திருவண்ணாமலையில் 242 மாணவர்களுக்கு ரூ.28 லட்சம் கல்வி உதவித் தொகை: விஐடி வேந்தர் விசுவநாதன் வழங்கினார்
திருவண்ணாமலை, பிப்.–
‘‘கல்வியால் வீடும், நாடும் உயரும்’’ என்று விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் உறுதிப்படத் தெரிவித்தார்.
அனைவர்க்கும் உயர்கல்வி அறக்கட்டளை சார்பில் முதல் முறையாக திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நேற்று நடந்தது. கோ.விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் 242 மாணவர்களுக்கு ரூ.28 லட்சம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டது.
சிறப்பு விருந்தினராக, தமிழக சட்டப்பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி கல்வி உதவித்தொகை வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
‘‘இந்தியாவில் உயர்கல்வியில் சாதனை படைத்த மாநிலமாக உள்ளது. அகில இந்திய சராசரியை விட தமிழ்நாடு 50 சதவீதத்துடன் முதல் இடத்தில் உள்ளது.
வடஆற்காடு மாவட்டங்களில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். திராவிட இயக்கத்தின் வளர்ச்சியால் தமிழகம் கல்வியால் முன்னேறி உள்ளது.
கல்வி, பொருளாதாரத்தில்
பின்தங்கிய வடஆற்காடு
வடஆற்காடு மாவட்டங்கள் கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளது. இந்தியாவுக்கு பீகார் போல, தமிழ்நாட்டுக்கு பீகார் போல வடஆற்காடு மாவட்டங்கள் உள்ளன. கல்வியால் எந்த மாற்றத்தையும கொண்டு வர முடியும். கல்வி வீட்டை, நாட்டையும் உயர்த்தும். இந்தியாவில் உள்ள 750 மாவட்டங்களில் வடஆற்காடு மாவட்டம் முதல் இடத்துக்கு வர வேண்டும். அது நம்மால் முடியும்.
உயர்கல்விக்கு வரும்போது அரசின் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறைவாகத் தான் சேர்க்கப்படுகிறது. திருவள்ளூர் பல்கலைக்கழகம் ஆரம்பித்து 22 ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது ஆயிரம் பேர் தான் மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் ஆயிரத்துக்கும் குறைவாக மாணவிகள் படித்து வருகின்றனர். இதை மாற்றி அமைக்கத்தான் அனைவர்க்கும் உயர்கல்வி கட்டளை தொடங்கி மாணவர்கள் உயர்கல்வி பெற உதவித்தொகை வழங்கி வருகிறோம். இதன் மூலம் மிகப்பெரிய அளவில் வரலாற்றை படைக்கப் போகிறோம்.
எனது பிறந்த நாளில் விஐடி ஆசிரியர்கள், பணியாளர்கள் வழங்கிய ரூ.96 லட்சம் தொகை அனைவர்க்கும் உயர்கல்வி அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது. இதுவரை 13 கோடி வரை கல்வி உதவித்கொகை கொடுத்துளோம். இது இன்னும் உயரும். 242 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
ஆண்டுக்கு 100 பேருக்கு
இலவசக் கல்வி
விஐடி நிறுவனம் சார்பில் ஸ்டார்ஸ் திட்டத்தில் ஆண்டுக்கு 100 பேர் தேர்ந்தெடுத்து இலவசக் கல்வி அளித்து வருகிறோம். இதன்மூலம் அவர்கள் மாத ஊதியமாக ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பெறுகின்றனர்.
கல்வி மூலம் வீடும், நாடும் பயன்பெறுகிறது. இதுபோன்ற முன்னேற்றத்தை அளிக்கும் கல்வியில் நாம் முதல் இடத்துக்கு வர வேண்டும். இந்தியா முன்னேற வேணடும். தமிழ்நாடு முன்னேற வேண்டும்.
வடஆற்காடு மாவட்டம் முதன்மையாக வர வேண்டும். அயல்நாடுகளோடு போட்டி போட வேண்டும். ஏழைகளே இல்லாத மாவட்டமாக இருக்க வேண்டும். குடிசைகள் இல்லாத மாவட்டமாக மாற்றப்பட வேண்டும். கல்வியால் தான் முடியும். அழியாத கல்வி செல்வத்தை நமது குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.