பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மெட்ரோ ரயில் இடைநிலை சீரமைப்பு பணி நிறைவு
சென்னை: பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து மெட்ரோ ரயில்களிலும் இடைநிலை சீரமைப்புப் பணிகள் நிறைவுபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து மெட்ரோ ரயில்களும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணிகளுக்கு உட்படுத்தப்படுகின்றன.
ஒவ்வொரு மெட்ரோ ரயிலும் மாதாந்திர காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு சோதனைகள் மூலம் முழுவதுமாக ஆய்வு செய்யப்பட்டு பராமரிக்கப்படுவதுடன், தகுதிச் சான்றும் வழங்கப்படுகிறது. இது தவிர ஒவ்வொரு மெட்ரோ ரயிலும் ஒரு பெரிய அளவிலான இடைநிலை சீரமைப்புப் பணிகளுக்கு உட்படுத்தப்படுகின்றன.
இந்த சீரமைப்புப் பணியின்போது, ரயில் முழுமையாகப் பிரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது. சக்கரங்கள் மற்றும் சஸ்பென்ஷன் அமைப்புகள் உட்பட ரயிலின் அடிப்பகுதியில் உள்ள முக்கிய பாகங்கள் அகற்றப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு, தேவைப்படும் இடங்களில் பழுதுபார்க்கப்பட்டு, மீண்டும் வண்ணம் பூசப்படுகின்றன. தேய்ந்துபோன பாகங்கள் மாற்றப்படுகின்றன.
மென்மையான பயணத்தை உறுதி செய்வதற்காக சக்கரங்கள் மறுவடிவமைப்பு செய்யப்படுகின்றன. மேலும் மறைந்திருக்கும் குறைபாடுகளைக் கண்டறிய மேம்பட்ட முறைகளைப் பயன்படுத்தி அச்சுகள் சோதிக்கப்படுகின்றன. பிரேக்குகள் மின் சாதனங்கள் மற்றும் குளிரூட்டும் இயந்திரங்கள் போன்ற அமைப்புகள் முழுமையாகப் பராமரிக்கப்படுகின்றன.
பாகங்கள் மீண்டும் பொருத்தப்பட்ட பிறகு, ரயில் விரிவான பாதுகாப்பு மற்றும் செயல்திறன் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது. இதில் பிரதான வழித்தடங்களில் வெவ்வேறு வேகங்களில் சோதனை ஓட்டங்கள் ஆகியவை அடங்கும்.
அனைத்து பாதுகாப்பு மற்றும் செயல்திறன் தரங்களையும் பூர்த்தி செய்த பின்னரே, தகுதிவாய்ந்த அதிகாரியால் அந்த ரயில் பயணிகள் சேவைக்கு உகந்தது எனச் சான்றளிக்கப்படுகிறது.
அந்த வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தனது முழு மெட்ரோ ரயில் தொகுதிக்கான திட்டமிடப்பட்ட சீரமைப்புப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?