துணை தேடல்

துணை தேடல்

🙃 🙃


நீலமேகம் வந்தபோது வன்மீகநாதன் மட்டும்தான், காந்திமதியின் அருகில் அமர்ந்திருந்தார். தலைமாட்டில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. கண்கள் சுருங்கி காதுகள் விடைத்து; கன்னங்கள் இறுக மௌனமாக அழுவது நன்றாகவே தெரிந்தது.என்ன பேசுவது என்று தெரியாமல் உதிர்த்த ' நாதா' என்ற ஒற்றைச் சொல் வன்மீகநாதனை உலுக்கியது. 'நீலூ! என்னடா இப்படி ஆயிடுத்தே. நன்றாகத்தானே இருந்தா! டி.வி யில் சஞ்சய் சுப்பிரமணியம் கச்சேரி கேட்டுண்டடே ஃபோனை பார்த்துண்டு இருந்தா. அப்படியே சரிஞ்சுட்டா. டாக்டருக்கும் உனக்கும் தாண்டா ஃபோன் பண்ணினேன். எனக்குத் தெரிஞ்சுடுத்து. டாக்டரால் என்ன பண்ண முடியும்?' என்று சொல்லி மனம் உடைந்து கதறி அழுதார்.

டாக்டர் வந்து பார்த்துவிட்டு' லுக்ஸ் லைக் மேஸிவ் ஹார்ட் அட்டாக்' எனக் கூறிவிட்டு நகர்ந்தார். 

நீலமேகம் மற்ற ஏற்பாடுகளை கவனிக்கலானார். அவருடைய பெண் சுமதிக்கும், பிள்ளை மகேந்திரனுக்கு,ம் தகவல் சொல்லிய பிறகு நாதனின் உறவுக்காரர்களுக்கு அவர் ஃபோனிலிருந்தே தகவல் சொன்னார். நாதன் சொல்லியபடி , ஐயருக்கும் தகவல் சொல்லி; அவரும் வந்து சேர்ந்த பின் கூட,நாதனோடு உட்கார்ந்து ஆறுதல் சொல்ல நேரமில்லையே; என்று நினைத்துக் கொண்டார். உற்றாரும் உறவினரும் ஒவ்வொருவராக வந்தனர். திருச்சி யிலிருந்து அவர் தம்பி பஞ்சாபகேசன் வந்து சேர்ந்தது அவருக்கு ஆறுதலாக இருந்தது. நாதனின் வீட்டு வழக்கப்படி மேலே ஆகவேண்டிய காரியங்களை பஞ்சாபகேசன் செய்யலானார். பெங்களூரிலிருந்தும் மும்பையிலிருந்தும் சுமதியும் மகேசனும் விமானத்தில் புறப்பட்டு விட்டதாக பஞ்சாபகேசன் சொல்ல; நீலமேகத்திற்கு  

 நாதன் பக்கத்தில் உட்கார அவகாசம் கிடைத்தது. துவண்டு போயிருந்த நாதனுக்கு 'சட் ' என் முதுமை கூடிவிட்டது போல் இருந்தது. ' கேனிலிருந்து காஃபியை கொண்டு வந்து கொடுத்தவர்' சுகர் இறங்கிடும். அப்புறம் உன்னை யார் பார்ப்பது? நாளைக்கு ரொம்ப டென்ஷனான நாள். யாரிடமும் ரொம்ப பேசாதே' என்று சொல்லியவர்,சற்று நேரத்தில் அவரை வற்புறுத்தி, தன் வீட்டிலிருந்து கொண்டு வந்த இரண்டு ரொட்டி துண்டுகளை கொடுத்து, அவருடைய வழக்கமான மருந்துகளைச் சாப்பிட வைத்தார். நீலு, நாதன் பக்கத்தை விட்டு எங்கும் நகரவில்லை.

காலையில் அவர் குழந்தைகள் வந்து விட, காந்திமதியின் இறுதிச் சடங்குகள் செவ்வனே நிறைவேறியது. 

தினம் நீலமேகம் அவரை வந்து பார்த்துவிட்டுச் சென்றார்.  

நாதன் வீட்டார் வழக்கப்படி பதினைந்தாம் நாள் காரியம் முடிந்து உறவினர்கள் அவரவர் இல்லம் திரும்ப, சுமதியும் மகேசனும் அப்பாவை தங்களுடன் அழைத்துப் போவதில், முனைப்பாக இருக்க, நாதன் 'வங்கி வேலைகள் பென்ஷன் வேலைகள் இருப்பதால், நாலைந்து மாதம் கழித்து அது பற்றி யோசிக்கலாம்' என்று நேரம் எடுத்துக் கொண்டார். குழந்தைகளும் புரிந்து கொள்ள நீலமேகத்தின் பாதுகாப்பில் அவரை இப்போதைக்கு விட்டு விட்டு, சமையல் மற்றும் மேல் வேலைகளுக்கு உதவியாளர்களை ஏற்பாடு செய்துவிட்டு, அவர்கள் கிளம்பினார்கள்.

           காந்திமதி போய் ஒரு மாதம் ஆயிருக்கும். வங்கி வேலைகளுக்கும், பென்ஷன் வேலைகளுக்கும் நீலமேகம் நாதன் கூடவே அலைந்தில்,கிட்டத்தட்ட வேலைகள் யாவும் முடிந்து விட்டன. ஒரு நாள் மாலை இருவரும் வழக்கம்போல் கோயில் பிரகாரத்தில் அமர்ந்து பேசிக் கொண்டு இருக்கும்போது' நீலு! எனக்காவது குழந்தைகள் இருக்கிறார்கள். உனக்கு குழந்தை கூட இல்லை.. உனது நாற்பத்தெட்டு வயசிலேயே சுந்தரி போனபின் தனியாகத் தானே இருக்கிறாயே! எப்படி உன்னால் இருக்க முடிகிறது? காந்தி இல்லாமல் இந்த ஒரு மாசம் போனதே எனக்கு ஒரு யுகம் போல் இருக்கிறது. எப்படித்தான் நீ இத்தனை வருடமும் வளைய வந்தாயோ? எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது ' என்றார்; 'நாதன்.நான் எங்கே தனியா இருந்தேன்? இரண்டு வருடம் முன்பு வரை வேலைக்குப் போய் கொண்டுதானே இருந்தேன். சாயங்காலம் உன் வீட்டுக்கு வந்துவிடுவேன். கோயிலுக்குச் சேர்ந்தே போவோம்; தினம் தினம் இரவு தூங்கும் வரை ஏதாவது பேசிக்கொண்டிருப்போம்;இல்லையா? நமக்கு ஒன்று 'இல்லை' என்று ஆன பின் அதைப்பற்றி யோசிக்கவோ; அதற்காக ஏங்குதலினாலோ; என்ன பயன்? போனவர்கள் போனாலும்; நம் நேரம் வரும் வரை காத்திருக்கும் கட்டாயத்தில் தான் நாம் இருக்கிறோம். நான் விரக்தியாக பேசவில்லை. இவ்வுலகின் எதார்த்தத்தைப் பற்றிதான் பேசுகிறேன். ' என்று நீலமேகம் சொல்ல,' ஆம்!நாம் மரணத்தை நெருங்கவில்லை. அந்தத் துணிவு நமக்கில்லை. ஆயினும் மரணத்தின் கை எட்டும் தூரத்தில்தான் நாம் இருக்கிறோம். மரணம் நம் பின்னே நிழல் போல் வந்து கொண்டிருக்கிறதை நாம் அறிந்தே இருந்தாலும்; நாம் அது நம்மை ஆலிங்கனம் செய்யும் நிமிடம் வரை நமக்குத் தெரிவதில்லை. நம்மை அறியாமலே கொல்லும் ஆட்கொல்லி புலி போல்; இல்லையா? நாம் இறுதிவரை உயிர்ப்பாக இருக்க வேண்டியதின் அவசியத்தை காந்தியின் எதிர்பாரா மரணம் எனக்கு உணர்த்தி விட்டது. இறுதி தருணத்தில் கூட அவள் உயிர்ப்புடன் சஞ்ஜய் சுப்ரமணியத்தின் பாடலை ரசித்துக்கொண்டு ஃபோனில் ஏதோ எழுதிக்கொண்டு இருந்தாள். நமக்கு வயது இப்போது அறுபத்தி நான்கு ஆகிறது. நாமும் இறுதி வரை உயிர்ப்பாக இருக்கவேண்டும். தனிமையில் வாடி வதங்குதல் கூடாது. நாம் நல்ல துணையுடன் இருக்க வேண்டிய நேரம் இதுதான். இல்லையென்றால் தனிமையே நம்மை தின்றுவிடும்.' என்ற நாதனை ' 'இவன் என்ன சொல்கிறான்;' என்பது போல் திகிலுடன் பார்த்தார். இவன் தங்கச்சி காந்தியின் மேல் உயிராகத்தானே இருந்தான்! இப்போது என்ன; இப்படி பேசுகிறானே; என்று கலவரம் அடைந்தாலும்; அப்போதைக்கு இந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுதான் சரி; என்று நினைத்து அமைதியானார்; நீலமேகம்.

அடுத்த ஒரு மாதத்தில் நாதன், ஒரு புது மனிதனாக மாறிவிட்டதைப் பார்த்தார் நீலமேகம்.வீட்டை துப்புரவு செய்து புது வண்ணம் அடித்து 'வீடு வாடகைக்கு' என்று தகவல் பலகையை வைத்ததை பொருள் விளங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். மகேசனுடன் போவதாக முடிவெடுத்து விட்டார்; என்றே நினைத்தார்.வாடகைக்கு குடும்பம் ஒன்று வந்த மறுநாள். தனது அத்தியாவசிய சாமான்கள் உடைகள் மடிக்கணினியுடன் நீலமேகம் வீட்டிற்கு வந்தார். இனிமேல் இதுதான் என் வீடும். மீதியிருக்கும் நாட்களில் நாம் ஒன்றாக இருக்கலாம்; ஒருத்தருக்கு ஒருத்தர் துணையாக. உயிர்ப்புடன் வாழ எனக்கு நீயும், உனக்கு நானுமாக ஆதாரமாயும், துணையாகவும் இருப்போம்.' என்றதும், நீலமேகத்துக்கு பேச்சே வரவில்லை 'என்னடா சொல்கிறாய்! உளறாதே! உங்கள் வீட்டில் என்ன சொல்வார்கள்; உன் சொந்த பந்தம் இதை எப்படிப் பார்க்கும்; உன் பிள்ளைகள்... என்றவரை; மேலே பேசவிடாமல் தடுத்த வன்மீகநாதன்,' அதை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். என் சாமான்களை ஒழுங்கு படுத்தி அடுக்கி வை. நான் இருவருக்கும் காஃபி போட்டு எடுத்து வருகிறேன். உதவியாளர்களை இனி இங்கேயே வரச் சொல்லியுள்ளேன்.' என்று சொல்லி சமையலறையில் புகுந்தார்.

நீலமேகத்திற்கு அன்று நாதன் கோயிலில் பேசியது நினைவில் வந்து முட்ட, அதன் பொருள் இப்போது நன்கு விளங்கி விட; புன்சிரிப்புடன், நாதனின் சாமான்களை ஒழுங்கு படுத்த ஆரம்பித்தார்.


சசிகலா விஸ்வநாதன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%