பறவை காய்ச்சல் பற்றிய வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் - தமிழக அரசு அறிவுறுத்தல்
சென்னை,
தமிழ்நாட்டில் சமீபத்தில் சில மாவட்டங்களிலும், குறிப்பாக சென்னையின் ஒரு சில பகுதிகளில் காகங்கள் உயிரிழந்த நிலையில் காணப்பட்டது. மருத்தும் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு நடத்தினார்கள். அதில், ஒரு காகத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது.
இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று, பறவை காய்ச்சல் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தலைமை செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். அப்போது, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் பறவை காய்ச்சல் பரவும் முறை பற்றியும், தமிழ்நாட்டில் யாருக்கும் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் விளக்கப்பட்டது.
மேலும், பறவை காய்ச்சல் பரவலை தடுக்க பொது சுகாதாரத்துறை எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட அளவில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு கடந்த 6-ந்தேதி ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில், பல்வேறு துறைகளுடன் இணைந்து மாவட்ட அளவில் எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கை குறித்து அறிவுறுத்தப்பட்டது. மேலும், மனிதர்களுக்கு பறவை காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து துறைகளுக்கும் அனுப்பப்பட்டது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
ஆய்வுக் கூட்டத்தை தொடர்ந்து பொதுமக்களுக்கு தமிழக அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவுரைகள் பின்வருமாறு:-
* பறவை காய்ச்சல் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை. எங்கேனும் காகம் மற்றும் பறவை இறந்த விவரம் அறியப்பட்டால் உடனடியாக கால்நடை துறைக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தெரிவிக்க வேண்டும்.
* யாருக்கேனும் காய்ச்சல், சளி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
* கோழி இறைச்சி மற்றும் முட்டை போன்ற அசைவ உணவுகளை நன்றாக சமைத்த பின்னரே சாப்பிட வேண்டும்.
* பறவை காய்ச்சல் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம். பறவை காய்ச்சல் பற்றிய சந்தேகங்களுக்கு 104 என்ற தொலைபேசி எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.
எனவே, பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?