சென்னை: டபுள் இன்ஜின் அரசு இருக்கும் மாநிலங்களில் வேகமான வளர்ச்சி அடைவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி பாஜகவின் தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக மக்களிடம் இருந்து கருத்து கேட்கும் இயக்கத்தை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, மக்களிடம் இருந்து கருத்துகளைப் பெறுவதற்காக, 38 மாவட்டங்களுக்கும் பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும், பொதுமக்கள் தங்களது கருத்துகளை அளிப்பதற்கான விண்ணப்பங்களை பெறுவதற்கு 7878786060 என்ற செல்போன் எண் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த எண்ணில் பொதுமக்கள் மிஸ்டு கால் கொடுத்தால், அந்த எண்ணுக்கு வரும் லிங்க்கை கிளிக் செய்து, விண்ணப்பப்படிவத்தை பெற்று, அதை பூர்த்தி செய்து தேர்தல் அறிக்கை குழுவிடம் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது: கடந்த 2021-ல் முதல்வர் ஸ்டாலின் கொடுத்த தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த 500 வாக்குறுதிகளில் 90 சதவீதம் நிறைவேற்றவில்லை. மக்களை ஏமாற்றுகிற தேர்தல் அறிக்கையை தயாரிப்பது திமுக. மக்களுக்காக மக்கள் கொடுக்கின்ற அறிக்கையை நிறைவேற்றி கொடுப்பது பிரதமர் மோடி.
டபுள் இன்ஜின் அரசு எங்கெல்லாம் இருக்கிறதோ, அந்த மாநிலங்கள் எல்லாம் வேகமான வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கின்றன. தென் மாநிலத்தில் முதல்முறையாக திருவனந்தபுரம் மாநகராட்சியைக் கைப்பற்றியிருக்கிறோம். அடுத்து சென்னை மாநகராட்சியைக் கைப்பற்றுவோம்.
தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை திமுகவுக்கு இல்லை. மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரம்மாண்ட மாநாட்டை பார்த்து திமுகவினருக்கு காய்ச்சல் வந்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசும்போது, ‘மக்களை மறந்துவிட்டு, குடும்பத்தின் நலனுக்காக மட்டுமே இன்று திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. தனது மகன் உதயநிதியை முதல்வராக்குவதற்கு, தனது கட்சிக்காரர்களை அடக்கவே ஸ்டாலின் இரும்புக் கரத்தை பயன்படுத்தி கொண்டிருக்கிறார். திமுக ஆட்சிக்கு முடிவு காலமும், தமிழகத்துக்கு விடிவு காலமும் வந்துவிட்டது” என்றார்.
இந்நிகழ்ச்சியில், பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மூத்த தலைவர் ஹெச்.ராஜா, மாநில துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், டால்பின் ஸ்ரீதர், தேர்தல் அறிக்கை குழுவில் இடம் பெற்றுள்ள அர்ஜுனமூர்த்தி, ஏ.என்.எஸ்.பிரசாத் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.