வெள்ளியங்கிரி மலை ஏற்றம் தொடக்கம்: விதிமுறைகளை கடைபிடிக்க பக்தர்களுக்கு அறிவுரை

வெள்ளியங்கிரி மலை ஏற்றம் தொடக்கம்: விதிமுறைகளை கடைபிடிக்க பக்தர்களுக்கு அறிவுரை



கோவை, பிப். 


தென் கைலாயம் என அழைக்கப்படும் கோவை அருகேயுள்ள வெள்ளியங்கிரி மலைக்கு ஆண்டு தோறும் நடைபெறும் யாத்திரை, ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. பிப்ரவரி 1 முதல் மே 31 வரை நான்கு மாத காலத்திற்கு மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் அடிவாரத்தில், ஞாயிற்றுக் கிழமை காலை பூசைகளுடன் மலைப்பாதை திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிவ நாமம் முழங்க பக்தர்கள் மலையேற்றத்தைத் தொடங்கினர். முதல் மலையில் உள்ள வெள்ளை பிள்ளையார் தரிசனம் தொடங்கி, சுனை நீர் தீர்த்தம், வழியிலுள்ள தெய்வங்களை வழிபட்டு, ஏழாவது மலையில் எழுந்தருளியுள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் சுயம்பு லிங்கம் வரை சென்று பூஜைகளை தரிசிப்பது பக்தர்களுக்கான சிறப்பு அம்சமாகும்.


மலையேற்றம் தொடங்கிய முதல் நாளிலேயே 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறியதாக தெரிவிக்கப்பட்டது. பக்தர்கள் வருகையை முன்னிட்டு, மருத்துவ வசதி, குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


நெகிழி பொருட்களுக்கு தடை


இதுகுறித்து பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் சிவ கணேஷ் கூறுகையில், மலையேறும் பக்தர்கள் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மலையேற்றத்தின் போது காலணி அணியக் கூடாது என்றும், நெகிழிப் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.


கடந்த ஆண்டு மலையிலிருந்து 12 டன் நெகிழி கழிவுகள் அகற்றப்பட்டதாக குறிப்பிட்ட அவர், நடப்பாண்டில் நெகிழிப் பைகள் பயன்பாட்டை முழுமையாக தவிர்க்க வேண்டும் என்றார். குடிநீருக்காக எடுத்துச் செல்லும் பாட்டில்களை மீண்டும் அடிவாரத்திற்குக் கொண்டு வர வேண்டும்; துணி, பிளாஸ்டிக், எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை மலைப்பகுதிகளில் விட்டுச் செல்லக் கூடாது என்றும் தெரிவித்தார்.


வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதியாக இருப்பதால், பக்தர்கள் பாதுகாப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், வனத்துறையுடன் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


இதனைத் தொடர்ந்து, மலையடிவாரத்தில் உள்ள கடைகளில் அறங்காவலர் குழுவினரும் அதிகாரிகளும் இணைந்து திடீர் சோதனை மேற்கொண்டனர். தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளில் தின்பண்டங்கள் விற்பனை செய்த கடைகளுக்கு உடனடியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. விதிமீறல் தொடர்ந்தால் உரிமம் ரத்து உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. நெகிழிப் பைகளில் தின்பண்டங்கள் விற்பனை செய்த ஒரு கடைக்கு முதல் நாளிலேயே நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%