news Breaking News
clock

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மயானக் கொள்ளை: லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மயானக் கொள்ளை: லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்



செஞ்சி பிப்.–


விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மாசி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் இரண்டாவது நாளாக இன்று மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.


இதை முன்னிட்டு காலையில் மூலவர் அங்காள அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதை அடுத்து உற்சவர் அங்காளம்மனுக்கு பலவித மலர்களால் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.


தொடர்ந்து சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய அங்காளம்மன், அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் மயானத்தை வந்தடைந்தார். மயானத்தில் பக்தர்கள் கொழுக்கட்டை சுண்டல் பலவித தானிய வகைகள் கொண்டு வந்து கும்பலாக வைத்திருந்தனர். மயானத்தில் அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை உள்ளிட்ட அறங்காவலர்கள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் செய்து மயானக் கொள்ளை விடும் நிகழ்ச்சி நடைபெற்றது .


சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதே இந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியாகும். சிவனின் கையில் உள்ள பிரம்ம கபாலம் விலகிச்செல்லாமல் சிவனுக்கு அளிக்கும் உணவை உட்கொண்டு வருவதால், விஷ்ணுவின் ஆலோசனையின் படி பார்வதி தேவி மூன்று வகையான உணவுகளை சமைத்து குவளையாக கபாலத்திற்கு கொடுத்தார். மூன்றாவது குவளையை கீழே போட்டுவிட, அப்போது சிவனின் கையில் இருந்த பிரம்ம கபாலம் உணவை எடுக்க தரையில் இறங்கியபோது ஆக்ரோஷம் கொண்ட பார்வதி தன் கால்களால் பிரம்ம கபாலத்தை நசுக்கி தன் காலடியில் வைத்துக்கொண்டார். இந்த நிகழ்வின் நினைவுப்படுத்தும் வகையில் ஆண்டுதோறுத் மயானக்கொள்ளை விழா நடைபெற்று வருகிறது


இந்த விழாவில் தமிழகம், ஆந்திரா, பாண்டிச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட பகுதியில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சக்திவேல், அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை அறங்காவலர்கள் சுரேஷ், மதியழகன், பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம் ஆகியோர் செய்திருந்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News