வேளச்சேரி மகான் என்று போற்றப்படும் ஶ்ரீமத் சிதம்பர பெரிய சுவாமிகள், 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு பெரும் சித்தர் ஆவார்.
திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள ஆரியம்பாக்கம் கிராமத்தில் முனியப்பன் பெரியநாயகி தம்பதியருக்கு மகனாகப் அவதரித்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் வீரசாமி. வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், சிறு வயதிலேயே ஆன்மீகத் தேடலால் ஈர்க்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேறினார். இவரது குரு குழந்தைவேல் சுவாமிகள் ஆவார்.
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு, வேளச்சேரி (அக்காலத்தில் வேதஸ்ரேணி) வந்தடைந்த சுவாமிகள், அங்குள்ள தண்டீஸ்வரர் சிவ ஆலயத்தை புனரமைப்பதில் முக்கியப் பங்கு வகித்தார்.
கோயில் திருப்பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு ஒருமுறை சம்பளம் தர பணமில்லாமல் சிவனை நினைத்து தொழிலாளிகளுக்கு அவர் வழங்கிய திருநீறு (விபூதி), பணமாக மாறியதாக வரலாறு கூறுகிறது.
இறைவியான ஸ்ரீ கருணாம்பிகை ஒரு வயதான மூதாட்டி வடிவில் வந்து அவருக்கு இத்திருப்பணியைச் செய்ய ஆணையிட்டதாக நம்பப்படுகிறது.
பசிக்கும் போது, யாசகம் பெற்று உண்ணும் பழக்கமுடைய சுவாமிகள்... ஒருமுறை உணவு வேண்டி ஒரு வீட்டிற்குச் சென்றபோது, அங்கிருந்த பெண்மணி உணவு தயாராக இல்லை என்று பொய் கூறியுள்ளார். பசியுடன் சுவாமிகள் தண்டீஸ்வரர் கோயில் சென்று தங்கிவிட... அப்பெண்மணி ,குடும்பத்திற்கு உணவு பரிமாற எண்ணி பாத்திரங்களைத் திறந்த போது,அனைத்தும் காலியாக இருந்துள்ளன. பின்னர் சுவாமியை சந்தித்து மன்னிப்பு வேண்டிட... வீட்டிற்கு போ உணவு இருக்கும் என அசீர்வதிக்க, அதுபோல் மாயமாகி இருந்த உணவு, மறுபடியும் பானைகளில் இருந்துள்ளன.
சுவாமிகள், ஜீவ சமாதியடையப் போகும் நாளை அறிவித்து அதன்படி சமாதிக் குழியையும் தயார் செய்தார். டிசம்பர் 4, 1858 (கார்த்திகை மாதம் பதினாறாம் தேதி, சனிக்கிழமை விசாக நட்சத்திரத்தில்) காலை 9:45 மணியளவில் சுவாமிகள் , ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் சமாதிக் குழிக்குள் சென்று அமர்ந்தார். அடுத்த சில நிமிடங்களில் அரசாங்க மருத்துவர் சோதனை செய்ய ...சுவாமிகளின் மூச்சு நின்றிருந்தது. பிறகு சமாதி மூடப்பட்டது. அந்த சமாதி மேல், அவரின் சிலையை வைத்து மக்கள் வழிபட,பின்னர் ஆலயம் எழுப்பப்பட்டது. அவர் சமாதி அடைந்த, கார்த்திகை மாதம் விசாக நட்சத்திரத்தில் ஆண்டு தோறும், குருபூஜை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ‘சிந்தனைக்கெட்டாத சிவரூபத்தை கடின உழைப்பால் காண்’ எனும் அவரது வாழ்வுரையை ஏற்று, பலர் அங்கு வந்து தரிசிக்கின்றனர்.
இவரது ஜீவ சமாதி சென்னை வேளச்சேரி மெயின் ரோட்டில், காந்தி சாலை மற்றும் IIT மேற்கு வாயிலுக்கு இடையே அமைந்துள்ளது. வியாழக்கிழமை மற்றும் பௌர்ணமி தினங்களில் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
ஹரி ஓம் மஹா காளி !
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*