மாஸ்கோ: பிரதமர் நரேந்திர மோடி சமச்சீரான மனநிலை கொண்ட புத்திசாலியான தலைவர் என்று ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு தெரிவித்தார்.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு எதிராக இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 50 சதவீத வரி விதித்துள்ளார். இதனால் இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் அண்மையில் பேசிய ட்ரம்ப், “ரஷ்யாவிடம் இருந்து இந்தியாவும் சீனாவும் தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது, ரஷ்யாவின் உக்ரைன் போருக்கு முக்கிய நிதி ஆதாரமாக உள்ளது” என்றும் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் ரஷ்யாவின் சோச்சி நகரில் ஒரு கலந்துரையாடல் கூட்டத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பேசியதாவது: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வது முற்றிலும் பொருளாதார நலனுக்கானது. அதில் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை. நமது கச்சா எண்ணெயை இந்தியா வாங்க மறுத்தால் அந்நாட்டுக்கு சில இழப்புகள் ஏற்படும்.
இந்திய மக்கள், அரசியல் தலைமை எடுக்கும் முடிவுகளை உன்னிப்பாக கண்காணிப்பார்கள். யாருக்கு முன்பாகவும் எந்த அவமானத்தையும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். பிரதமர் மோடியை நான் நன்கு அறிவேன்; அவர் ஒருபோதும் தவறான முடிவை எடுக்க மாட்டார். அமெரிக்க வரிவிதிப்பால் இந்தியாவுக்கு இழப்பு ஏற்படுகிறது. இது, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதன் மூலம் ஈடு செய்யப்பட்டு விடும். மேலும் இறையாண்மை கொண்டநாடு என்ற கவுரவத்தை இந்தியா பெறும். இந்தியாவும் ரஷ்யாவும் சிறப்புமிக்க உறவை பகிர்ந்து கொள்கின்றன. கடந்த காலங்களிலும் இந்தியாவுடன் நமக்கு எவ்வித பிரச்சினையோ,பதற்றமோ இருந்ததில்லை.
பிரதமர் மோடி எனது நம்பிக்கைக்குரிய நண்பர். அவர் சமச்சீரான மனநிலை கொண்ட புத்திசாலியான தலைவர். தேசநலனுக்காக பாடுபடக்கூடியவர். இந்தியாவிடம் இருந்து கூடுதலாக வேளாண் பொருட்கள் மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்து வர்த்தகப் பற்றாக்குறையை ரஷ்யா குறைக்கும்.
வர்த்தக கூட்டாளிகள் மீதான அமெரிக்காவின் அதிக வரிவிதிப்பு, உலகளாவிய பணவீக்கத்தை அதிகரிக்கும். மேலும் அமெரிக்க ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதங்களை அதிகமாக பராமரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இவ்வாறு புதின் பேசினார்.