நாங்கள் ஒரே நோக்கத்துடன் பயணிக்கிறோம்’’ - கார்கே, ராகுல் உடனான சந்திப்புக்குப் பிறகு சசி தரூர் பேட்டி

நாங்கள் ஒரே நோக்கத்துடன் பயணிக்கிறோம்’’ - கார்கே, ராகுல் உடனான சந்திப்புக்குப் பிறகு சசி தரூர் பேட்டி


 

புதுடெல்லி: ‘‘நாங்கள் அனைவரும் ஒரே நோக்கத்துடன் பயணிக்கிறோம். இதற்கு மேல் நான் என்ன சொல்ல முடியும்?’’ என்று மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உடனான சந்திப்புக்குப் பிறகு சசி தரூர் தெரிவித்தார்.


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்திக்கும், அக்கட்சியின் திருவனந்தபுரம் எம்பி சசி தரூருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாக சமீப காலமாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வந்தது. சசி தரூர் பாஜகவில் இணைய திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. இதன் காரணமாகவே, கடந்த வாரம் கேரளாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்த முக்கிய கூட்டத்தில் சசி தரூர் கலந்து கொள்ளவில்லை என்றும் காரணம் கூறப்பட்டது.


இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று, நாடாளுமன்றத்தில் உள்ள கார்கேவின் அலுவலகத்துக்குச் சென்ற சசி தரூர், அங்கு மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார். சுமார் இரண்டு மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது.


சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசி தரூர், ‘‘எனது கட்சியின் இரண்டு தலைவர்களான மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருடன் நான் ஒரு கலந்துரையாடலை நடத்தினேன். நாங்கள் மிகவும் நல்ல, ஆக்கப்பூர்வமான, நேர்மறையான விவாதத்தை நடத்தினோம். எல்லாம் நன்றாக உள்ளது. நாங்கள் அனைவரும் ஒரே பக்கத்தில் இணைந்து பயணிக்கிறோம். இதற்கு மேல் நான் என்ன சொல்ல முடியும்?’’ என தெரிவித்தார்.


அப்போது, கேரள சட்டப்பேரவைத் தேர்தலின்போது நீங்கள் காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்வீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ‘‘நான் எப்போதும் கட்சிக்காக பிரச்சாரம் செய்திருக்கிறேன். நான் எப்போதுதான் பிரச்சாரம் செய்யாமல் இருந்துள்ளேன்?’’ என பதில் அளித்தார்.


கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக நீங்கள் களமிறங்க இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு, ‘‘இல்லை. அது குறித்து விவாதிக்கப்படவில்லை. எந்தப் பதவிக்கும் வேட்பாளராக இருப்பதில் எனக்கு விருப்பமில்லை. தற்போது நான் ஒரு எம்பியாக இருக்கிறேன். திருவனந்தபுரத்தில் உள்ள எனது வாக்காளர்களின் நம்பிக்கையை பெற்றிருக்கிறேன். நாடாளுமன்றத்தில் அவர்களின் நலன்களை நான் கவனிக்க வேண்டும். அதுதான் என் வேலை’’ என்று கூறினார்.


இதன் தொடர்ச்சியாக சசி தரூர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘‘இன்று பல்வேறு விஷயங்கள் குறித்து அன்பான, ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலை நடத்தியதற்காக மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் ராகுல் காந்திக்கும் நன்றி. இந்திய மக்களுக்கு சேவை செய்வதில் நாங்கள் அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் இருக்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.


ஆனால், சசி தரூரின் பேட்டி, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகும் முடிவில் அவர் உறுதியாக இருப்பதையே வெளிப்படுத்தி இருப்பதாக சிலர் விமர்சிக்கின்றனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%