அமராவதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற கலப்பட நெய் விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க விசாரணை கமிஷனை அமைக்க ஆந்திர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் கலப்பட நெய் உபயோகப்படுத்தி, பிரசாதம் தயாரிக்கப்பட்டதாக 2024-ல் சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்ததும் பகிரங்கமாக அறிவித்தார். ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சி காலத்தில் நடந்த இந்த மாபெரும் குற்றத்தை கண்டுபிடிக்க முதலில் ஆந்திர அரசு சிறப்பு புலனாய்வு குழுவை (எஸ்ஐடி) அமைத்தது.
ஆனால், இக்குழு பாரபட்சமாக விசாரணை நடத்தும் என்பதால் சிபிஐ விசாரணை தேவை என ஒய்எஸ்ஆர் காங்கிரஸார் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.
இந்த சிறப்பு புலனாய்வு குழு, இதுவரை 14 பேரை கைது செய்துள்ளது. இவர்கள் அனைவரையும் நெல்லூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு மற்றும் சிபிஐ நீதிமன்றங்களில் ஆஜர் படுத்தியது. இதில் பல்வேறு பால் உற்பத்தி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். மேலும், ஏ-34 குற்றவாளியாக திருப்பதி தேவஸ்தான அதிகாரியான விஜயபாஸ்கர் ரெட்டி கைது செய்யப்பட்டார்.
அப்போது அவர் புலனாய்வு குழுவுக்கு கொடுத்த வாக்கு மூலத்தில், “கலப்படம் செய்த நெய்யை பரிசோதனை செய்ததும் அதில் கலப்படம் உள்ளது என்பதை அறிந்தேன். இதனை அந்தந்த நிறுவனங்களுக்கு எடுத்துக் கூறினேன். ஆனால், அவர்கள், எனக்கு லஞ்சம் கொடுத்து நெய்யை தொடர்ச்சியாக விநியோகம் செய்து வந்தனர். இதன் மூலம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ.118 கோடி நஷ்டம் ஏற்பட்டது. 2023-ல் போலே பாபா நெய் நிறுவனத்தில் இருந்து ரூ.75 லட்சம், பிரீமியர் நிறுவனத்தில் இருந்து ரூ.8 லட்சமும் லஞ்சமாக வாங்கினேன்" என வாக்கு மூலம் அளித்தார்.
இதைத் தொடர்ந்து குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே, தேவஸ்தான நிர்வாக அதிகாரியாக இருந்த அனில்குமார் சிங்காலை ஆந்திர அரசு அப்பதவியில் இருந்து நீக்கி அவருக்கு பதிலாக சீனியர் ஐஏஎஸ் அதிகாரி ரவிச் சந்திராவை நியமனம் செய்துள்ளது. ஆனால், ஜவஹர் ரெட்டி, தர்மா ரெட்டி ஆகியோர் மீது ஆந்திர அரசு எவ்வித நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்க வில்லை. மேலும், அப்போதைய அறங்காவலர் குழுக்கள் மீது எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை இல்லை.
இது தற்போது ஆந்திர அரசியலில் பெரும் அரசியல் புயலை வீச தொடங்கி உள்ளது. இந்நிலையில், நேற்று அமராவதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை குழுவில், கலப்பட நெய் விவகாரம் குறித்து சரிவர புலனாய்வு விசாரணை நடக்க வில்லை என்பதால், உண்மையான குற்றவாளி யார் என விசாரிக்க விரைவில் விசாரணை கமிஷன் அமைக்க ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.