சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கைது

சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கைது

மத்திய அரசின் வி.பி. ஜிராம் ஜி திட்டத்தை கைவிட வலியுறுத்திபெங்களூரு கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கைது


பெங்களூரு, ஜன.


மத்திய அரசின் வி.பி. ஜி ராம் ஜி திட்டத்தை கைவிட வலியுறுத்தி கவர்னர் மாளிகையை முற்றுகையிட நடைபயணமாக சென்ற முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் பெங்களூருவில் பரபரப்பு ஏற்பட்டது.


காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி 100 நாள் ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மத்திய அரசு மாற்றியுள்ளது.இதற்கு பதிலாக 125 நாள் வேலை வழங்கும் வகையில் வி.பி. ஜி ராம் ஜி என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. குறிப்பாக பா.ஜ.க. ஆட்சி இல்லாத மாநிலங்களான கேரளா, கர்நாடகம், தமிழ்நாடு உள்ளிட்டவை எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.


ஏற்கனவே வி.பி. ஜி. ராம் ஜி திட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதுபோல் கர்நாடக அரசும் சட்டசபையில் இந்த திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்துள்ளது.


இந்த நிலையில் கர்நாடக காங்கிரஸ் சார்பில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை ரத்து செய்ததை கண்டித்தும், வி.பி. ஜி ராம் ஜி சட்டத்தை கைவிடக் கோரியும் மத்திய அரசை கண்டித்து போராட்டம் பெங்களூரு சுதந்திர பூங்காவில் நேற்று நடைபெற்றது. இதற்கு முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.


இதில் கட்சி மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா மற்றும் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் மத்திய அரசை கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி இருந்தனர்.


இதில் சித்தராமையா பேசியதாவது:-


கிராமப்புறங்களில் ஏழை மக்களின் துயர் துடைக்கும் நோக்கத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை முந்தைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு அமல்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் தொழிலாளிகளுக்கு ஆண்டுக்கு குறைந்தது 100 நாட்கள் வேலை உத்தரவாதம் வழங்கப்பட்டது.


ஏழைகளுக்கு வேலை உரிமை என்பது அரசியல் சாசனத்துக்கு உட்பட்டது. ஆனால் இந்த உரிமையை மத்திய அரசு வி.பி. ஜி ராம் ஜி திட்டம் மூலம் பறித்துக் கொண்டுள்ளது. கர்நாடகத்தில் மட்டும் 71 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.


இதில் 53 சதவீதம் பெண்கள், 28 சதவீதம் பேர் தலித், பழங்குடியினர் ஆவார்கள். 5 லட்சம் பேர் மாற்றுத்திறனாளி தொழிலாளர்களும் உள்ளனர். புதிய திட்டத்தின்படி வேலை செய்யும் இடம், வேலை நாட்கள் குறித்து மத்திய அரசே தீர்மானிக்கும். விவசாயிகளின் நிலங்களில் இந்த தொழிலாளர்கள் வேலை செய்ய முடியாது. மேலும் இந்த திட்டத்துக்கு மத்திய அரசு 90 சதவீதத்துக்கு பதிலாக 60 சதவீத நிதியை மட்டுமே வழங்கும். 40 சதவீதத்தை மாநில அரசு வழங்க வேண்டும். இது மக்களுக்கு எதிரான திட்டம் ஆகும். ஊரக பகுதி மக்களின் வேலையை பறித்துக் கொண்டுள்ளனர். இத்தகைய மக்கள் விரோத திட்டத்தை கொண்டுவர பா.ஜ.க.வுக்கு ஆர்.எஸ்.எஸ். உந்துசக்தியாக இருந்துள்ளது. ஏழை மக்கள் பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடையக்கூடாது என்பது தான் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நோக்கம் ஆகும்.


அதனால் மத்திய அரசின் இந்த புதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஏற்கனவே இருந்த மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். இதுதொடர்பாக கிராம, தாலுகா, மாவட்ட அளவில் போராட்டங்களை நடத்த திட்டமிட்டு உள்ளோம்.


இவ்வாறு அவர் பேசினார். இந்த போராட்டத்தில் பங்கேற்ற சித்தராமையா, டி.கே.சிவக்குமார் உள்பட அனைத்து காங்கிரஸ் தலைவர்களும், நிர்வாகிகளும் கூலி தொழிலாளர்கள் போல் துண்டால் தலைப்பாகை கட்டியிருந்தனர். சில தலைவர்கள் கைகளில் கருப்புநிற ரிப்பன் கட்டியிருந்தனர்.


இந்த போராட்டத்தை தொடர்ந்து முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா மற்றும் அமைச்சர்கள் கவர்னர் மாளிகையை முற்றுகையிட நடைபயணமாக சென்றனர்.


ஆனால் கவர்னர் மாளிகைக்கு செல்ல போலீசார் அனுமதி அளிக்க வில்லை. இதனால் அவர்கள் தடையை மீறி நடைபயணம் செல்ல முயன்றனர். இதனால் போலீசாருக்கும், காங்கிரசாருக்கும் இடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் உள்பட 1,000-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள் அனைவரை யும் போலீசார் கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினர்.


இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சிறிது நேரத்திற்கு பிறகு கைதான அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.


இதையடுத்து சித்தராமையா, டி.கே.சிவக்குமார், அமைச்சர்கள் உள்பட 26 பேர் மட்டும் லோக் பவனுக்கு (கவர்னர் மாளிகை) சென்று கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்து, வி.பி. ஜி.ராம்.ஜி திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, கோரிக்கை மனு கொடுத்தனர். அதன்பிறகு அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%