திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா - மகாதீப கொப்பரை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது |
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மகாதீப தரிசன விழா நாளை நடைபெற உள்ளது.
அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். நாளை அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும்.
மாலை 6 மணிக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு ஆனந்த நடனத்துடன் எழுந்தருள 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.
நாளை முதல் 11 நாட்களுக்கு அண்ணாமலை உச்சியில் சிவபெருமான் தீப்பிழம்பாய் காட்சி தருவார். திருவண்ணாமலை நகரில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் வரை மகாதீபம் தெரியும்.
அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும் மகா தீப கொப்பரைக்கு இன்று அதிகாலை அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து 2 ஆயிரத்து 668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சிக்கு மகாதீப கொப்பரை கொண்டு செல்லப்பட்டது. மகா தீபம் ஏற்ற 4 ஆயிரத்து 500 கிலோ நெய் பயன்படுத்தப்படும்.
மலையே சிவனாக வணங்கப்படும் அண்ணாமலையை வலம் வருவதற்காகவும், மகா தீபத்தை தரிசிக்கவும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள், சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. பக்தர்களின் பாதுகாப்பிற்காக 15 ஆயிரம் போலீசார் திருவண்ணாமலையில் முகாமிட்டுள்ளனர்.
கிரிவலப்பாதையில் போலீசார் சார்பில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப் பாதை முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அவசர கால உதவிக்கு 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு மீட்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. மின்சார வாரியம் சார்பில் தடையில்லா மின்சாரம் வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மாநகராட்சி நிர்வாகம் சார்பில் திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவல பாதையை தூய்மையாக பராமரிக்க ஆயிரத்து 200 தூய்மை காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தீபத்திருவிழாவை முன்னிட்டு கிரிவலப்பாதை அரசு கலைக்கல்லூரி அருகில் மாட்டு சந்தை அமைக்கப்பட்டுள்ளது. மாட்டு சந்தையில் மாடுகள், குதிரைகள், ஒட்டகம் ஆகியவை விற்பனைக்காக நிறுத்தப்பட்டுள்ளது.
தீப தரிசனம் காண திருவண்ணாமலை நகருக்கு வரும் 9 பிரதான சாலைகள் வழியாகவும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
பக்தர்களுக்காக இந்தாண்டு அறிமுகமான சிறப்பு அம்சம் ‘க்யூஆர் தகவல் முறை’. விழா பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள குறியீடுகளை ஸ்கேன் செய்தால் அருகிலுள்ள மருத்துவ முகாம், ஆம்புலன்ஸ் இருப்பிடம், போக்குவரத்து மாற்றப் பாதைகள் மற்றும் அதிகாரப்பூர்வ எச்சரிக்கை தகவல்களை உடனடியாக கைப்பேசியில் காணலாம். ஒவ்வொரு சேவை முகாமும் தனித்தனி நிறங்களில் காட்டப்படுவதால், பயணிகள் விரைவாக தங்களுக்கு தேவையான இடத்தைக் கண்டறிய முடியும்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபம்! டிச. 5 வரை போக்குவரத்து மாற்றம்
தமிழகம் முழுவதும் நாளை கார்த்திகைத் தீப பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட விருக்கிறது. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் பண்டிகையை முன்னிட்டு சுமார் 35 லட்சம் பேர் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் 3ஆம் தேதி திருவண்ணாமலை மலை மீது மகா தீபம் ஏற்றப்படவிருக்கும் நிலையில் திருவண்ணாமலை நகருக்குள் வாகனங்கள் நுழைய டிசம்பர் 5 வரை தடை விதித்து போக்குவரத்துக் காவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
திருவண்ணாமலையில் காா்த்திகை தீபத் திருவிழா டிசம்பா் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவிற்கு வெளிநாடு, வெளி மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிகளவில் பக்தா்கள் வருவாா்கள் என்று ஏதிா்பாா்க்கப்படுகிறது.
மக்களின் வசதிக்காக கார்த்திகை தீபம் பண்டிகையை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சுமார் 750 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபத்திருவிழாவுக்காக திருவண்ணாமலை மாநகராட்சியை சுற்றி மாா்கெட்டிங் கமிட்டி (திண்டிவனம் சாலையில் 2 இடங்கள்), சா்வேயா் நகா் (வேட்டவலம் சாலை ஒரு இடம்), நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் (திருக்கோவிலூா் சாலை 3 இடங்கள்), (மணலூா்பேட்டை சாலை ஒரு இடம்), விட்டோ டிஜிட்டல் இடம், அத்தியந்தல் (செங்கம் சாலை 7 இடங்கள்), டான்பாஸ்கோ பள்ளி (காஞ்சி சாலை ஒரு இடம்), அண்ணா நுழைவு வாயில் (வேலூா் சாலை ஒரு இடம்), கிலியாப்பட்டு சந்திப்பு (அவலூா்பேட்டை சாலை ஒரு இடம்), வெளிவட்டச் சாலையில் (7 இடம்) ஆகிய 9 இடங்களில் 24 தற்காலிக பேருந்து நிலையங்களில் 2,325 பேருந்துகள் நிறுத்தும் வகையிலும், 130 காா் நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட உள்ளன என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
கட்டணமில்லா அரசு பேருந்து
திருவண்ணாமலை புறநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 24 தற்காலிக பேருந்து நிலையங்களுக்கும் வரும் பக்தர்களுக்கு, இன்று (02-12-2025) மற்றும் நாளை (03-12-2025) ஆகிய இரண்டு நாட்களுக்கு திருவண்ணாமலை நகருக்குள் கோவில் மற்றும் கிரிவலப் பாதைக்கு அருகில் வரை வருவதற்கு 20 கட்டணம் இல்லா தனியார் பேருந்துகளும், 200 கட்டணமில்லா கல்வி நிறுவனம் பேருந்துகளும், ₹.10 ரூபாய் பயண கட்டணத்துடன் 20 சிற்றுந்துகளும் இயக்கப்பட உள்ளன. பக்தர்கள் இந்த இலவச பயண சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை கோயிலைச் சுற்றிலும் 50 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில், வைக்கப்பட்டிருப்பதாகவும், ஆம்புலன்ஸ் செல்ல தனிப் பாதை அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், திருவண்ணாமலை நகருக்குள் டிச. 5ஆம தேதி காலை வரை கனரக வாகனங்கள் எதுவும் நுழையக் கூடாது என்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.