குளித்தலை, பிப்.
கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு காவிரி நதியில் புனித நீராடினர்.
காலைக்கடம்பர் எனப் போற்றப்படும் முற்றிலாமுலையம்மை உடனுறை கடம்பவனேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா பூச நட்சத்திரத்தில் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுத் திருவிழாவை முன்னிட்டு கடந்த ஜனவரி 16ஆம் தேதி முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 1ஆம் தேதி தைப்பூசத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி, நேற்று மாலை சுமார் 4 மணியளவில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு, திருச்சி மாவட்டம் முசிறி கற்பூரவள்ளி உடனுறை சந்திரமவுலீஸ்வரர் கோயில், வெள்ளூர் சிவகாமசுந்தரி உடனுறை திருக்காமேஸ்வரர் கோயில், திருஈங்கோய்நாதர் மலை மரகதாம்பாள் உடனுறை மரகதாசலேஸ்வரர் கோயில், பெட்டவாய்த்தலை பாலாம்பிகை உடனுறை மத்தியார்ஜூனேஸ்வரர் கோயில், குளித்தலை முற்றிலாமுலையம்மை உடனுறை கடம்பவனேஸ்வரர் கோயில், ராஜேந்திரம் தேவநாயகி உடனுறை மத்தியார்ஜூனேஸ்வரர் கோயில், அய்யர்மலை சுரும்பார் குழலி உடனுறை ரத்தினகிரீஸ்வரர் கோயில் மற்றும் கருப்பத்தூர் சுகந்த குந்தாளம்பிகை உடனுறை சிம்மபுரீஸ்வரர் கோயில் ஆகிய எட்டு ஊர் திருக்கோயில்களில் இருந்து சோமஸ்கந்தர் உற்சவ மூர்த்திகளுடன் சுவாமி–அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில், மேளதாளங்கள் முழங்க அலங்கரிக்கப்பட்ட தேரில் ஊர்வலமாக புறப்பட்டு குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயிலை வந்தடைந்தனர்.
மாலை சுமார் 3 மணியளவில் சுவாமிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, கடம்பன் துறை காவிரி ஆற்றுக்கு ஊர்வலமாக சென்று, சிவாச்சாரியார்கள் அஷ்டதேவருடன் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி “அரோகரா” கோஷங்களை எழுப்பினர்.
பின்னர், கடம்பன் துறை காவிரி கரையில் அமைக்கப்பட்ட அலங்கரிக்கப்பட்ட பந்தலில், எட்டு ஊர் சுவாமி–அம்பாள் உற்சவ மூர்த்திகள் விடிய விடிய பக்தர்களுக்கு தரிசனம் அளித்தனர்.
திருவிழாவை முன்னிட்டு, அனைத்து துறை சார்பிலும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பாதுகாப்பு பணிக்காக, 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் ஊர்காவல் படையினர், குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.