news Breaking News
clock

நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம்: விசாரணை குழு அறிக்கைக்காக மத்திய அரசு காத்திருப்பு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல்

நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம்: விசாரணை குழு அறிக்கைக்காக மத்திய அரசு காத்திருப்பு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல்


 

புதுடெல்லி: அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்யும் விவகாரத்தில், மக்களவை சபாநாயகரால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கையை எதிர்பார்த்து அரசு காத்திருப்பதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், டெல்லியில் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இந்த கூட்டத் தொடரின்போது நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்கப்படுவாரா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.


அதற்கு பதில் அளித்த கிரண் ரிஜிஜு, ‘‘நடைமுறைப்படி, இந்த விவகாரம் நாடாளுமன்ற ஒப்புதலுடன் சபாநாயகரால் அமைக்கப்பட்ட குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த செயல்முறை நடைபெற்று வருகிறது. குழு தனது கடமையைச் செய்து வரும் நிலையில், அதன் அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். அதற்கு முன்பாக என்னால் எந்த கருத்தையும் தெரிவிக்க முடியாது’’ என கூறினார்.


சபாநாயகர் ஓம் பிர்லா அமைத்துள்ள விசாரணைக் குழுவில், உச்ச நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மனிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, கர்நாடக உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.


இந்த விசாரணைக் குழு தனது அறிக்கையை சபாநாயகரிடம் அளித்த பிறகு, சபாநாயகர் அதை அவைக்கு அளிப்பார். அதன் தொடர்ச்சியாக, அவை உறுப்பினர்கள் முன்பாக நீதிபதி யஷ்வந்த் வர்மா ஆஜராவார். அப்போது, தான் பதவி விலகுவதாக நீதிபதி வர்மா அறிவித்தால், அவரது வாய்மொழி அறிக்கையே அவரது ராஜினாமாவாகக் கருதப்படும் என்று இது குறித்த நடைமுறையை அறிந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


அவ்வாறு நீதிபதி தானாக முன்வந்து ராஜினாமா செய்தால், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிக்கு உரிய ஓய்வூதியம் உள்ளிட்டட சலுகைகளுக்கு அவர் தகுதியுடையவராக இருப்பார் என்றும், நாடாளுமன்றத்தால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டால் ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் இழப்பார் என்றும் அந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News