" "
ஒரு சமயம் யசோதை குழந்தை கண்ணனை தன் மடியில் வைத்து கொஞ்சிக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் ஆக ஆக குழந்தை கனக்க ஆரம்பித்தது .பாரத்தை அவளால் தாங்க முடியவில்லை. உடனே யசோதை குழந்தையை மடியில் இருந்து கீழே இறக்கி தரையில் உட்கார வைத்தாள். திடீரென்று குழந்தை ஏன் கனமாக மாறியது? என்று அவளுக்கு புரியவில்லை. அவள் பெருமாளை நினைத்துக் கொண்டு பகவானே நீ தான் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக் கொண்டு வேலை செய்ய ஆரம்பித்தாள். கம்சனுக்கு அடிமையானவனும், அவனால் ஏவப்பட்டவனும் ஆகிய திருணாவர்த்தன் என்ற அசுரன் ,சுழல் காற்றின் வடிவில் அங்கு வந்தான் .கீழே உட்கார்ந்து இருந்த குழந்தை கண்ணனை அவன் தூக்கினான். குழந்தை தானே என்று மெதுவாக தூக்கினான். ஆனால் குழந்தை கண்ணன் மிகவும் கனமாக இருந்தார். அவனால் தூக்க முடியவில்லை. அவன் அசுரன் அல்லவா ,ஆதலால் மேலும் தன்னுடைய பலத்தை அதிகரித்துக் கொண்டு குழந்தை கண்ணனை தூக்கிச் சென்றான் .சுழல் காற்று உருவம் எடுத்து எல்லோருடைய கண்களிலும் புழுதியை வாரி இறைத்து எல்லா திசைகளிலும் பயங்கர சத்தத்தை எதிரொலிக்கச் செய்தான் .கோகுலம் முழுவதையும் பயமுறுத்தினான் .கீழே உட்கார்ந்திருந்த கண்ணனை தூக்கிக் கொண்டு மேலே ஆகாயத்திற்கு சென்றான். மேலே செல்லச் செல்ல குழந்தை கண்ணனின் எடையும் கூடிக் கொண்டே போனது. அவன் தான் சுமந்த பாரதத்தின் மிகுதியால் வேகம் குறைந்து சக்தி அற்றவனாக மாறினான் .மிகவும் பாரமாக இருந்ததால் அந்த அற்புதக் குழந்தையை பாறாங்கல்லோ என்று எண்ணி விட்டுவிட விரும்பினான் .ஆனால் அவனால் முடியவில்லை. ஏனென்றால் அவன் கழுத்தை குழந்தை கண்ணனின் கைகள் இறுக கெட்டியாக அழுத்தி பிடித்துக் கொண்டது .அதனால் குழந்தையை விட முடியவில்லை. வலியும் அதிகமாக இருந்ததால் கழுத்தில் இருந்த குழந்தையின் கையையும் அவனால் எடுக்க முடியவில்லை. நெடு நேர போராட்டத்திற்கு பின் அவன் கண் பார்வை இழந்து, குரலும் வெளிவராமல் உயிர் துறந்தான் திருணாவர்தன். அந்த அரக்கன் கோகுலத்தில் குழந்தை கண்ணனுடன் கீழே விழுந்து இறந்து கிடந்தான் . குழந்தை மட்டும் சிரித்துக் கொண்டே இருந்தது. ஆகாய மார்க்கத்தில் அசுரனால் கொண்டு செல்லப்பட்டு மரணத்தின் வாயிலிருந்து விடுபட்டு பத்திரமாய் வந்த அந்தக் குழந்தையை மீண்டும் வாரியணைத்துக் கொண்டால் யசோதை. குழந்தை கண்ணன் அம்மாவைப் பார்த்து சிரித்தான். இது கண்ணனுடைய லீலை என்று ஊர்மக்கள் எல்லோரும் சந்தோஷம் அடைந்தார்கள். அனைவருக்கும் ஆச்சர்யம் .ஆனால் குழந்தைக்கு அடிக்கடி ஆபத்து வருவதைக் கண்டு எல்லோரும் பயந்து போனார்கள். மேலும் நாம் அதிக கவனமாக குழந்தை கண்ணனை பாதுகாக்க வேண்டும் என்று கூறிக் கொண்டனர். காட்டுத்தீயாய் பரவியது இச்செய்தி. கம்சனின் காதுகளுக்கு சென்றது. அவன் மேலும் கோபம் அடைந்தான். கண்ணனை கொல்ல முடியவில்லை என்று எண்ணியபடி அடுத்த முயற்சியை கையாண்டான் கம்சன்.

எம்.எல் .பிரபா
ஆதம்பாக்கம்.