தி.மு.க. ஆட்சி மீண்டும் வந்தால்தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடரும், சுயமரியாதை காப்பாற்றப்படும் வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் ஸ்டாலின் பேச்சு
செங்கல்பட்டு, பிப்.–
தி.மு.க. ஆட்சி மீண்டும் வந்தால்தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடரும், சுயமரியாதை காப்பாற்றப்படும் என்று வாக்குச்சாவடி குழுவினருக்கான பயிற்சி மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று திருவிடந்தையில் நடைபெற்ற ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி – சென்னை, விழுப்புரம் மண்டல வாக்குச்சாவடிக் குழுவினருக்கான பயிற்சி மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–
தமிழ்நாடு முழுவதும் அனைத்து பூத்திலும் 100 வாக்காளர்களுக்கு ஒரு உறுப்பினர் வீதம், ஒவ்வொரு பூத்திலும் சராசரியாக 10 வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களை நாம் நியமித்திருக்கிறோம். மைக்ரோ மேனேஜ்மெண்ட்-ஆக இருந்தாலும் சரி, மேக்ரோ மேனேஜ்மெண்ட்-ஆக இருந்தாலும் சரி, தேர்தல் களத்தில் தி.மு.க.தான் ஹீரோ.
இந்தியாவில் வேறு எந்தக் கட்சிக்கும் இல்லாத கட்டமைப்பு நம்மிடம் இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள மொத்த பூத்களின் எண்ணிக்கை 75 ஆயிரம். ஒவ்வொரு பூத்திற்கும் நாம் செட் பண்ணியிருக்கும் ‘மினிமம் டார்கெட்’ எவ்வளவு தெரியுமா? 350 வாக்குகள். இந்த டார்கெட்டை நாம் அச்சீவ் செய்தாலே, 2 கோடியே 60 லட்சம் வாக்குகளுக்கு மேல் நாம் வாங்கிவிடலாம்.
இந்தத் தேர்தலில் நாம் கட்டாயம் 2 கோடியே 50 லட்சம் வாக்குகளுக்குக் குறையாமல் வாங்கியாக வேண்டும் என்று சொல்லிருந்தேன். இதை சாத்தியப்படுத்திக் காட்டுவது உங்களின் பொறுப்பு.
ஏற்கனவே ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரை மூலமாக, 1 கோடியே 14 லட்சம் குடும்பங்கள் நம் கழகத்துடன் இணைந்திருக்கிறார்கள். இதில், ஒரு வாக்குகூட மிஸ் ஆகாமல், உதயசூரியனுக்கும் - நம்முடைய கூட்டணிக் கட்சி சின்னங்களுக்கும் விழ வேண்டும்.
ஓரணியில் தமிழ்நாடு மட்டு மல்லாமல், எஸ்.ஐ.ஆர். பட்டியல் திருத்தம் மூலமாகவும் ஏற்கனவே 2, 3 முறை, தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டையும் நாம் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி இருக்கிறோம்.
அடுத்ததாக, 'ஸ்டாலின் மகளிர் படை'யில் இருக்கும் மகளிரணியினர் வீடு வீடாகப் பிரசாரத்தைத் தொடங்கப் போகிறார்கள்.
உங்கள் உழைப்பில்தான் நாம் ஏழாவது முறையாக ஆட்சிக்கு வரப்போகிறோம். ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலை, எங்குமே இல்லாத நிலைதான் இன்றைக்கு இருக்கிறது. இதை அப்படியே நமக்கு ஆதரவான வாக்குகளாக மாற்றி, வெற்றியை அறுவடை செய்வது உங்கள் கையில்தான் இருக்கிறது.
நம்முடைய கழக ஆட்சி மீண்டும் வந்தால்தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடரும், தமிழ்நாட்டின் சுயமரியாதை காப்பாற்றப்படும் என்று அவர்கள் மனதில் பதிய வையுங்கள். குறிப்பாக இளைஞர்களிடம், அவர்களுக்காக நாம் செய்து கொண்டு வரும் திட்டங்கள் பற்றிச் சொல்லுங்கள். அவர்களின் வேலைவாய்ப்புக்காக நாம் கொண்டு வரும் தொழிற்சாலைகள் பற்றி சொல்லுங்கள்.
சாதனை புத்தகம்
இதற்காக உங்களுக்குத் தேவைப்படும் தகவல்கள் அடங்கிய ஒரு புத்தகத்தை, உங்களுக்கு வழங்கியிருக்கிறோம். அதில், நம்முடைய ஐந்தாண்டு சாதனைகளை விளக்கிச் சட்டப்பேரவையில் நான் பேசிய உரை இருக்கிறது. ஒரு மணி நேரம் ஒதுக்கி இந்தக் குட்டிப் புத்தகத்தைக் கட்டாயம் படித்துவிடுங்கள்.
பிரச்சாரத்திற்குச் செல்லும்போதும் கையோடு இந்தப் புத்தகத்தை எடுத்துக் கொண்டுச் செல்லுங்கள். மக்களிடம் எடுத்துச் சொல்லும் முன், நாம் என்னவெல்லாம் செய்திருக்கிறோம் என்று முதலில் நமக்குத் தெரிய வேண்டும். இந்த 5 ஆண்டு காலத்தில் நாம் நிறைவேற்றி இருக்கும் திட்டங்கள்தான், அடுத்த 50 ஆண்டுகாலம் தமிழ்நாட்டை வழி நடத்தப்போகும் 'Blue Print'. சொன்னதை மட்டுமல்ல, சொல்லாத பல திட்டங்களையும் செய்து காட்டும் அரசாக நம்முடைய திராவிட மாடல் அரசு இருக்கிறது. மீதமுள்ள கோரிக்கைகள், வாக்குறுதிகளையும் அடுத்து அமைய இருக்கும் திராவிட மாடல் 2.0 அரசில் நாம்தான் செய்து தரப்போகிறோம் என்று சொல்லுங்கள்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
இந்த மாநாட்டில் முன்னாள் அமைச்சர் க.பொன்முடி, அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்ரமணியம், சேகர்பாபு, ஆவடி நாசர், எம்.பி.க்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்க பாண்டியன், கனிமொழி சோமு, செல்வம், காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் உத்தரமேரூர் சுந்தர், மாதவரம் சுதர்சனம், டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.