புதுச்சேரியில் 4 தொகுதிகளில் கூட வெல்ல முடியாது” - அமித் ஷாவுக்கு நாராயணசாமி பதில்

புதுச்சேரியில் 4 தொகுதிகளில் கூட வெல்ல முடியாது” - அமித் ஷாவுக்கு நாராயணசாமி பதில்


புதுச்சேரி மாநிலத்தில் 24 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றிபெறும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா காரைக்கால் கூட்டத்தில் தெரிவித்திருந்த நிலையில், “4 தொகுதிகளில் கூட என்டிஏ கூட்டணி வெற்றிபெற முடியாது” என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி கூறியதாவது: காரைக்கால் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நாராயணசாமி முதல்வராக இருந்த போது ஊழலில் சிக்கியிருந்ததாகவும் ரூ. 15 ஆயிரம் கோடி ஊழல் புரிந்ததாகவும் ஏடிஎம் மெஷின்போல் செயல்பட்டு காங்கிரஸ் தலைமைக்கு நிதி கொடுத்ததாகவும் பேசிச் சென்றார் .


மத்திய அரசு மானியம் குறைவாகத்தான் தந்தது. ஆண்டுக்கு ரூ. 2,200 கோடிதான் மத்திய அரசு தந்தது. இப்படியிருக்க எப்படி ஊழல் நடந்திருக்க முடியும்? காங்கிரஸ் தலைமைக்கு ஏடிஎம் போல் நிதி கொடுத்தாக கூறியது அபாண்டமான குற்றச்சாட்டு. இதெற்கெல்லாம் அமித் ஷா ஆதாரத்தை காட்ட வேண்டும். ஆதாரமில்லாமல் அவர் அப்படிப் பேசியது வேதனை தருகிறது.


யார் ஊழல் செய்தார்கள்- ஊழல் செய்கிறார்கள் என்பது மக்களுக்குத் தெரியும். தற்போது என்.ஆர்.காங்கிரஸ் - பாஜ ஆட்சி கடந்த ஐந்தாண்டுகளாக நடக்கிறது. கடந்த 2021 தேர்தலில், “பெஸ்ட் புதுச்சேரியாகும்” என பிரதமர் மோடி பேசினார். அது போல் நடந்துள்ளதா... ஒரு தொழிற்சாலையாவது கொண்டு வந்தார்களா என கேள்வி எழுப்புகிறேன்.


ஐந்தாண்டு கால சாதனைகளைச் சொல்லிவிட்டு இனி ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என மக்களிடம் சொல்லவேண்டும். எச்சாதனையும் செய்யாததால் மக்களிடம் தங்கள் சாதனை பற்றி அமித் ஷா பேசவில்லை. போலி மருந்து வழக்கில் சிக்கியுள்ள பேரவைத் தலைவர் செல்வத்தையும், தனதுசொத்துகளை காப்பாற்ற பாஜக-வில் சேர்ந்த நமச்சிவாயத்தையும் மேடையில் வைத்துக் கொண்டு அமித் ஷா இப்படிப்பேசியுள்ளார். அவருக்கு சவால் விடுகிறேன்.


புதுச்சேரி அரசோ, சிபிஐ விசாரணையோ, அமலாக்கத் துறை விசாரணையோ, வருமானவரித் துறை விசாரணையோ எதற்கும் நான் தயார். ஊழல் குற்றச்சாட்டு ஒன்றை நிரூபித்தாலும் அரசியலை விட்டு விலகத் தயார். நிரூபிக்காவிட்டால் அமித் ஷா பதவி விலகவேண்டும். பிரதமருக்கு அடுத்த நிலையிலுள்ள அமித் ஷா, மூன்றாம் தர அரசியல்வாதியல்ல.


தவறான தகவல்களை காங்கிரஸ் மீது கூறியதுகண்டிக்கத்தக்கது. சனீஸ்வரபகவான் கோயிலுக்குப் பக்கத்திலேயே மேடை போட்டு பொய் குற்றச்சாட்டை அமித் ஷா சொல்லியுள்ளார். என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக 24 இடங்களைப் பெறுவோம் எனக் கூறியுள்ளார் அமித்ஷா. ஆனால் 4 இடங்கள் கூட அவர்களால் வெல்ல முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%