பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கீடு

பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கீடு



சென்னை, பிப். –


இடைக்கால வரவு-–செலவுத் திட்ட மதிப்பீடுகளில் பள்ளிக்கல்வித் துறைக்கு 48,534 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.


சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசியதாவது:–


'பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின்' கீழ், 3,771 வகுப்பறைகள், 107 ஆய்வகங்கள், 4 ஆண்கள் விடுதிகள் மற்றும் 4 பெண்கள் விடுதிகள் ஆகியவை 673 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், 2,009 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகள் நடைபெற்று வருகின்றன.


கலைஞர் நூற்றாண்டு நூலகம் தென்தமிழ்நாட்டின் அறிவாலயமாகத் திகழ்கிறது.


அறிவைப் பரவலாக்கும் முன்முயற்சியில், கோயம்புத்தூர், திருச்சி, கடலூர், சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாநகரங்களில், மொத்தம் 902 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன நூலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.


தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் நிறுவப்பட்டு, இன்று சென்னையில் உள்ள மாநில தகைசால் பள்ளியுடன், தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் மாதிரிப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான வாய்ப்புகளை உருவாக்குதல், அவற்றை அணுகத் தேவையான கல்வி மற்றும் கலை ஆளுமைத் திறன் பயிற்சி போன்றவை வழங்குதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும்.


கல்லூரி மாணவர்கள், தம் தொழில்நுட்பத் திறனை வளர்த்துக் கொள்வதற்காக, 2,172 கோடி ரூபாய் செலவில் 10 இலட்சம் பேருக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 6,75,888 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தை ஆசியாவின் முதன்மைப் பல்கலைக்கழகமாக மாற்றுவதற்காக 1,380 கோடி ரூபாய் செலவிலான முன்னோடித் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.


'பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த நான்கு ஆண்டுகளில் 909 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


உயர்கல்வியில் சமூகநீதியைப் பேணும் பொருட்டு, அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள், தொழிற்கல்வி பயில, 7.5% இட ஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்ற 54,301 மாணவர்களின் கல்வி மற்றும் உணவுக் கட்டணங்களை அரசே ஏற்று, இதுவரை 1,512 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.


மேலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 10,563 கூடுதல் இடங்கள் உருவாக்கப் பட்டுள்ளன.


கடந்த ஐந்து ஆண்டுகளில் 38 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உருவாக்கப்பட்டு, 18,760 மாணவர்கள் கூடுதலாகப் பயனடைந்து வருகின்றனர்.


நாட்டிலேயே உயர்கல்வி சேர்க்கையில் தேசிய சராசரியைவிட ஏறத்தாழ இரு மடங்காக 47 சதவீதம் பெற்று தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.


ஆடவரும் உயர்கல்வி பெற்றிட முன்னெடுக்கப்பட்டதே தமிழ்ப் புதல்வன் திட்டம். ஆடவருக்கு உயர்கல்விக்காக மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் இத்திட்டத்தில், இதுவரை 5,40,511 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.


இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் உயர்கல்வித் துறைக்கு 8,505 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


'கல்லூரிக் கனவு' எனும் திட்டத்தில் 2 லட்சத்து 68,000 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.


'நான் முதல்வன்' இத்திட்டத்தின் கீழ், இதுவரை கல்லூரி மாணவர் களுக்கு ரூ.48,65,050 திறன் சான்றி தழ்கள் வழங்கப்பட்டுள்ளன.


வெற்றி நிச்சயம் திட்டம் மூலம் 16 ஆயிரத்து 815 இளைஞர்கள் பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றுள்ளனர். 70 ஆயிரத்து 500 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர்.


2025ம் ஆண்டு குடிமைப்பணித் தேர்வில் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 59பேர்களில் 52 பேர் ‘நான் முதல்வன்’ திட்டப் பயனாளிகள் என்பது அரசின் செயற்பாட்டுக்குக் கிடைத்த நற்சான்று.


இவ்வாறு அவர் கூறினார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%