3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் கமிஷன் அதிரடி உத்தரவு

3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் கமிஷன் அதிரடி உத்தரவு


புதுடெல்லி, பிப்.


3 ஆண்டுகள் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.


தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற வுள்ளது. தேர்தல் பணிகளை இந்திய தேர்தல் கமிஷன் நீவிரப்படுத்தி உள்ளது. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது.


இந்தநிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநில தலைமைச் செயலாளர்கள், தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் கமிஷன் கடிதம் அனுப்பி உள்ளது. அதில், அரசு அதிகாரிகள் சொந்த மாவட்டத்தில் பணியாற்றி வந்தாலோ?, ஒரே மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்குமே பணியாற்றி வந்தாலோ அவர்களை உடனடியாக பணியிடமாற்றம் செய்ய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மாநில தலைமையகத்தில் பணியாற்று பவர்களை இந்த கணக்கில் எடுக்கத் தேவையில்லை. 3 ஆண்டுகள் பணியை நிறைவு செய்பவர்கள் என்ற பட்டியலில் வரும் அதிகாரிகளை, அதே வருவாய் மாவட்டம் என்றாலும் மாநில தலைமையகத்திற்கு பணியிட மாற்றம் செய்யலாம். இதுபோன்ற நடவடிக்கைகளின் போது, சம்பந்தப்பட்ட அதிகாரி சொந்த மாவட்டத்துக்குப் பணியிட மாறுதலாகிச் செல்லாதவாறு அதிகாரிகள் பார்த்துக்கொள்ள வேண்டும். மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர் கள் போன்ற அதிகாரிகளை, கடந்த சட்டமன்ற தேர்தல் அல்லது இடைத்தேர்தலின் போது நியமிக்கப் பட்டிருந்த இடத்தில் கண்டிப்பாக நியமிக்கக்கூடாது. இந்த உத்தரவு, தேர்தல் பணிக்காக நியமிக்கப்படும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள், வாக்குப்பதிவு அலுவலர்கள், உதவி வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு மட்டுமல்லாமல் துணை ஆட்சியர்கள், தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அவர்களுக்கு இணையான பதவி நிலையில் உள்ள மாவட்ட அதிகாரிகளுக்கும், மாநகராட்சி, நகராட்சி ஆணையர், மாநகராட்சி மற்றும் மேம்பாட்டு ஆணையங்களின் அலுவலர்களுக்கும், காவல் துறையில் கூடுதல் டி.ஜி.பி. முதல் இன்ஸ்பெக்டர் வரையிலான அதிகாரிகளுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை காவலர்களுக்கும் பொருந்தும். கணினி பணி, சிறப்புப் பிரிவு பணி, பயிற்சி ஆகியவற்றில் உள்ளவர்களுக்கு இது பொருந்தாது, காவல் துறை அதிகாரிகளையும் சொந்த மாவட்டத்தில் பணியமர்த்தக்கூடாது. தேர்தலுடன் நேரடித் தொடர்பில் இல்லாத டாக்டர், என்ஜினீயர், ஆசிரியர், கல்வி நிறுவன முதல்வர் ஆகியோருக்கு இந்த உத்தரவு பொருந்தாது. என்றாலும், அவர்கள் மீது அரசியல் சார்புத்தன்மை தொடர் பான குற்றச்சாட்டு இருக்கக்கூடாது. இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வரும் பட்சத்தில் விசாரணை நடத்தி, அதில் உண்மை இருப்பது தெரியவந்தால் அவர்களைப் பணியிடமாற்றம் செய்வது மட்டுமல்லாமல் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். அதிகாரிகள், நேர்மையாகப் பட்சபாதமின்றிச் செயல்படுவதைத் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். எந்த அதிகாரி மீதாவது தேர்தல் ஆணையம் ஏற்கனவே ஒழுங்கு நடவடிக்கைக்காக உத்தரவிட்டு, அது நிலுவையில் இருந்தாலோ அல்லது அவர் தண்டிக்கப்பட்டு இருந்தாலோ, முந்தைய தேர்தல் பணியில் சரிவரச் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளானவராக இருந்தாலோ அவர்களைத் தேர்தல் பணிக்கு நியமிக்க கூடாது. அரசு அலுவலர் மீது, அலுவலர் தொடர்பான கிரிமினல் வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் இருந்தால் அவர்களையும் தேர்தல் பணி தரப்படக்கூடாது. தமிழகத்தில் மே 31-ந் தேதியிலும், புதுச்சேரியில் ஜூன் 30-ந் தேதியிலும் பணி ஓய்வு பெறவுள்ள அலுவலர்களைத் தேர்தல் பணிக்கு நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களைப் பணியிடமாற்றம் செய்யவும் தேவையில்லை. தலைமை தேர்தல் அதிகாரி தவிர வேறு எந்தவொரு மாநில அரசுப் பணியாளரும் பணி நீட்டிப்பு செய்யப்பட்டிருந்தாலோ, மறுபடியும் பணியில் சேர்க்கப்பட்டவர்களாக இருந்தாலோ அவர்களைத் தேர்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடாது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவுகள் அனைத்தும் அமல்படுத்தப்பட்டுள்ளதா? என்பது பற்றிய விரிவான அறிக்கையை வரும் பிப்ரவரி 28-ந் தேதிக்குள் தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி. அளிக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%