புதிய போலீஸ் டி.ஜி.பி.க்கான பெயர்களை பரிந்துரைக்க தமிழக அரசுக்கு ஒரு வாரம் கெடு: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
புதுடெல்லி, பிப்.-–
புதிய போலீஸ் டி.ஜி.பி.க் கான பெயர்களை பரிந்துரைக்க தமிழக அரசுக்கு ஒரு வாரம் கெடு விதித்து சுப்ரீம் கோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தமிழக போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்த சங்கர்ஜிவால் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி ஓய்வுபெற்றார். அதன்பின்னர் பொறுப்பு டி.ஜி.பி.யாக ஜி.வெங்கடராமன் நியமனம் செய்யப்பட்டார். நிரந்தர டி.ஜி.பி. நியமனம் செய்யப்படாதது குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளும் கேள்வி எழுப்பி வருகிறது.
இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக சென்னையைச் சேர்ந்த கிஷோர் கிருஷ்ணசாமி என்பவர் சார்பில் வக்கீல் எம்.வீரராகவன் சுப்ரீம் கோர்ட்டில் கோர்ட் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, பொறுப்பு டி.ஜி.பி. நியமனம் என்பது தவறு. புது டி.ஜி.பி. நியமனம் செய்ய வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவை தமிழக அரசுக்கு கடைபிடிக்கவில்லை என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
அதற்கு தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், “டி.ஜி.பி. பதவிக்கு சிலரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. யு.பி.எஸ்.சி.யில் சில குழப்பம் நிலவுகிறது.
டி.ஜி.பி. இல்லாததால், தேர்வுக்குழுவில் கூடுதல் உள்துறை செயலாளரை இணைக்க வேண்டும் என கோரியிருந்தோம். இதற்கு யு.பி.எஸ்.சி. ஏற்கவில்லை. டி.ஜி.பி. தேர்வு செய்பவர், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட 4 பிரிவுகளில் 10 ஆண்டு அனுபவம் பெற்று இருக்க வேண்டும் என நிபந்தனை சேர்க்கப்பட்டு உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. நியமனத்தில் தமிழகத்தை சேர்ந்த 2 அதிகாரிகள் இடம்பெற வேண்டும். அதில் ஒருவர் தலைமை செயலாளர். மற்றொருவர், டி.ஜி.பி. இல்லாத பட்சத்தில் டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ளவர் குழுவில் இடம் பெற வேண்டும்.
டி.ஜி.பி. யாக தேர்வு செய்யப்படுபவர், சட்டம் ஒழுங்கு, உள்துறை உள்ளிட்ட குறிப்பிட்ட 4 பிரிவுகளில் 10 ஆண்டு அனுபவம் பெற்று இருக்க வேண்டும் என்ற விதியை தமிழகத்துக்கு தளர்த்தப்படுகிறது” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. பதவிக்கான பெயர்களை ஒரு வாரத்துக்குள் தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என்றும், அதன் பிறகு அந்த பட்டியலில் உள்ளவர்களின் பெயரை இறுதி செய்து இரண்டு வாரங்களுக்குள் யு.பி.எஸ்.சி. தேர்வு செய்து புதிய டி.ஜி.பி. பெயரை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.