சென்னை 88