முகம்

முகம்



டைரக்டர் கோகுல்ராஜா, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு தனது கிராமத்துக்குள் காலடி வைத்த போது, பள்ளி வாசலின் சிமெண்டு வாசனையே அவரை சிறுவயசுக்குத் திரும்பக் கொண்டு போனது.


தன் புதிய படத்தில் நடிக்க ஒரு சிறுவன் வேண்டும். “ஒப்பனையில்லா ஒரிஜினல் முகம்” . ஏனென்றால் அதுதான் கதையின் ஆணி வேர்.


“நான் படிச்ச இந்தப் பள்ளியிலிருந்து யாராவது கிடைச்சா மனசுக்கு நிறைவா இருக்கும்"என்று தன் ஆசையை ஹெட்மாஸ்டரிடம் சொல்லி விட்டு, வகுப்புகள் ஒவ்வொன்றாக பார்வையிட்டார்.

அனைத்து முகங்களிலும் ஒரே மாதிரியான பயிற்சி செய்யப்பட்ட சிரிப்பு. அழகான முடி. பொலிவான கண்கள். ஆனால்… அந்தச் செயற்கை அலங்காரங்கள் எதுவுமே அவர் மனசைத் தொடவில்லை.


அப்போது, பள்ளியின் பின்புறம், சாத்தப்பட்டிருந்த ஒரு வகுப்பறையிலிருந்து, ஒரு சிறுவனின் கத்தல் கேட்டது.


“அது யார்?” கேட்டபடி டைரக்டர் நின்றார்.


ஹெட்மாஸ்டர் தடுமாறினார். ''வேண்டாம் சார்... அந்தப் பையன் சரிப்பட்டு வர மாட்டான் சார்… அதனாலதான் உங்ககிட்ட காட்டாம பூட்டி வெச்சிட்டோம்.”


“ஏன்?” கோகுல்ராஜாவின் குரல் மெல்லியதாய் இருந்தாலும், அதில் காட்டமும் இருந்தது.  


"ப்ளீஸ் ஒப்பன் தி டோர்... நான் அவனைப் பார்க்கணும்" கத்தினார் டைரக்டர்.


வகுப்பின் கதவு திறக்கப்பட்டது.


உள்ளே நின்றிருந்த பையன் மெதுவாக வெளியே வந்தான்.

முகமெங்கும் தீக்காயத் தழும்புகள்.

உதடுகள் கோணல் மாணலாய்.

தலையிலே அங்கங்கே திட்டுத் திட்டாய் வெற்றிடங்கள்.


அவனைப் பார்த்ததும் மற்ற சிறுவர்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள்.


ஒரு நிமிடம் மயான அமைதி.


அடுத்த கணம் டைரக்டர் கை தட்டினார்.


“இவன்தான்.... இவனேதான்... நான் எதிர்பாக்கும் பையன்!"


அனைவரும் அதிர்ந்து பார்த்தார்கள்.


“என் கதையில வரும் பையனுக்கு தீ விபத்து நடக்கும்....அதுக்கப்புறம் அவன் முகம் இப்படித்தான் இருக்கும்... இதை எப்படிடா மேக்கப்ல கொண்டு வர்றதுன்னு யோசிச்சுட்டிருந்தேன்…”


அவர் பையனுக்கு அருகில் சென்று நின்றார்.


“இப்போ மேக்கப் தேவையே இல்லை!

உண்மை இதுதான்....ரியாலிட்டி இதுதான்.”


பையன் மெதுவாக தலை நிமிர்ந்தான்.


அன்றைய தினம், டைரக்டர் வருகைக்காகவே அலங்கார மேக்கப் போட்டு வந்த மற்ற எல்லா சிறுவர்களின் முகத்திலும் ஈயாடவில்லை.


(முற்றும்)


முகில் தினகரன்

கோயமுத்தூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%