வளர்மதி கோலத்தைப் போட்டுவிட்டு உள்ளே வந்தாள். போனவாரம் பேன்சி ஸ்டோரில் வாங்கிய பிளாஸ்டிக் குட்டி குட்டிக் கிண்ணங்களில் கலர் பொடிகளை கலந்து வைத்துக் கொண்டு மீண்டும் வாசலுக்கு வந்தாள். அதற்குள் ஹரி உள்ளே சென்றுவிட
"என்னங்க, எங்கப் போனீங்க? ஒரு எடமா ஒக்காருங்களேன். சொன்னாப் புரியாதா?" சற்று குரலை உயர்த்திக் கூப்பிட்டாள்.
"மனுஷனுக்கு எதுவும் வராதா? எதுக்குக் காலங்காத்தால கத்திக்கிட்டு இருக்க?" என்றான்.
"சரி சரி, கோபத்துக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல. "வாங்க இந்த இலைக்கெல்லாம் இந்தப் பச்சை அடிங்க" என்றாள்.
"என்னது நா கலர் அடிக்கணுமா? அதெல்லாம் முடியாது. தூக்கத்துல எழுப்பி ஒக்கார வைக்கிற. நா காவல் காக்குறதே பெரிசு. என்னாலல்லாம் முடியாது" என்றான்.
அவ்வளவுதான். கொண கொணவென்று ஏதே முனகிக்கொண்டே வேலை செய்தாள்.
வாசல் அடைத்து கோலப் பொடியைக் கொட்டி, கலர் கலராய் போட்டு முடித்து விடுவாள்.
கோணல் மானல் பற்றி குறை சொன்னால் அவ்வளவுதான் தொலைந்தான்.
ஒவ்வொரு பக்கம் ஒவ்வொரு மாதிரி இருக்கும். மார்கழி வந்தாலே வீடு திம்லோகப்படும்.
காலையில் காபிப் போடுவதும், குக்கர் வைப்பதும் இவனுக்கு இடப்பட்ட வேலை.
சாம்பாரோ, ரசமோ, பொரியலோ, கூட்டோ வளர்மதி மனசு வச்சால்தான்!
கோலம் போட்டால் போதுமா, எட்டு பத்து ஆங்கிலில் போட்டோ எடுத்து, இன்ஸ்டா, ஃபேஸ்புக், வாட்சப், ஸ்டேடஸில் வைத்து லைக்ஸ் கமெண்ட்ஸ் பார்த்து, மொபைலும் கையுமாய் திரிந்து தேவைக்கு அதிகமாகவே பாராட்டுக்கள் பெற்றால் சமையல் உண்டு.
யாரேனும் அப்படி இருந்திருக்கலாம், இப்படி போட்டிருக்கலாம்னு சொல்லப் போக அவ்வளவுதான்.
என்னென்னிக்கு நடந்ததையோ இன்னிக்கு சொல்லிக் கத்த ஆரம்பிப்பாள்.
எய்தவர் யாரோ? ஹரிதான் பாவம்.
இந்தக் கதை வருடந்தோறும் மார்கழியில் ஆரம்பித்து மாட்டுப் பொங்கல் வரை நடக்கும்.
நாலு மணிக்கும், மூனு மணிக்கும் எழுந்தது ஆபீஸில் அப்படியே கண்ணைக்கட்டும். என்ன செய்வான் பாவம்?
"சொல்லுமா, ம்ம்ம், சூப்பரா போடறேம்மா. ஒம் பொண்ணாச்சே! போடாமல் இருப்பேனா?" என்று அம்மாவிடம் பீலா வேறு.
தெருவில் போவோர் வருவோரையும் விட்டு வைப்பதில்லை. அவர்களும் சூப்பரான, நேர்மறை கமெண்ட்ஸ் மட்டுமே சொல்ல அனுமதி உண்டு.
ஹரிக்கு இது சலித்துப் போனது. போதாக்குறைக்கு கோலம் கோலாகலம் முடிந்ததும் குளித்து முழு மேக்கப்புடன் தெருக்கோடிக் கோவிலுக்குப் படையெடுப்பு வேறு. தொன்னைப் பொங்கலுடன் ஏழு மணிக்கு நாலு பேருடன் அங்கலாய்த்துக் கொண்டு வருவாள்.
இருந்தாலும் மனைவியை மிகவும் நேசித்தான். எட்டு மணி வரைக்கும் தூங்காமல் இந்த மாதம் முழுவதும் சுறுசுறுப்பாகவும் சந்தோஷமாகவும் இருப்பது அவள் ஆரோக்கியமாகவும் இருக்கிறாள் என்பதை உணர்த்தியது.
மற்ற நாட்களில்வீட்டையும் விருந்தினரையும் கவனிப்பதில் அவளுக்கு நிகர் அவள்தான். அலுவலகத்தில் மதிய உணவு இடைவேளையில் வளர்மதியை நினைத்து தனக்குத் தானே ரசித்துச் சிரித்துக் கொண்டான்.
படித்து முடித்து நல்ல வேலையில் இருந்தாலும் (ஒர்க் ஃப்ரம் ஹோம்தானே!) குடும்பத்தையும் கவனித்துக் கொள்வதால் மாமனார் மாமியாருக்கும் செல்ல மருமகள்தான். கிராமத்திலிருந்து அவர்கள் வரும்போதெல்லாம் நன்கு கவனித்துக் கொள்வாள்.
பாடினாலோ, கோலம் போட்டாலோ, ஓவியம் வரைந்தாலோ கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும். இருந்தாலும் அடுத்தவர் பாராட்டு அவள் மனம் நிறைக்கும். நாமும் பாராட்டுவோம்.
வி.பிரபாவதி
மடிப்பாக்கம்