யார் தான் கேட்பது?

யார் தான் கேட்பது?



நகரப் பகுதிக்குள் இருப்பதால், அந்த ரேசன் கடைக்கு மட்டும் பொருட்கள் வாங்க எப்போதும் கூட்டமாகவே இருக்கும். 

சமீப காலமாக இந்த ரேசன் கடையில் வேலை செய்யும் பணியாளர் காலதாமதமாகவே வந்து கடையை திறப்பது வழக்கமாகிவிட்டது . 

அன்றும் அப்படியே காலை மணி 10-30 ஆகியும் கடை திறக்கப்படாமலேயே பூட்டியே இருந்தது. ரேசன் பொருட்களை எடுத்துக் கொடுக்கும் பணியாளர் கூட நேரத்தோடு வந்து விட்டார். 

ரேசன் பொருட்கள் வாங்குவதற்கு பத்து பனிரெண்டு பேர் கடை வாசலில் காத்து நின்றனர். 

அப்போது அங்கிருந்த ஒருவர் இந்த ஆளுக்கு இதே வேலையாப் போச்சு! 

ரேசன் வாங்குற நம்மளையெல்லாம் பிச்சைக்காரனா நினைக்கிறாரு போல... அவர் இஷ்டத்துக்கு கடையை திறக்கறதும், ‌முன்கூட்டியே மூடிட்டு போறதுமா இருக்காரு! யாரும் கேள்வி கேட்காததனால அலட்சியமா நடந்துகிறாரு...! 

இன்னைக்கு நானே இதுக்கொரு முடிவு கட்டுறேன் என்று குரலை உயர்த்திப் பேசினார். 

இன்னொருவர் எனக்கு பொங்கலுக்கு புடவை, வேட்டியே கொடுக்கல... எல்லா குடும்ப அட்டைக்கும் புடவை வேட்டி கொடுப்போம்னு அரசாங்கம் சொன்னுது... ஆனா இங்க மட்டும் எனக்கு புடவை வேட்டியே கொடுக்கல.... வரட்டும்.. இன்னைக்கு இதை கேட்டுட வேண்டியதுதான் என்று புலம்பினார். 

ஆமாம்... ஆமாம் எனக்கு புடவை, வேட்டி கொடுத்துட்டதா என் போனுக்கு மெசேஜ் வந்துது... எனக்கு புடவை வேட்டி கொடுக்காமலேயே எப்படி மெசேஜ் அனுப்பலாம்...! எதை எடுத்தாலும் ஊழலாவே இருக்கு! 

அரசாங்கம் மக்களுக்கு நல்லது செய்யனும்னு நினைச்சாலும் அதிகாரிங்க செய்யவுட மாட்டாங்க போல தெரியுது! என்றார்.

இல்ல...இல்ல...இதைப் பத்தி கலெக்டர் கிட்ட நேரடியா புகார் செய்ய வேண்டியதுதான்...

வாயை மூடிட்டு இருந்தா எதுவும் இங்க நடக்காது போல தெரியுது என்று ஆவேசமாகப் பேசினார்.

வாங்குற பொருள் எல்லாமும் எடை கம்மியாவே இருக்கு!

இப்படியெல்லாம் எடையை குறைச்சு கொடுத்து சம்பாதிச்சிட்டு போறதுக்கு எப்படித்தான் மனசு வருதுன்னு தெரியல... என்று கட்டம் போட்ட சட்டைக்காரர் சொன்னதைக் கேட்டு வெள்ளைச் சட்டைக்காரர், ஆண்டவன்னு ஒருத்தன் இருக்கான்... இதுக்கெல்லாம் சரியான தண்டனையைக் கொடுப்பான் என்று சத்தமாகப் பேசினார்.

அரசியல்வாதிங்ககிட்ட இதைப் பத்தி சொன்னாலும், இலவசமாத் தானே கொடுக்கறாங்க... கிடைக்கிறதை வாங்கி கிட்டு போக வேண்டியதுதான்.. என்று சொல்றாங்க.. என்றபடி அந்த நபர் இருமினார். 

அரசாங்கத்துல வேலை செய்யறவங்க வச்சது தான் சட்டமா போயிடுச்சு! இதையெல்லாம் தட்டிக் கேட்கறதுக்கு இளைஞர்கள்தான் வரனும்...எங்க அது நடக்கும்! அவங்கதான் நடிகருங்கள தோள்ல தூக்கி வச்சுகிட்டு ஆடுறாங்கல... என்று சொல்லிக் கொண்டே அந்த நபர் தலையில் அடித்துக் கொண்டார்..

எது எப்படி இருந்தாலும் இன்னைக்கு இந்த ரேசன் கடை பிரச்சினையை நேரில கேட்டுட வேண்டியதுதான் என்றபடி வெற்றிலைப் பாக்கை மென்றவாறு நின்றார் அந்த முண்டாசு கட்டியிருந்தவர்.

சரியாக மணி 10-35 இருக்கும். இரு சக்கர வாகனத்தில் ஆடம்பரமாக வந்து இறங்கினார் அந்த ரேசன் கடையில் பில் போடும் வேலைப் பார்க்கும் பணியாளர் பரமசிவம்.

தான் ஓட்டிவந்த வாகனத்தை கடையின் பக்கத்தில் நிறுத்தி வைத்துவிட்டு, தனது கைப்பையில் இருந்து கடை சாவியை எடுத்து அங்கு நின்றிருந்த உதவியாளரிடம் கொடுத்தார்.

உதவியாளர் வேகமாக ஓடிச் சென்று கடையை திறந்து வைத்தார்.

பில் போடுபவர் தனது இருக்கையில் அமர்ந்து தனது பணியை துவக்கினார்.

கடைதிறப்பதற்கு முன்பாக ரேசன் கடையில் நடக்கும் குறைகளைப் பேசியவர்கள், அனைவரும் தனக்கான ரேசன் பொருட்களை வாங்குவதற்கு தயாராக அமைதியாக வரிசையில் நின்றனர்......!

---------------------------------


ஆக்கம்:

தமிழ்ச் செம்மல் 

நன்னிலம் இளங்கோவன்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%