"புகைப்படத்தில் இருக்கும் பெண்"

"புகைப்படத்தில் இருக்கும் பெண்"


       (ஒரு பக்கக் கதை)


அந்த வீட்டுக்குள் நுழைந்த நாள் முதலாகவே மாலாவுக்குள் ஏதோவொன்று நெருடலாகவே தோன்றியது.


ஹாலின் நடுவில், மங்கலான விளக்கின் கீழ், ஒரு பழைய புகைப்படம்.


அதில் சாம்பல் நிறச் சேலையில்,

உயிரற்ற கண்களோடு ஒரு பெண். 


“இதை எடுத்திடலாமா?” மாலா கேட்டாள்.


“அவசியமில்லைங்க... இது இந்த வீட்டோட சேர்ந்து வந்தது... அதுவுமில்லாம படத்தைச் சுவரோடு சேர்த்து ஃபிக்ஸ் பண்ணி வெச்சிருக்காங்க... அதனால அத் பாட்டுக்கு இருந்திட்டுப் போகட்டும் விடுங்க!” என்று சொன்ன

புரோக்கர் குரலில் சிறு தடுமாற்றம்.


முதல் நாள் இரவு தூங்கும் போது

கண்ணாடி உடையும் சத்தம்.


ஓடி வந்து பார்த்தால் புகைப்படத்தின் கண்ணாடி மட்டும் உடைந்திருந்தது.


புகைப்படப் பெண்ணின் கண்கள்…

இப்போது இன்னும் அருகில்.


இரண்டாம் இரவு,

சமையலறையில் ஒரு பெண்ணின் காலடி ஓசை. மாலா சென்று பார்த்த போது அங்கே யாரும் இல்லை.


புகைப்படத்தில் அந்தப் பெண்ணின் கால்கள் முழுதாகத் தெரிந்தது.


மூன்றாம் இரவு, அரவிந்த் சொன்னான், "நேத்து ராத்திரி

அந்தப் போட்டோ பெண்... நம்ம படுக்கைக்கு பக்கத்துல நின்னு

நீ தூங்குறத பார்த்திட்டேயிருந்தா…”


அவன் முகத்தில் அதற்கான பயம் இல்லை. பதிலாய் ஏதோ ஆசை தெரிந்தது.


மறு நாள் இரவு, அரவிந்த் காணாமல் போனான்.


மாலா வீடு முழுவதும் தேடினாள். யார் யாருக்கோ கால் செய்து, " அரவிந்த் அங்க வந்திருக்காரா?"


அடுத்த நாள் காலை,

மாலா ஏதோவொரு எதிர்பார்ப்புடன் அந்தப் புகைப்படத்தை பார்த்தாள்.


இப்போது அந்தப் பெண்ணின் அருகில் அரவிந்த், புன்னகையோடு.


புகைப்படத்திற்குக் கீழே ஒரு காகிதம் கிடந்தது. மாலா எடுத்துப் படித்தாள்.


“இந்த வீட்டில் முதலில் ஆண்கள்.

பின்னர் பெண்கள். புகைப்படம் நிரம்பும் வரை.”


அந்த நிமிடம் மாலாவின் தோளில் ஒரு கை விழுந்தது.


காதருகே ஒரு மெல்லிய குரல், "புன்னகைக்கக் கத்துக்கோ… அடுத்தது நீ தான்.”


(முற்றும்)


முகில் தினகரன்

கோயமுத்தூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%