கோயில் உண்டியல் உடைக்கப்பட்ட இரவு, வெற்றிகரமாகத் தான் அதை நடத்தி முடித்து விட்டோமென்று முத்து பெருமிதப் பட்டுக் கொண்டிருந்தான்.
அடுத்த நாள் மாலை.
முத்துவின் வீட்டு வாசலில் கோயில் நிர்வாகி நின்றிருந்தார்.
வெலவெலத்துப் போனான் முத்து.
“நேத்து ராத்திரி கோயிலுக்குள் போனது நீ தானே?” அதட்டலாய்க் கேட்டார்.
முத்துவின் தொண்டை வறண்டு போனது. நெற்றியில் வியர்வை ஆறு.
மொபைலில் இருந்த அந்த சிசிடிவி வீடியோ ஓடியது.
தலையில் கையை வைத்துக் கொண்டான் முத்து
“இதை நான் போலீஸ்ல கொடுத்தா உன் வாழ்க்கை முடிஞ்சுடும்,”
என்று நிர்வாகி மெதுவாகச் சொன்னார்.
"ஐய்யோ... வேண்டாங்க ஐயா... வேண்டாங்க ஐயா" கெஞ்சினான் முத்து.
“சரி... உன்னைப் பார்த்தாலும் பாவமாயிருக்கு... நான் போலீஸுக்குப் போகலை... மரியாதையா எடுத்ததையெல்லாம் என் கிட்டே குடுத்துடு....நான் கொண்டு போய் சத்தமில்லாமல் உண்டியல்ல வெச்சிடறேன்" என்றார் நிர்வாகி.
அடுத்த நிமிடமே அவன் மொத்தப் பணத்தையும் நிர்வாகியின் கையில் வைத்தான். "இவ்வளவுதானுங்க ஐயா…”
"எதையும் மறைக்கலையே?'"
"சத்தியமா இல்லைங்க ஐயா"
அவர் சென்றதும் முத்துவுக்கு நிம்மதியாயிருந்தது.
மூன்றாம் நாள் போலீஸ் ஜீப் முத்துவின் வீட்டை நோக்கி வந்தது.
“முத்து... கோயில் கொள்ளை சம்பந்தமா உன்னை கைது செய்றோம்.”
அவன் திகைத்தான்.
“சார்… நான்… திருப்பி”
அவனைக் கையமர்த்திய போலீஸ் அதிகாரி மொபைல் காட்டினார்.
CCTV காட்சி.
திருடும் முத்து.
திருப்பிக் கொடுக்கும் காட்சி இல்லை.
நிர்வாகி கொடுத்த புகார்.
“எடுத்த பணம் இன்னும் திரும்பவில்லை” என்று.
முத்துவின் கண்கள் வெறித்தன.
நிர்வாகி நல்ல பிள்ளை போல் கூட்டத்தில் நின்று கொண்டிருந்தார்.
அந்த நொடியில் முத்துவுக்கு புரிந்தது.
செய்த வினைகளின் விளைவு நிச்சயம் துரத்தும். இன்று என்னைத் துரத்துகிறது. நாளை அந்த நிர்வாகியைத் துரத்தும்.
(முற்றும்)

முகில் தினகரன்
கோயமுத்தூர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?