நானும் மாறி விட்டேன்

நானும் மாறி விட்டேன்

🏵️🏵️   

          

ஹரிஹரன் மௌனமாக இருந்தான். அவன். நண்பர்கள் சத்யனும் , செந்திலும் தான் பேசிக் கொண்டிருந்தார்கள்; அவன் சார்பாக. யாழினி அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

குழந்தை மதுரா ஒன்றும் புரியாமல் மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு ஹரிஹரன் எவர் என்றே தெரியவில்லை.

 செந்தில் மீண்டும் பேச ஆரம்பித்தான், ‘ யாழினி! நாமெல்லாம் ஒட்டிப் பழகிய நாளை எல்லாம் நினைத்துப் பார். நீயும் ஹரியும் உருகி உருகி காதலித்தீர்கள். பெற்றோரின் சம்மதத்திற்காக இரண்டு வருடம் காத்திருந்து திருமணம் செய்தீர்கள். எப்படி; எதனால் இந்த பெரிய இடைவெளி உண்டாயிற்று? இரண்டு பேருக்கும் கல்லூரி பேராசிரியராக வேலையும் தேடிவந்தது. எதற்கும் குறைவில்லா வாழ்க்கை; இன்பமுடன் காலத்திற்கும் வாழ்வீர்கள், என்றே நினைத்திருந்தோம்.விருப்பமாய் வாழ வேண்டிய வாழ்க்கையை வேம்பாக ஆக்கிக் கொண்டு விட்டீர்களே!,’ என்று புலம்பினான்.

          சத்யன் பேசத் தொடங்குமுன் யாழினியே ஆரம்பித்தாள்.' சென்றவை சென்றவையாகவே இருக்கட்டும். ஹரியை ஒரு நண்பனாக மட்டும்தான் உங்களுக்குத் தெரியும். நல்ல ஒரு நண்பன், நல்ல கணவனாக இருக்க வேண்டும், என்ற எந்த ஒரு உத்திரவாதமும் கிடையாது. அவனுடைய குணநலன்களின் நிறை குறைகளை ஆராய வேண்டிய எந்த ஒரு முதன்மை தேவையும் இப்போது இல்லை. ஆம்! எல்லாம் நிறைவாகவே இருந்தது... அபரிமிதமாக. அளவிற்கு மிஞ்சும் எதுவும் நெஞ்சுக்கு நஞ்சாக மாறும்; என்பது என் வாழ்க்கையில் நிதர்சன உண்மையாயிற்று. இன்னொரு வாழ்க்கையில் உட்புகும் துணிவு எனக்கு அறவே இல்லை. அவ்வளவு நாட்கள் பழகினவன் கல்யாண உறவில், முற்றும் புதியவனாக எனக்குப் புலப்பட்டான். கல்யாணம் என்பது பெண்களுக்கு ஒரு மலையேற்றம், அல்லது ஒரு பள்ளத்தாக்கு. ஒரு திரும்பும் முனையில் நிற்கும் பெண்கள்; தன்னம்பிக்கையுடன்தான், கல்யாண உறவில் நுழைகிறாள். அது மட்டும் போதாது; அவளுக்கு. மனம் புரிந்த ஒரு நண்பன் போல் ஒரு உறவை எதிர்பார்த்து இருக்கும் அவளுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது எனில், அவள் வாழ்க்கை முள் நிறைந்த பாதை. அதிலிருந்து 

வெளியேறும் உரிமை அவளுக்கு உண்டுதானே! அனுசரித்து இருப்பதுதான் வாழ்க்கையின் எதார்த்தம் என்றும் அவளுக்குத் தெரியும்; எனினும் அனுசரிப்பதே வாழ்க்கை என்று பல பெண்கள் இருக்கலாம். ஒவ்வொருவருக்கும் ஒரு அடிக்கோடு உள்ளது. என்னால் ஒரு அளவிற்கு மேல் விட்டுக் கொடுத்துப் போக,இயலவில்லை. ஒருவருக்கு ஒருவர் புரிதல் இல்லாமல் நாங்கள் பிரியவில்லை. சரியான புரிதல் இருந்ததினால் மட்டுமே, சாத்தியம் ஆயிற்று. அது அந்த புரிதலில் விளைந்த நன்மை. அவனைப் பற்றி எனக்கு எந்தக் குறையும் இல்லை. திருமண பந்தத்திற்கு நாங்கள் ஒருவருக்கு ஒருவர் ஏற்றவர் இல்லை. இதை நான் உணர்ந்து வருடம் மூன்றாகிறது. என்னைத் தனியே வாழ விடுங்கள். இதுவே எனக்கு உகந்தது. அவருக்கு விருப்பமானால் நான் இந்த திருமணத்திலிருந்து விடுதலை அளிக்கச் சித்தமாக இருக்கிறேன்" என்று கூறி முடித்தாள்; யாழினி. 

         சத்யன், "இப்போதெல்லாம் அவன் ரொம்பவே மாறிவிட்டான்; யாழினி!. நீ ஏன் அவனை மன்னிக்கக் கூடாது? மதுராவுக்கு அவள் தந்தையின் அருகாமையும் அரவணைப்பும் அவசியம் தானே' என்றான்.

              " என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். ஹரிஹரன் மாறிவிட்டது உண்மையாய் இருக்கலாம். ஆனால் இந்த மூன்று வருடங்களில் நானும் மிகவும் மாறிவிட்டேன். திருமண பந்தம் என்ற சுமையை நான் மீண்டும் என் முதுகு சுமையாக ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. ஹரி விரும்பினால், மதுராவுடன் சேர்ந்து பழகட்டும்...அவருக்கு நேரம் கிடைத்த போது இங்கு வரட்டும்,மதுராவின் அப்பாவாகவும்; எனக்கு நண்பனாகவும் மட்டும். நான் கூறுவது ஹரிஹரனுக்கும், உங்களுக்கும் புரியும் என்று நினைக்கிறேன். "மதுரா! உன் அப்பாவுக்கு நேரமாகிறது. அவருக்கு கையசைத்து விடை கொடு. பள்ளிக்குச் செல்ல நேரம் ஆகிறது பார்" என்று சொல்ல; ஹரிஹரன் எழுந்து மதுராவை ஆரத் தழுவி, கன்னத்தில் முத்தமிட்டு," வில் மீட் சம் டைம் லேட்டர், மை ஏன்ஜல்" என்ற சொல்லிய பின் தன் சிநேகிதர்களுடன், வெளியேற,’மதுரா,’இவர்தான் என் அப்பாவா? ஐ லைக் ஹிம்,’ என்றாள். .யாழினி, ’எஸ் ஹீ வாஸ் மை குட் ஃப்ரண்ட் டூ.’என்று வறண்ட குரலில் சொல்ல, இருவரும் பள்ளிக்கு கிளம்பினார்கள்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%