பழனி ஜன.–
பழனி முருகன் கோவில் தைப்பூசம் திருவிழா பெரிய நாயகி அம்மன் கோவிலில் இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தமிழ் கடவுள் முருகப்பெருமான் ஆறுபடை வீடுகளில் குடிகொண்டுள்ளார். அதில் பழனி 3–ம் படை வீடாகும். பழனியில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூசம் திருவிழா சிறப்பானதாகும். இத்திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இத்திருவிழாவின் முக்கிய அம்சமே பக்தர்கள் பல நூறு மையில் பாதயாத்திரையாகவே காவடிகளை தூக்கிக் கொண்டும், மேளதாளம் முழங்க ஆடியும், பாடியும், பாத யாத்திரையாக வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்து விட்டு செல்வார்கள்.
ஏற்கனவே பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே இலட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சென்று விட்டனர். தற்பொழுதும் பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து வந்த வண்ணம் உள்ளனர். பழனி தைப்பூசம் திருவிழா இன்று ஜனவரி 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, வரும் பிப்ரவரி 4ஆம் தேதி வரை நடைபெறும். ஒவ்வொரு நாளும் முருகப்பெருமான் ரத வீதிகளில் வெள்ளி ஆட்டுக்கடா, வெள்ளி காமதேனு, தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
தைப்பூச திருத்தேரோட்டம்:
இதில் 6ஆம் நாள் விழாவான ஜனவரி 31ஆம் தேதி, முருகன் வள்ளி தெய்வானை ஆகியோருக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அன்று இரவு மணகோளத்தில் வெள்ளித்தேரில் முருகன் வள்ளி தெய்வானை ஆகியோர் உலா வரும் காட்சி நடைபெறுகிறது. பிப்ரவரி 1ஆம் தேதி தைப்பூச திருவிழா திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. முன்னதாக அன்று காலை 5 மணிக்கு சண்முக நதியில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், தீர்த்தம் கொடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அன்று மாலை 4 மணிக்கு பழனி பெரியநாயகி அம்மன் கோவில் முன்பு தைப்பூச திருத்தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பிப்ரவரி 4ஆம் தேதி இரவு 7 மணிக்கு தெப்பதேரோட்டம் நடைபெறுகிறது. மேலும் தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு, பழனி கோவில் சார்பில் ஜனவரி 26 ஆம் தேதி முதல், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அதன்படி ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோவில் அருகில் பக்தர்கள் ஓய்வு கூடத்தில் தினமும் 14,000 பேர்களுக்கும், பழனி அருகே உள்ள கொங்கூர் பக்தர்கள் ஓய்வு கூடத்தில், தினமும் 6000 பேர் என ஒவ்வொரு நாளும் 20 ஆயிரம் பக்தர்களுக்கு காலை முதல் இரவு வரை அன்னதானம் வழங்கப்படப்படுகிறது. தைப்பூச திருவிழா அழைப்பிதழ் உபயோதாரர் பழனி கந்தவிலாஸ் உரிமையாளர் என் செல்வகுமார் ஆவார்.
அரோகரா கோஷம்:
இன்று பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில், காலை 9 மணிக்குமேல் தைப்பூச கொடியேற்ற விழாநிகழ்ச்சிகள் தொடங்கியது. கோவிலின் தங்க கொடிக்கட்டி மண்டபத்தில் புனித கலசங்கள் வைத்து கொடி பூஜை தொடங்கியது. கோவில் குருக்கள்கள் வேத மந்திரங்கள் முழங்க, இன்று காலை 10 மணிக்கு, மீன லக்னத்தில் வேலும், சேவலும், மயிலும், சந்திரரும், சூரியரும், மணியும் பொறித்த மஞ்சள் நிற கொடியேற்றப்பட்டது. அப்பொழுது முருக பக்தர்கள், வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா, ஞானவேல் முருகனுக்கு அரோகரா, என்று பக்தி பெருக்கில் கோஷம் எழுப்பினர்.
அதன் பின்பு கொடிக்கட்டி மண்டபத்தில் வள்ளி தெய்வானையுடன் வீற்றிருந்த முருகப்பெருமானுக்கு, சிறப்பு தீப ஆராதனை காட்டப்பட்டது. பின்பு பக்தர்களுக்கு திருநீர் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ், அறங்காவலர் குழு தலைவர் கே.எம் சுப்பிரமணியன், அறங்காவலர்கள் தனசேகர், பாலசுப்பிரமணியன், ஜி.ஆர். பாலசுப்ரமணியம், அன்னபூரணி, உதவி ஆணையர் லட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.
-