வாசகர் கடிதம் (P. கணபதி) 11.10.25

வாசகர் கடிதம் (P. கணபதி) 11.10.25


வாசக உறவுகளுக்கு வணக்கம்.


ஏழு போர்களை நிறுத்தியுள்ளேன். எனக்கு நொபேல் பரிசு வழங்கப்படவேண்டும் என்று வாய் ஓயாமல் சொல்லிவந்தார் ட்ரம்ப். கடந்த ஜனவரி 31 க்குள் வந்த நொபேல் பரிந்துரைகள் 339 ல் ட்ரம்ப் பெயர் இல்லையாம். அவரை இலவு காத்த கிளியாக ஆக்கிவிட்டது நொபேல் கமிட்டி. அப்பரிசு மச்சாடோ என்ற வெனிசுலா பெண்மணிக்கு வழங்கப்பட்டுள்ளது. அமரிக்க வெள்ளை மாளிகை ட்ரம்புக்கு சமாதான அதிபர் Peace President என்ற அடைமொழியைக் கொடுத்துள்ளதாம். ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்பது போல.


ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இந்தியா வந்துள்ளார். ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் அமைய வாய்ப்பு என்பது செய்தி. நல்ல விஷயம் தான். அதுவும் பாக். தாக்குதலை ஒட்டி ஆப்கானிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ள இந்த நேரத்தில் ஆப்கானிஸ்தான் உறவு காலத்தின் சமிக்ஜையன்றி வேறென்ன? 


கோவையில் ஜி. டி. நாயுடு பாலத்தில் பயணிக்கும் வாகன ஒட்டிகளின் எச்சரிக்கையும், ஆலோசனைகளும் அரசின் தீவிர பரிசீலனைக்கும், செயல்பாட்டுக்கும் அவசியமானவை. அசம்பாவிதங்கள் நிகழ்ந்தபின் வருந்தி பயனில்லை. எப்போதுமே prevention is better than cure அல்லவா? 


காடை இறைச்சியில் இத்தனை சத்துக்களா என்ற கட்டுரையைப் படித்தேன். இறைச்சியின் நன்மைகளில் மனம் பதியவில்லை. அந்த சின்னஞ்சிறிய உயிரினத்தின் மீது இரக்கமே மேலிட்டது. மனிதனின் நாக்கு மருந்தில்லா சீக்கு. 


செல் போனால் பக்கவாதம் வரும் என்று ஒரு செய்தி. செல் போனைப் பழிக்காதவரும் இல்லை. அதை தம்மிடமிருந்து ஒழிக்காதவரும் இல்லை. 


விஜய் கரூர் வருவதும், வராததும் பற்றிய சர்ச்சைக்கு சுவையுட்டுகிறார்கள் இரு தலைவர்கள். ஒருவர் வந்தால் உயிருக்கு ஆபத்து என்கிறார். மற்றொருவர் தாராளமாக வரலாமே என்கிறார். இருவருமே ஒரு கூட்டுப் பறவைகள். 


கிட்னி முறைகேடு வழக்கில் தமிழக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்திருப்பது பாராட்டற்குரியது. 


அடுத்து வரவேண்டிய அருள் தரும் தெய்வம் இதழை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். அது அறிவுப் பசிக்கான ஆன்மிகப் பந்தி. அதைப் பார்த்தால் பசி ஏறும். படித்தால் ருசி மீறும்.

இது அனுபவக் கூற்று. எனவே ஆன்மிகத்தின் தெளிவை ரசிக்க வேண்டுமா தெய்வம் இதழைத் தவறாமல் படியுங்கள். கள்ளம் தீரும். உள்ளம் உயரும். இது சத்தியம். 


மீண்டும் நாளை சந்திப்போம். நன்றி.



P. கணபதி 

பாளையங்கோட்டை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%