மாஸ்கோவில் அமைதி பேச்சுவார்த்தை: உக்ரைன் அதிபருக்கு அழைப்பு ஒரு வாரத்திற்கு போரை நிறுத்த ரஷ்யா சம்மதம்: டிரம்ப் தகவல்
மாஸ்கோ, ஜன. –
உக்ரைன் மீதான தாக்குதலை ஒரு வாரத்திற்கு நிறுத்த ரஷ்யா சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இதனிடையே மாஸ்கோவில் அமைதி பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அதிபருக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது.
நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் இணைய முயற்சித்ததை எதிர்த்து அந்நாட்டின் மீது கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா போர் தொடுத்தது. இந்த போரானது 4 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. இந்தப் போரில், இருதரப்பிலும் சோ்த்து உயிரிழப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டும் நிலையில் உள்ளது என்று அமெரிக்க ஆய்வு நிறுவன (சிஎஸ்ஐஎஸ்) அறிக்கை தெரிவித்துள்ளது.
ரஷ்ய தரப்பில் மட்டும் இதுவரை சுமார் 12 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2ம் உலகப் போருக்குப் பிறகு ஒரு வல்லரசு நாடு சந்தித்த மிகப்பெரிய உயிரிழப்பாக ரஷ்யாவின் இழப்புகள் கருதப்படுகின்றன.
டிரம்ப் முயற்சி
இரு நாடுகளுக்கிடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வர உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அமைதிப் பேச்சுவார்த்தையில் அமெரிக்காவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டு அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப் போரை முடிவுக்கு கொண்டு வர பொறுப்புடன் முயற்சி மேற்கொண்டுள்ளார். இதன் விளைவாக கடந்த வாரம் முதல் முறையாக அமெரிக்கா, ரஷ்யா, உக்ரைன் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை அபுதாபியில் நடைபெற்றது.
பிப்ரவரி 1ம் தேதி இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது அமைதிப் பேச்சுவார்த்தைக்காக மாஸ்கோவிற்கு வருமாறு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கிக்கு ரஷ்ய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் உடைய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் வெளியிட்டுள்ளார்.
இதற்கிடைய உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக கீவ், கார்க்கிவ் உள்ளிட்ட நகரங்களின் மின் கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா டிரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் மின்சாரமின்றி மக்கள் கடும் குளிரில் தவிக்கும் சூழல் உருவாகி உள்ளது. எனவே உக்ரைனில் நிலவும் கடும் குளிர் காலத்தைக் கருத்தில் கொண்டு, மனிதநேய அடிப்படையில் மின்சாரக் கட்டமைப்புகள் மீதான தாக்குதலை ஒரு வாரத்திற்கு நிறுத்துமாறு ரஷிய அதிபர் புதினுக்கு டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.
போர் நிறுத்தம்
அந்த வகையில் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்று அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:-
உக்ரைனில் கடுமையான உறைபனி நிலவும் நிலையில், தலைநகர் கீவ் மற்றும் பிற நகரங்கள் மீது ஒரு வாரத்திற்கு தாக்குதல் நடத்த வேண்டாம் என்று ரஷ்ய அதிபர் புதினிடம் கேட்டு கொண்டேன். இந்த அசாதாரண குளிர்காலத்தில் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று நான் தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டேன்.இந்த தற்காலிக போர் நிறுத்தத்திற்கு புதின் ஒப்பு கொண்டார்.
இது சிறப்பான முடிவு. இதை உக்ரைன் தரப்பில் முதலில் நம்ப முடியவில்லை. அவர்கள் மிகவும் மோசமான சூழலில் போராடி வருவதால் அதை கேட்டு மகிழ்ச்சி அடைந்தனர் என்றார்.